Saturday, June 14, 2014

தூக்கம்!

செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.

நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கே தூங்குவதற்கென்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தபடியால் செல்வாவும் முதல் முறையாகத் தனி அறையில் தூங்க வேண்டியிருந்தது.

ஓரிரு நாட்கள் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் மூன்றாம்நாள் காலையில் அழுதுகொண்டே வெளியில் வந்தார். என்னவென்று விசாரித்ததில் கையில் அடிபட்டிருப்பதைக் காட்டி, கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

செல்வாவின் வீட்டிற்கு அழைத்து விசாரித்ததில் பெரும்பாலும் அவர் தனியாக உறங்குவதில்லை என்றும், கீழே விழாமல் இருக்க வேண்டுமானால் தரையில், பாய் போட்டு உறங்கச் சொல்லுமாறும் அறிவுறுத்தினார்கள்.

அதன்படி அன்று இரவு செல்வாவிற்கு ஒரு பாய் மற்றும் தலையணையைக் கொடுத்து ” இதுல படுத்துத் தூங்கனும் அப்பத்தான் அடி படாது,சரியா?” என்று கொடுத்தனுப்பினார் அவரது அத்தை. செல்வாவின் அறை மாடியில் இருந்ததால் அறைக்குச் சென்று பார்க்கவில்லை.

மேலும் இரண்டு நாட்கள் எந்தப் பிரச்னையுமின்றிக் கழிந்திருந்தன. மறுபடியும் அடுத்த நாள் அதே அழுகையுடன், கையைப் பிடித்தபடி வந்தார்.

”என்னாச்சு?”

“மறுபடியும் கைல அடிபட்ருச்சு!”

“எப்டி?”

“தூக்கத்துல கீழே விழுந்துட்டேன்”

“ பாய்ல தானே படுத்தே? அப்புறம் எப்படி அடிபடும்? பொய் சொல்றியா? “

கையப் பிடித்துப் பார்த்த அவரது அத்தைக்கும் அடிபட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

“மெத்தைல படுத்துக் கீழ விழுந்துட்டியா?”

“ இல்ல அத்த, பாய்லதான் படுத்தேன்”

”அது எப்டிடா பாய்ல இருந்து கீழே விழுந்தா இவ்ளோ பெரிய அடிபடும்? வா பாக்கலாம்”

இருவருமாக செல்வாவின் அறைக்குச் சென்று பார்த்தனர்.

அங்கே கட்டிலின் மீது மெத்தையும், மெத்தையின் மீது பாயும் போடப்பட்டிருந்தது.