Tuesday, March 1, 2011

ஐம்பது ரூபாயும் ஜெராக்சும்


ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் சுரேசும் படம் பார்க்கலாம் என்று ஒரு திரையரங்கிற்குச் சென்றனர். ஆனால் இவர்களிடம் இருந்தது வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே. ஒரு டிக்கெட் விலை நாற்பது ரூபாய் என்றதும் எப்படி இருவரும் படம் பார்ப்பது  என்று சிந்தித்தனர். உடனே செல்வா " இந்த டிக்கெட்ட ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் ஆகிடும்ல , வா போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வரலாம்" என்றார்.

இதைக் கேட்ட சுரேஷ் ஆவலாக " சரி வா போலாம் " என்றார். உண்மையில் சுரேசும் செல்வா போன்ற ஒரு அதிபுத்திசாலி(?!). அதனால் ஒரே கோடி இவர்களை அடித்தாலும் இவர்களது அறிவுத் திறமையை இவர்கள் மெச்சிக்கொள்வர். இருவரும் ஜெராக்ஸ் எடுக்கலாம் என்று ஜெராக்ஸ் கடையை நோக்கிச் சென்றனர். ஆனால் கடைக்குச் செல்வதற்கு முன்னர் சுரேஷ் " டேய் , டிக்கெட் ஜெராக்ஸ் எடுக்கறதுக்குப் பதில் நம்ம கிட்ட இருக்குற ஐம்பது ரூபாய ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் விலை போக இருபது ரூபாய் மிச்சம் ஆகும்ல " என்றார்.

" இது நல்ல ஐடியாவா இருக்கே , ஆனா நம்ம பணத்த ஜெராக்ஸ் எடுக்கும் போது ஜெராக்ஸ் கடைக்காரர் நமக்குத் தெரியாம நம்ம பணத்த அதிகமா ஒரு ஜெராக்ஸ் எடுத்து ஒளிச்சு வச்சிட்டா நமக்கு ஐம்பது ரூபாய் நஷ்டம் ஆகிடும்ல அதனால தெரிஞ்ச கடைல போய்த் தான் எடுக்கணும்."

" அப்படின்னா எங்க மாமா கோபில கடை வச்சிருக்கார் , வா போய் எடுத்திட்டு வரலாம் " என்று கிளம்பியவர்கள் கோபி போவதற்கு இருவருக்கும் டிக்கெட் எடுக்க நாற்பது ரூபாய் செலவு ஆனதால் வீடு வருவதற்கு பணம் இல்லாமல் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

No comments: