Tuesday, March 1, 2011

அருண் + அருண் + செல்வா


சென்ற சனிக்கிழமை தினத்தன்று மொரீசியசில் இருந்து இந்தியா வந்திருக்கும் செல்வாவின் நண்பர் அருண் அவர்ளை சந்திக்கலாம் என்று சுற்றுலா விரும்பி அருண் , கார்த்திக்குமார் மற்றும் செல்வா ஆகியோர் முடிவு செய்தனர். சில பல காரணங்களால் கார்த்திக் வர இயலாமல் போனது. சரி என்று அருண் மற்றும் சுற்றுலா விரும்பி அருண் ஆகியோர் செல்வாவை கோவை வருமாறு அழைத்தனர்.

  செல்வாவும் காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் செல்வா கோவை சென்ற நேரம் 11.௦30. பின்னர் அவர்களிடையே நடந்து உரையாடல்கள்.

அருண் ( சீனியர் ) : ஏன் டா இவ்ளோ நேரம் ? 

செல்வா : தலை சீவ மறந்திட்டேன் , அதான் பாதிவரைக்கும் வந்திட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் தலை சீவிட்டு வந்தேன்.

அருண் (ஜூனியர் ): உனக்கென்ன பொண்ணா பாக்குறோம் , இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. என்று கூறிவிட்டு மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குள் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.அப்பொழுது அருண் ( சீனியர் ) அவர்கள் "வரும்போது ஏன் கால நொடிச்சு நொடிச்சு நடந்து வந்த "? 

செல்வா : காலுல முள் ஏறிடுச்சு, அதான் அண்ணா! "

அருண் : இதுதான் உங்களோட கேட்ட பழக்கம் , இதுவே ஒரு வெள்ளைகாரனுக்கு முள் ஏறினா காலுல முள்ள எத்திக்கிட்டேன் அப்படின்னு சொல்லுவான் , ஆனா நம்ம ஆளுக மட்டும் முள்வந்து இவுங்க மேல ஏறிடுச்சு அப்படின்னு சொல்லுவாங்க.

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?

அருண் (ஜூனியர் ): நீ இப்பத்தான் இப்படியா ? இல்ல எப்பவுமே இப்படியா ? .. என்று கூறிவிட்டு மூவரும் சாப்பிட அஞ்சப்பர் உணவகம் செல்லலாம் என்று முடிவு செய்து அருண் ( ஜூனியர் ) அவர்களது வண்டியில் முதலில் செல்வாவை அழைத்துக்கொண்டு அஞ்சப்பர் உணவகம் இருந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு," இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் , அங்க இரு , நான் போய் அண்ணன கூட்டிட்டு வந்திடறேன் " என்றவாறு கிளம்பினார். சிறிது நேரம் கழித்து வந்த இருவரும் செல்வாவை அஞ்சப்பர் உணவகத்தில் இல்லாததைக் கண்டு அவருக்கு அழைத்தனர். 

அருண் : செல்வா , எங்க இருக்க ? 

செல்வா : அங்கேதான் இருக்கேன் .

அருண் : அதான் எங்க ?

செல்வா : நீங்க இறக்கிவிட்ட இடத்துல .

அருண் : அங்க ஏன் நிக்குற , நான்தான் அஞ்சப்பருக்கு வர சொன்னேன்ல ..

செல்வா : நீங்கதானே , அஞ்சப்பர் வரும்னு சொன்னீங்க , அதான் நாம ஏன் வீணா நடக்கனும்னு இங்கே நின்னுட்டேன் , அஞ்சப்பர இன்னும் காணோம் ?!!!

அருண் : ஐயா சாமி , அப்படி சொன்னது தப்புத்தான் , அப்படியே நேரா வா .. ( இவனெல்லாம் வச்சிட்டு எப்படித்தான் )

பின்னர் மூவரும் அஞ்சப்பர் உணவகத்தில் உணவு வகைகளை ஆர்டர் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது செல்வாவிடம் என்ன வேண்டும் என்று கேட்ட உணவாக ஊழியர் செல்வா சொன்ன பதிலைக்கேட்டு சற்றே அதிர்ச்சியுற்றார். செல்வா தனக்கு நேராக இருந்த மீன்தொட்டியில் வளர்க்கப்பட்ட மீன் ஒன்றை வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அதிர்சிக்குக் காரணம்.

அருண் : மானத்த வாங்காத , அது அழகுக்காக வளர்க்குறது..

செல்வா : சரி வேற எதாச்சும் கொடுங்க .. அதே தொட்டியில் இருந்த வேறு கலர் மீனைக் காட்டினார்.

அருண் : ஐயோ , அந்த தொட்டில இருக்குறது எல்லாமே அழகுக்காக வளர்க்குரதுதான்.

செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ? 

அருண் : இனிமேல் எதாச்சும் பேசினா கண்டிப்பா நான் இப்படியே கிளம்பிப் போய்டுவேன்.. உன்னப் பார்ப்பேன் அப்படின் நினைச்சிருந்தா கண்டிப்பா நான் மொரீசியசுலையே இருந்திருப்பேன். உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?

செல்வாவிற்கு புகழ் அதிகமாக பிடிக்காது என்பதால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

No comments: