Saturday, December 24, 2011

வேண்டுதல்

செல்வா சுயதொழில் ஆரம்பித்திருந்த சமயம்.

தனது தொழில் சிறக்க என்னவெல்லாம் செய்யலாமோ, நண்பர்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறார்களோ அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் செய்துவந்தார்.

இப்படித்தான் ஒருமுறை உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் திட்டமலை முருகன் கோவிலை பௌர்ணமி நாளில் நூற்றியெட்டு முறை சுற்றி வந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று கூறியிருந்தார்.

அதை உண்மையென நம்பிய நமது செல்வா அதே போல ஒரு பௌர்ணமி நாளில் சுமார் 300 அல்லது 400 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மலையை நூற்றியெட்டுமுறை சுற்றிவந்தார்.

தனது தொழில் எப்படியாவது சிறப்பாக நடைபெற வேண்டுமென நினைத்ததால் அவருக்கு அந்த மலையைச் சுற்றுவது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

மலையைச் சுற்றி முடித்துவிட்டு கடவுளிடமும் வேண்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.

மறுநாள் செல்வாவைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்த நண்பர், செல்வா மொட்டைமாடியில் நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்.

ஒருவேளை மலையைச் சுற்றியதால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அழுகிறாரோ என்று நினைத்துக்கொண்டு ஏன் அழுகிறார் என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.

“ நான் நூத்தியெட்டுத் தடவ சுத்தி முடிச்சிட்டு கடைசியா முருகன்கிட்ட வேண்டிக்கும்போது என்ன வேண்டிக்கிறதுனு மறந்துட்டு ’ கணக்கு டீச்சர் என்னைத் திட்டவே கூடாதுனு’ வேண்டிக்கிட்டேன்” என்றார் சோகமாக.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே செல்வாவிற்கு கணக்கு வராது என்பதால் கணக்கு ஆசிரியர்களைப் பார்த்தால் எப்பொழுதுமே பயம்தான்.

” அதனால என்ன, மறுபடி உன்னோட தொழில் நல்லா வரணும்னு வேண்டிக்க வேண்டியதுதானே ? “

“ இல்ல, மலைய சுத்தி வந்த உடனே முதல்ல என்ன வேண்டிக்கிறோமோ அதுதான் நடக்குமாமா! “ 

“அடடா, கொஞ்சம் கவனமா இருக்கவேண்டாமா? சரி விடு. இன்னொரு தடவ சுத்தி மறுபடி வேண்டிக்கலாம்!” என்று சமாதானப்படுத்தினார் நண்பர்.

சிறிது நேரம் அழுகையை நிறுத்திய செல்வா மீண்டும் அழத்தொடங்கினார்.

இப்பொழுது எதற்கு அழுகிறார் என்று குழம்பிய அவரது நண்பர் “ மறுபடி எதுக்கு அழுற ? கால் வலிக்குதா ? “ என்றார்.

“இல்ல, கணக்கு டீச்சர் திட்டக் கூடாதுனு வேண்டுனதுக்குப் பதிலா கணக்கு டீச்சர் அடிக்கக் கூடாதுனு வேண்டியிருக்கலாம். அதயும் மறந்துட்டேன்! “

செல்வாவின் நண்பர் கடுப்பாகிவிட்டார்.

“எரும, உனக்கு ஏழு கழுத வயசாகுதுல. இப்ப என்ன பள்ளிக்கூடத்துலயா படிச்சுட்டு இருக்க, கணக்கு டீச்சர் வந்து அடிக்கிறதுக்கு ? கணக்கு டீச்சர் அடிச்சா என்ன ? கொஞ்சினா உனக்கு என்ன ? “ என்று கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.

“ அதில்ல, என்னோட பொண்டாட்டியும் ஒரு கணக்கு டீச்சர் தான்! “ என்றார் செல்வா அழுதவாறே.

Thursday, December 22, 2011

சோப்பு


உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த செல்வா சோப்பு வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார். அங்கு தனக்கு வேண்டிய சோப்பின் பெயரைச் சொல்லி ஒன்று தருமாறு கேட்டார்.

கடைக்காரரும் ஒரு சோப்பினை எடுத்துக் கொடுத்துவிட்டுப் பனிரண்டு ரூபாய் தருமாறு கேட்டார்.

“ என்னது? இந்தச் சோப்பு பனிரண்டு ரூபாயா ? எங்க ஊருல எல்லாம் ஆறே ரூபாய்தான்! “ என்று பேரம்பேச நினைத்தார் செல்வா. 

வழக்கமாக எந்தப் பொருளையும் பேரம் பேசி வாங்க வேண்டும் என்று அவரது தந்தை அறிவுறுத்தியிருப்பதால் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அவர்கள் சொல்லும் விலையில் பாதி விலைக்குக் கேட்பது செல்வாவின் வழக்கம். அந்தப் பொருளை முன்னர் வாங்கியிருக்காவிட்டாலும் கூட!

“ ஆறு ரூபாய்க்கெல்லாம் இந்தச் சோப்பு வராது தம்பி, அப்படி எந்தக் கடைல ஆறு ரூபாய்க்கு விக்குறாங்கனு காட்டினா உனக்கு நூறு சோப்பு இலவசமா தரேன்! “ என்று கடைக்காரர் கேட்டதும் செல்வாவிற்கு மேலே என்ன சொல்லுவது என்று தெரியாமல் அசட்டுத் தனமாக ஒருமுறை சிரித்துவிட்டுச் சோப்பை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

பிறகு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கடைக்கு வந்து அதே சோப்பினை மீண்டும் வாங்கினார் செல்வா. அப்பொழுதும் தங்கள் ஊரில் ஆறு ரூபாய்க்கு அந்தச் சோப்பு விற்கப்படுவதாகக் கூறினார்.

இந்தமுறை கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அவருக்கு அந்தச் சோப்பை மொத்தமாக விற்பவரே ஒரு சோப்பின் விலை பத்து ரூபாய்க்குத்தான் விற்கிறார். ஆறு ரூபாய்க்கு அந்தச் சோப்பினை யாராலும் விற்கவே முடியாது என்பதால் “ ஏன் தம்பி அடிக்கடி வந்து பொய் சொல்லுற ? “

“ இல்லீங்க, எங்க ஊருல சத்தியமா இந்தச் சோப்ப ஆறு ரூபாய்க்குத்தான் விக்குறாங்க! “

“ நீ சொல்லுறது மட்டும் உண்மையா இருந்துட்டா உனக்கு நூறு சோப்பு இலவசமா தரேன், அந்தக் கடையக் காட்டு!” என்று செல்வாவிடம் இந்த முறையும் அந்தக் கடைக்காரர் கேட்டார். செல்வாவும் அந்தக் கடையைக் காட்டுவதாக ஒப்புக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு தங்கள் ஊருக்குக் கிளம்பினார்.

செல்வாவின் ஊருக்கு வந்ததும் அந்தக் குறிப்பிட்ட கடைக்குச் சென்று அங்கே வாங்கிய அதே சோப்பினை வாங்குமாறு கடைக்காரரிடம் கூறினார் செல்வா.

கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட சோப்பின் பெயரைச் சொல்லி ஒன்றை வாங்கிக்கொண்டு அதன் விலையைக் கேட்டார். அதன் விலை ஆறு ரூபாய் என்றதும் கடைக்காரருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

பின்னர் ஊருக்குத் திரும்பி ஏற்கெனவே செல்வாவிடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி நூறு சோப்புகளை இலவசமாகக் கொடுத்துவிட்டு, மீண்டும் அந்த ஆறு ரூபாய்க்கு சோப்பு விற்கும் கடைக்குச் சென்று அவர்களால் எப்படி இவ்வளவு குறைந்த விலைக்கு அதுவும் நஷ்டத்திற்கு விற்க முடிகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக செல்வாவுடனேயே கிளம்பினார் அந்தக் கடைக்காரர்.

அந்தக் கடையை அடைந்ததும், கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பையனிடம் “ தம்பி உங்க ஓனர் எங்கப்பா ? “ என்றார் கடைக்காரர்.

“ உங்க பக்கத்துல நிக்குறாரு பாருங்க! “ என்று செல்வாவைக் கையைக் காட்டினான் அந்தப் பையன்.

கடைக்காரருக்கு மீண்டும் ஆச்சர்யம். அதைவிட எப்படி பத்து ரூபாய்ச் சோப்பினை ஆறு ரூபாய்க்கு விற்க முடிகிறது என்ற குழப்பம் வேறு.

“ எப்படி உங்களால பத்து ரூபா சோப்ப ஆறு ரூபாய்க்கு விற்க முடியுது ? உங்க டீலர் ரொம்ப குறைஞ்ச விலைக்குத் தராரா?“

“ ஆமா, எங்க டீலர் இலவசமா தரார்! “ என்றார் செல்வா.

“ அது யாருங்க, எனக்கும் அறிமுகப் படுத்தி வையுங்க. நானும் வாங்கிக்குவேன்ல! “

” அந்த டீலரே நீங்கதான்!” என்றார் செல்வா.

Saturday, December 3, 2011

தெரு நாய்

செல்வா தனது பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு வெளியூரில் இருந்த கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.

அவரது சொந்த ஊருக்கும் , அவர் பயின்ற கல்லூரிக்கும் நீண்ட தொலைவு என்பதால் கல்லூரிக்குப் பக்கத்தில் தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கி அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் தெருவில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.

உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். செல்வாவின் காயங்களுக்கு மருந்து போட்ட மருத்துவர் “ இது வெறிநாய்க் கடியானு சரியா தெரியல, அதனால ஒரு மூனு நாளைக்கு உங்களக் கடிச்ச நாய வாட்ச் பண்ணுங்க, மூனு நாளைக்கு அப்புறம் அது என்னாச்சுனு வந்து சொல்லுங்க” என்று கூறி அனுப்பினார்.

செல்வாவும் மருத்துவர் சொன்னது போலவே அந்த நாயினைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு வந்தார்.

மூன்றாம் நாள் மருத்துவமனைக்குச் சென்ற செல்வாவிடம் “ அந்த நாய் எப்படி இருக்குது ? நல்லா வாட்ச் பண்ணுனீங்களா ?“ என்று வினவினார் மருத்துவர்.

” அது ஒன்னும் ஆகல டாக்டர், அப்படியேதான் இருக்குது, என்ன கொஞ்சம் குண்டாகிருச்சு!”

” நல்லவேளை ஒன்னும் ஆகல, வெறிபிடிச்ச நாயா இருந்தா செத்துப் போயிருக்கும். ஒன்னும் பிரச்சினை இல்லை; நீங்க பயப்படாம போங்க! “ என்றார் மருத்துவர்.

” ஒரே நாய் இரண்டு தடவ சாகுமா என்ன ? “ ஆச்சர்யமாய்க் கேட்டர் செல்வா.

” என்ன சொல்லுறீங்க ? இரண்டு தடவ எப்படிச் சாகும் ? “

“ இல்ல டாக்டர், நீங்க அந்த நாய வாட்ச் பண்ணச் சொன்னீங்கள்ல, அப்பவே நான் அது பின்னாடி போனேன். ஆனா அது ஒரு எடத்துல நிக்கவே இல்ல, அதான் அப்பவே அத கொன்னு எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். இந்த மூனுநாளா செத்துப் போன நாயத்தான் பார்த்துட்டு இருந்தேன். நீங்க மறுபடி செத்துப்போகும்னு சொல்லுறீங்களே, அதான் கேட்டேன்! “

இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!

Saturday, November 19, 2011

டாமி

செல்வாவின் பக்கத்து வீட்டில் டாமி என்ற செல்லப்பிராணியை வளர்த்து வந்தார்கள்.

அதன் விளையாட்டுத்தனமும், கொழுகொழுவென்று வளர்ந்திருந்த அதன் முடிகளும், “வள் வள்” என்று வாலாட்டிக்கொண்டே அது குறைக்கும் விதமும் செல்வாவிற்கு வெகுவாகப் பிடித்துப்போனது. தானும் ஒரு டாமி வாங்கி வளர்க்கவேண்டும் என்று நினைத்தார்.

அடுத்தவாரமே மிகச் சிரமப்பட்டு அதே போன்றதொரு அழகான வெள்ளை நிற டாமியை வாங்கி வந்துவிட்டார் செல்வா.

அவர்கள் செய்யும் அனைத்தையும் செல்வாவும் செய்தார். அதற்கு தினமும் பால் வைப்பதும், சாப்பாடு வைப்பதுமாக கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார். இரண்டு நாட்களுக்கொருமுறை ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டவும் செய்தார். 

அவர்கள் டாமியை விட செல்வாவின் டாமி சற்றுப் பெரிதாக இருந்தது. ஆனால் வால் மட்டும் குட்டையாக இருந்தது. உருவம் பெரிதாக இருக்கிறதென்று ஒருபுறம் சந்தோசமாகவும், மற்றொருபுறம் வால் சிறிதாக இருக்கிறதென்று வருத்தமாகவும் இருந்தது.

தனது டாமியும் அவர்களின் டாமியைப் போல் வெள்ளையாக இருந்தாலும் சாப்பாடு வைத்தால் வாலாட்டுவது இல்லையே என்று செல்வாவிற்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் வளர்ந்தால் பழகிக்கொள்ளும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

செல்வாவின் டாமியோ வாலாட்டாததுடன் யாரேனும் வந்தால் குறைப்பதும் இல்லை. தனது டாமிக்கு என்னவோ குறை உள்ளது என்று நினைத்த செல்வா அதனைக் கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று அதன் குறைகளைப் பற்றிச் சொன்னார்.

பக்கத்து வீட்டுக்காரரின் டாமியைப் பற்றியும் அதை அவர்கள் வளர்ப்பதைப் பற்றியும் சொல்லிவிட்டு தானும் தனது டாமியை அவ்வாறேதான் வளர்ப்பதாகவும் ஆனாலும் தனது டாமி குறைப்பதில்லை என்றும் புலம்பினார்.
 
செல்வாவின் டாமியையும் செல்வா சொன்ன குறைகளையும் பார்த்து மருத்துவருக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு “ உங்க டாமி குறைக்காது! “ என்றார்.

” எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, இத எப்படியாவது குறைக்க வையுங்க! “ என்று கெஞ்சலாகக் கேட்டார் செல்வா.

“ என்னதான் செலவு பண்ணினாலும், டாமினு பேர் வச்சுக் கூப்பிட்டாலும், சாப்பாடு போட்டாலும் ஆட்டுக்குட்டிய நாய்க்குட்டியா மாத்த முடியாது! அந்த டெக்னாலஜி இன்னும் வளரல!“ சிரித்தவாறே பதிலளித்தார் மருத்துவர்.

Friday, November 4, 2011

பூச்செடி

அப்போது செல்வா இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை.

செல்வாவும் அவரது தாயாரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அங்கே அழகழகான பூச்செடிகள் நிறைய இருந்தன. அவற்றைப் பார்த்த நம் செல்வாவிற்கு தனது வீட்டிலும் அதே போல பூச்செடிகள் வைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அங்கிருந்து சில சிறிய பூச்செடிகளை ஒரு காகிதத்தில் போட்டு வீட்டிற்கு எடுத்துவந்து ஒரு பூந்தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

தினம் தினம் அந்தப் பூச்செடிகள் வளர்ந்துவிட்டனவா என்று பார்ப்பதும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவதுமாக நாட்கள் நகர்ந்தன. அது மட்டும் இல்லாமல் அதற்கு என்ன பேர் வைப்பது, அது சாப்பிடுமா ? என்றெல்லாம் வீட்டில் இருப்பவர்களிடம் கேள்விகளைக் கேட்டு நச்சரித்துகொண்டிருந்தார்.

” பூச்செடினா எதுவுமே சாப்பிடாது. அதுக்கு வாய் இல்லைல. அதுக்குத் தண்ணி மட்டும் ஊத்தினா போதும்” என்று அவரது சகோதரர் பதில் சொன்னார்.

செல்வாவும் தினமும் தண்ணீர் ஊற்றி வந்தார். ஆனால் இரண்டொரு நாட்களில் அந்தச் செடி வாட ஆரம்பித்திருந்தது. 

எதேச்சையாக அந்தச் செடியைப் பார்த்த அவரது தாயார் “ ஏன்டா, செடிக்குத் தண்ணியே ஊத்துறது இல்லையா ? வாடிப்போச்சு பாரு! “ 

” இல்ல ஊத்திட்டுத்தான் இருக்கேன். இருங்க இன்னும் கொஞ்சம் ஊத்தலாம்!” என்று கூறிக்கொண்டு ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து அதன் இலைகளைப் பிடித்து லேசாக தண்ணீருக்குள் மூழ்கச் செய்தார். ( செல்வாவைப் பொறுத்தவரை அது ஒரு விலங்கைப் போல வாய் வழியாகத் தண்ணீர் குடிக்கும் என்று நினைத்துக்கொண்டு அதன் இலைகளை அவ்வாறு தண்ணீரில் அமுக்கினார்).

“ டேய் டேய், என்ன பண்ற ? ”

” செடிக்குத் தண்ணி காட்டுறேன்! “ 

“ இப்படி எதுக்குக் காட்டுற ? “

” நம்ம நாய்க்கு இப்படித்தானே ஒரு பிளேட்ல தண்ணி வைக்கிறோம், அது மாதிரி இதுவும் குடிச்சிக்கும்ல ? “

“ ஐயோ! அப்படியெல்லாம் இது தண்ணி குடிக்காது. சும்மா மேல ஊத்திவிடு! “

“ தண்ணிய அது மேல ஊத்தினா அதுக்கு சளி பிடிச்சிக்காதா ? “ மீண்டும் குழப்பத்துடன் கேட்டார் செல்வா.

“ செடிக்கெல்லாம் எங்கடா சளி பிடிக்குது, புதுசு புதுசா யோசிக்கிறியே! “ என்று கொஞ்சலாகத் தூக்கி செடி வளரும் விதங்களைப் பற்றியும் அது வேர் வழியே தண்ணீர் உறிஞ்சும் என்றும் விளக்கிக் கூறினார்.

பின் சில நாட்கள் கடந்தன. செடிகள் முன்பு இருந்ததை விட வாடியிருந்தன.

செல்வாவை அழைத்த அவரது தாயார் “ ஏன்டா செடி மறுபடியும் வாடிருக்கு ? தண்ணி ஊத்துறது இல்லையா ?“ என்றார்.

“ இல்லம்மா, தினமும் தண்ணி ஊத்திட்டுத்தான் இருக்கேன். ஆனா வாடுது! “ என்றார் சோகமாக.

” எப்படி ஊத்துற ? இப்ப ஒரு தடவ ஊத்து!“

குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி வழக்கம்போலவே ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவந்து, பூந்தொட்டியில் இருந்த ஒரு செடியைப் பிடுங்கி, அதன் வேரில் தண்ணீரை ஊற்றிவிட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே நட்டுவிட்டு “ செடிய சுத்தியும் தண்ணி ஊத்தினா அதோட வேருக்குப் போய்ச் சேர நேரமாகும்ல, அதான் நானே வேர்ல தண்ணி ஊத்தினேன்! “ என்றார் செல்வா.Friday, October 14, 2011

காயம்

இது செல்வா முதல் முதலாக மிதிவண்டி பழகியபோது நிகழ்ந்த நிகழ்ச்சி.

நீண்ட நாட்களாக வீட்டில் போராடியதன் பயனாக அன்றுதான் செல்வாவிற்கு அவரது தந்தை புதிய சைக்கிள் ஒன்றை வாங்கித் தந்திருந்தார்.

இதற்கு முன்னர் செல்வா மிதிவண்டி ஓட்டியதில்லை என்பதால் அதனை தெருவில் தெற்கும் வடக்குமாக உருட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த அவரது நண்பர் செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுத் தருவதாகக் கூறினார்.

செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டுவதின் சாதுர்யங்களைச் சொல்லிகொண்டே செல்வாவை மிதிவண்டியின் மீதெறி அழுத்தச் சொல்லிவிட்டு கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டார் அவரது நண்பர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வாவுடன் அவரும் மிதிவண்டியில் ஏறிக்கொள்ள இருவருமாக ஓட்டத்தொடங்கினர். ஆனால் செல்வாவிற்குப் புதுப்பழக்கம் என்பதால் சரியாகத் திருப்பத்தெரியாததால் அருகில் இருந்த ஒரு குழிக்குள் சைக்கிளுடன் சேர்ந்து இருவரும் விழுந்துவிட்டனர்.

பெரிய குழியாக இல்லாவிட்டாலும் இருவருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுவிட்டது. எப்படியும் மருத்துவமனைக்குச் சென்றுதான் ஆகவேண்டும் என்பது தெரிந்தது.

இருவரும் குழியிலிருந்து மெதுவாக எழுந்து தார்ச்சாலைக்கு வந்தனர். அப்பொழுது செல்வா தனது முழங்கைகளை மடக்கி தார்ச்சாலையில் தேய்க்க ஆரம்பித்தார். ஒரு காயத்திற்குப் பதிலாக பல காயங்கள் ஏற்பட்டுவிட்டது. 

” டேய், டேய்! என்ன பண்ற ? “ குழப்பத்துடனும் பீதியுடனும் கேட்டார் நண்பர்.

“ அப்புறமா சொல்லுறேன்! “ என்றவாரு சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார் செல்வா.

மறுநாள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். செல்வா கையில் பெரிய கட்டுடன் நின்றுகொண்டிருந்தார். 

“ எதுக்குடா கைய நிலத்துல ஒரசி பெரிய காயம் பண்ணிட்ட ? “ நண்பரின் கேள்வி.

“ உனக்கு ஒரே காயம்தானே, உங்கிட்ட டாக்டர் எவ்ளோ பீஸ் வாங்கினார் ? “

“ 50 ரூபா! “

“ எனக்கு 6 காயம். அதுக்கும் அவர் அவ்ளோதான் வாங்கினார். ஒரு காயத்துக்கு ஐம்பது ரூபா குடுக்கிறதுக்கு நான் என்ன உன்ன மாதிரி இளிச்சவாயனா? அதான் நிலத்துல தேச்சு ஆறு காயம் பண்ணிட்டேன் “ என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார் செல்வா.

அன்றிலிருந்து அவரது நண்பர் செல்வாவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.Saturday, October 8, 2011

மிமிக்ரி

இது செல்வா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.

அந்த வருடம் பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் விமரிசையாக ஏற்பாடாகிக்கொண்டிருந்தன.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என அனைத்து வகுப்பிலும் மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

போட்டியில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஒரு நாளுக்கு ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது.

செல்வாவின் வகுப்பு மாணவர்களுக்கு சதுரங்கம் மற்றும் மிமிக்ரி செய்யும் போட்டிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தன. செல்வாவும் இரண்டு போட்டிகளிலும் பங்கெடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

முதலில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. உண்மையில் செல்வாவிற்கு சதுரங்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அது ஒருவகையான தாயக்கட்டை விளையாட்டு என்றே நினைத்திருந்தார். விளையாட்டிற்குச் சென்ற பின்னர்தான் அது வேறுவிதமான விளையாட்டு என்பதைப் புரிந்துகொண்டார். 

சிறிது நேரம் சமாளிக்க முயன்று தோற்றுப்போனார். இறுதியில் தனக்கு இந்த விளையாட்டு தெரியாதென ஒப்புக்கொண்டார். வெளியில் செல்வாவின் வகுப்புத் தோழர்கள் அவரைப் பலவாறு கிண்டல் செய்யத் தொடங்கினர். செல்வாவிற்குப் பெருத்த அவமானமாகிப் போய்விட்டது. அடுத்த போட்டியில் எப்படியேனும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் எனத் தீர்மானம் செய்துகொண்டார்.

அன்று இரவு முழுவதும் தனியாக உட்கார்ந்து மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரலைக் கூடச் சரியாக மிமிக்ரி செய்ய முடியவில்லை. செல்வாவிற்கு பயம் அதிகரித்தது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் தோற்றுப்போனால் நண்பர்களின் கிண்டலைத் தாங்கிக்கொள்ள முடியாதே என்று கவலைப்பட்டார்.

அடுத்த நாள் மிமிக்ரி செய்யும் போட்டியின் விதிமுறைகளில் மிமிக்ரி செய்யும்போது யாரையேனும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் செல்வாவிற்கு ரவியைத் துணைக்கு அழைத்துவந்தால் எப்படியும் இந்தப் போட்டியில் வென்றுவிடலாம் என்பதால் ரவியின் பெயரை உதவிக்கு என்பதில் சேர்த்துக்கொண்டார்.

போட்டிக்கான நாளும் வந்தது. கையில் ஒரு பூனையுடன் மிமிக்ரி செய்யும் மேடைக்குச் சென்றார் செல்வா. அங்கிருந்த நடுவர் ஆச்சர்யத்துடன் “ பூனை எதற்கு? “ என்றார்.

“ இது பேரு ரவிங்க சார், எனக்கு உதவிக்கு!,கார்டுல எழுதிருக்கும் பாருங்க “

“ சரி என்ன மாதிரி மிமிக்ரி செய்யப் போற ? “

” சாப்பாடு போட்டா பூனை எப்படி கத்தும், அடிச்சா எப்படி கத்தும்? இந்த ரண்டும் நான் செய்யப் போறேன் சார்”

“ வெரி குட், அப்புறம் பூனை எப்படி ஹெல்ப் பண்ணப் போகுது ? ”

” சாப்பாடு போடுறது , அடிக்கிறதெல்லாம் நான் பண்ணப்போறென் சார், கத்துற ஹெல்ப் மட்டும் அது பண்ணும்! “ என்றார்.


Thursday, September 22, 2011

மீண்டும் முட்டையால் வந்த குழப்பம்

செல்வாவிற்கும் முட்டைக்கும் எப்போதுமே சரிப்பட்டு வருவதில்லை. அடிக்கடி முட்டைகளால் குழப்பம் ஏற்படுவதும் அதனால் பிரச்சினைகள் வருவதுமாக இருந்தது. இருந்தாலும் செல்வா தனது அறிவுத்திறமையால் அனைத்தையும் சமாளித்து வந்தார். சிலசமயம் நண்பர்களை இழக்கவேண்டியதாகவும் இருந்தது. 

ஒருமுறை செல்வாவின் வீட்டிற்கு உறவினர் வந்திருந்ததால் செல்வாவிடம் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று முட்டை வாங்கிவருமாறு கூறியிருந்தார் அவரது தாயார்.

ஒரு சிறிய பையை எடுத்துக்கொண்டு கடைக்குக் கிளம்பினார் செல்வா.

கடையில் அவரது நண்பர் ஒருவரும் முட்டைகளை வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அந்த முட்டைகளை எடுத்துச் செல்வதற்கு பை எதுவும் எடுத்து வராததால் செல்வாவின் பையிலேயே அவரது முட்டைகளையும் வைத்துவிட்டு வீட்டில் சென்று பிரித்துக்கொள்ளலாம் என்றார்.

அப்படி தனது பையில் அவர் வாங்கிய முட்டைகளையும் வைத்துக்கொண்டால் அதற்கு என்ன உபகாரம் கிடைக்கும் என்று கேட்டார் செல்வா.தனது மிதிவண்டியை வீடு வரைக்கும் ஓட்டுவதற்குத் தருவதாகக் கூறினார் அந்த நண்பர்.

செல்வாவிற்கு மிதிவண்டி ஓட்டத்தெரியாதென்றாலும் ஏதோ மிதிவண்டி ஓட்டும் சந்தோசத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார்.

பாதி தூரம் வரை மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தவர் ஏறி ஓட்ட எத்தனித்து திடீரென்று கீழே போட்டு விழுந்துவிட்டார். மிதிவண்டியில் பையில் இருந்த சில முட்டைகள் உடைந்துவிட்டன.

என்ன செய்வதென்று தெரியாமல் செல்வா விழித்துக்கொண்டிருக்கவே அவரது நண்பர் ஒரு யோசனை கூறினார்.

” ஒடையாம இருக்கிற முட்டைகள சமமா பிரிச்சு எடுத்துக்கலாம்!”

“அப்படின்னா இதையும் ஒடைக்கனுமா? “

ஏற்கெனவே மிதிவண்டி கீழே விழுந்த கோபத்தில் இருந்த அவரது நண்பர் செல்வாவை எரித்துவிடுவதுபோலப் பார்த்துவிட்டு “ இங்க மொத்தம் பத்து முட்டை இருக்கு , நீ அஞ்சு முட்டைய எடுத்துக்க , நான் அஞ்சு முட்டைய எடுத்துக்கிறேன்! “ என்றார்.

“ மிச்ச முட்டை என்னாச்சுனு கேட்டா என்ன சொல்லறதாம் ? “

“ உன்னோட முட்டைல பாதியும் , என்னோட முட்டைல பாதியும் சைக்கிள்ல இருந்து கீழ விழுந்து ஒடஞ்சு போச்சுனு சொல்லு! “

“ ஆனா நம்பமாட்டாங்களே! “ என்று பரிதாபமாகச் சொன்னார் செல்வா.

“ ஏன் ? “

“ஏன்னா நான்தான் முட்டையிடுறதில்லையே, அப்புறம் எப்படி என்னோட முட்டை உடைஞ்சு போச்சுனு சொல்ல முடியும்?! “ என்று குழம்பினார் செல்வா.


Friday, September 16, 2011

எனக்கு பதில் நீ


செல்வா கணிதவியலில் தனது முதுநிலைப் படிப்பினை முடித்துவிட்டு மேற்கொண்டு ஆய்வுப்படிப்பினைத் தொடரலாம் என்று காத்திருந்தார்.

செல்வாவுடன் பனிரண்டாம் வகுப்புவரை படித்த அவரது நண்பர் ஒருவர் அதற்குப் பிறகு தொலைநிலைக் கல்வி மூலமாக இளநிலைக் கணிதவியல் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரால் தேர்ச்சி பெறவே முடியவில்லை.

செல்வா தனது முதுநிலை கணிதவியல் படிப்பினை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அவரது நண்பருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது அவருக்குப் பதிலாக செல்வாவை பரீட்சை எழுத அனுப்பலாம் என்பதே அந்த் யோசனை.

செல்வாவிடம் இந்த யோசனையைச் சொன்னதும் முதலில் செல்வா தான் ஆள் மாறாட்டம் செய்ய ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனாலும் நீண்ட நேரம் போராடி செல்வாவை ஒப்புக்கொள்ள வைத்தார் அவரது நண்பர்.

பரீட்சைக்கான நாளும் வந்தது.நடுங்கிக்கொண்டேதான் பரீட்சைக்குப் போனார். ஆனால் எதிர்பார்த்த அளவு அங்கு கெடுபிடி ஏதும் இல்லை. செல்வாவும் மிக்க சந்தோசத்துடன் பரீட்சையை முடித்துவிட்டு மகிழ்வுடன் வெளியே வந்தார்.

மீதமிருந்த நான்கு பரீட்சைகளையும் தானே எழுதுவதாக நண்பனிடம் கூறிவிட்டு எல்லாப் பரீட்சைகளையும் எழுதிக்கொடுத்தார். அவரது நண்பருக்கு செல்வாவின் மீது அளவு கடந்த மரியாதையும் நட்பும் ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு வெளியான தேர்வு முடிவுகள் அவரது நண்பரை மிக்க கோபத்திற்கு ஆளாக்கியது. ஆம். எல்லாத் தேர்வுகளிலும் தோல்வி என்று வந்திருந்தது. உடனே செல்வாவை அழைத்து “ டேய், என்னடா Exam எழுதின? எல்லாத்திலயும் ஃபெயில்! நீ எழுதினா பாஸ் ஆவேன்னுதான உன்ன எழுதச் சொன்னேன், நீ எல்லாம் எப்படிடா M.Sc படிச்ச ? “

“காலேஜ் போய்த்தான் படிச்சேன்! அதுக்கு இப்ப என்ன ?“

” காலேஜ் போய் கிழிச்ச ? ஒரு பரிட்சை ஒழுங்கா எழுதத் தெரியல. இதுல ... “ என்று வாய்க்கு வந்தவாரு திட்டினார் செல்வாவின் நண்பர்.

செல்வாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. ” உனக்கு என்னதாண்டா பிரச்சினை ? இப்ப எதுக்கு என்னைய திட்டுற ? நீ சொன்ன மாதிரி தான நான் பண்ணினேன்“

“ நான் சொன்ன மாதிரி பண்ணுனியா ? “

“ ஆமா , ’என்ன மாதிரியே எழுதிட்டு வா னு ’ எங்கிட்ட சொன்னீல அதத்தான் பண்ணிருக்கேன்! “ குழப்பினார் செல்வா.

“ அதுக்கு என்ன பண்ணின ? “

“ உன்ன மாதிரி எழுதினா பெயில்தான ஆகனும். அதனாலதான் எல்லா கேள்விக்கும் தப்புத் தப்பா எழுதிட்டு வந்தேன்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் செல்வா.
Thursday, September 8, 2011

குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிய செல்வா!


செல்வாவின் ஊரிற்கு ஒரு வினோதமான மனிதர் வந்திருந்தார். தான் மட்டுமே சிறந்த அறிவாளி என்றும் தன்னைவிடச் சிறந்த ஒருவர் இந்த உலகத்திலேயே இல்லை என்றும் கூறிக்கொண்டார்.

ஆனால் செல்வாவின் அறிவுத்திறனை அறிந்திருந்த அந்த கிராமத்து மக்கள் செல்வா தான் சிறந்த அறிவாளி என்று கூறினர்.

இதனால் எரிச்சலடைந்த அந்த மனிதர் செல்வாவைச் சோதனை செய்து பார்த்தால்தான் இதை நம்புவேன் என்று கூறி செல்வாவின் அறிவுத்திறனைச் சோதிக்க ஆரம்பித்தார்.

செல்வாவால் தன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்று நினைத்த அந்த மனிதர் ஏமாற்றமடைந்தார்.

எப்படியாவது செல்வாவைத் தோற்கடித்தே தீர வேண்டும் என நினைத்த அந்த மனிதர் அருகில் இருந்த குழி ஒன்றைக் காட்டி ”இதைத் தூக்கி அந்தக் கிணற்றுக்குள் போட்டால் நீ அறிவாளி என ஒத்துக்கொள்கிறேன்!” என்றார்.

எப்படியும் செல்வா இது முடியாது என்று விலகிவிடுவார் என்று நினைத்தே இதைக் கூறினார்.

ஆனால் செல்வா வழக்கத்தை விட சற்று உற்சாகமாக “ அது ரொம்ப ஈஸிங்க, ஆனா எனக்கு ஒரு நாள் அவகாசம் தரனும் “ என்று கேட்டுக்கொண்டார். மேலும் கிணற்றின் ஆழத்தையும் , குழியின் ஆழத்தையும் அளந்துகொள்ளுமாரு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

மறு நாள் காலையில் அந்தக் குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிவிட்டதாக அந்த மனிதரைக் குழி இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்.

அவர் சொன்னது போலவே அந்த இடத்தில் குழியைக் காணவில்லை. அந்த மனிதருக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதை தான் நம்ப மாட்டேன் என்றும் கிணற்றுக்குள் கிடக்கும் அந்தக் குழியைக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிணற்றை அளந்து பார்த்தால் தெரியும் என்று செல்வா சொன்னதும் உடனே கிணறு அளக்கப்பட்டது. கிணற்றின் ஆழம் நேற்று இருந்ததிலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது. ஆச்சர்யப்பட்ட அந்த மனிதர் செல்வா வென்றுவிட்டார் என்று அறிவித்துவிட்டு ” எப்படி அந்தக் குழிய இதுக்குள்ள தூக்கி வீசினீங்க ?“

“ கிணத்துக்குள்ள இருந்து மண்ண வாரி இதுக்குள்ள கொட்டினேன்! “ என்றார் செல்வா.Tuesday, September 6, 2011

சேட்டிலைட் டிவி


செல்வாவின் உறவினர் வீட்டில் சிறிது நாட்களுக்கு முன்னர் செயற்கைக்கோள் மூலம் இயங்கும் டிஸ் டிவி வாங்கியிருந்தார்கள்.

அவர்களின் வீட்டிற்குச் சென்ற செல்வா அது இயங்கும் விதத்தை மிக ஆச்சர்யமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

தானும் அதுபோல ஒன்று வாங்கவேண்டும் என்று ஆவல் செல்வாவிற்கு எழுந்தது. அதன் விலை விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு அது போன்ற டிஸ் டிவி வாங்கும் அளவு பணம் செல்வாவிடம் சேர்ந்திருந்தது. எப்படியும் வாங்கிவிடவேண்டும் என நினைத்த செல்வா மீண்டும் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று எங்கே வாங்கினார்கள் என்பதையும் தெரிந்துகொண்டு தானும் அது போல வாங்கப் போவதாகக் கூறினார்.

அதை ஆமோதித்த அவரது உறவினர் அவர்கள் வாங்கிய அதே கடைக்குக் கூட்டிச் சென்று டிஸ் ஆண்டனா மற்றும் ரிசீவர் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தார்.

செல்வாவிற்கு அவற்றைப் பொருத்தத் தெரியாதென்பதால் அவரது உறவினரையே தன் வீட்டிற்கு வந்து பொருத்தித் தருமாறு கேட்டுகொண்டார்.

வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ரிசீவரை டிவிக்கு அருகில் வைத்துக்கொண்டு டிஸ் ஆண்டனாவை வீட்டின் மாடியில் வைத்துவிடலாமா என்று கேட்டார்.

அதற்கு மறுப்புத் தெரிவித்த செல்வா அருகில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான அறை ஒன்றைச் சுட்டிக்காட்டி அதில் பொருத்தலாம் என்றார்.

” மாடில வச்சா சிக்னல் ரொம்ப தெளிவா கிடைக்கும், இங்க வச்சா அவ்ளோ தெளிவா இருக்காது, அதனால மாடிலயே வைக்கலாம்! “ என்றார் உறவினர்.

“ வெயில்லயும் , மழைலயும் நனைஞ்சா என்னத்துக்கு ஆகுறதுனுதான் அந்த ரூம் கட்டிருக்கேன். அதுக்குள்ள வச்சிடலாம், வெளில வேண்டாம்! “ என்றார் செல்வா.

நீண்ட நேரம் போராடியும் செல்வா ஒப்புக்கொள்ளாததால் எரிச்சலடைந்த அவரது உறவினர் அந்த அறையிலேயே டிஸ் ஆண்டனாவை வைத்துவிட்டு பிறகு வந்து சரி செய்வதாகக் கூறிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடி விட்டார்.
Monday, August 29, 2011

நிழலின் கதை


இது செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி.

இரண்டு வயதாக இருக்கும்போது செல்வா அவரது நிழலைப்பார்த்து மிகவும் பயந்துகொள்பவராக இருந்தார். அடிக்கடி அவரது தாயாரிடம் 

“இது என்ன, இவன் ஏன் எங்கூடவே வரான் ?“ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார்.

“ அது உன்னோட நிழல், உங்கூடத்தான் வரும் ! “ 

“அது எனக்கு பிடிக்கவே இல்ல, அவன போகச்சொல்லு. இல்லைனா கல்லத்தூக்கி அவன் மண்டைல போட்டிருவேன்! “ என்று அடிக்கடி அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்.

ஒருநாள் நிழலைப்பார்த்து மிகப்பயந்து போனார். அன்று அவரது நிழல் அவரை விட்டுப்போயே தீரவேண்டுமென தரையில் உருண்டு அழத்தொடங்கிவிட்டார். 

செல்வாவின் பிடிவாத குணத்தையறிந்த அவரது தாயார் ” சரி, இன்னிக்கு உன்னோட நிழலுக்கு ஒரு முடிவு கட்டிறலாம் வா! “ என்று செல்வாவை தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார்.

அங்கே ஒரு பெரிய குழியை வெட்டி அதன் ஓரத்தில் செல்வாவை நிற்க வைத்து ” குழிக்குள்ள பாரு, உன்னோட நிழல் இருக்கு. இப்ப மண்ணைப் போட்டு மூடிட்டா அது மண்ணுக்குள்ள புதைஞ்சிடும். அப்புறம் உங்கூட வராது!  ஆனா வீடு போக வரைக்கும் திரும்பிப்பாக்காம போகனும் சரியா ? “ என்றார் அவரது தாயார்.

செல்வா சரியென்றதும் அந்தக் குழியை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தனர். குழிக்குள் நிழலைப் போட்டு மூடிவிட்டோம் என்று நினைத்ததால் செல்வாவும் அதற்குப்பிறகு அன்று முழுவதும் அவரது நிழலைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை.

மறுநாள் காலையில் விளையாடச் சென்ற செல்வா கல கலவெனச் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தார்.

“ ஏன்டா சிரிக்கிற ?” என்றார் செல்வாவின் தந்தை.

” யாரோ ஒருத்தரோட நிழல் என்கூட வந்து ஒட்டிருச்சு! ஹா ஹா ! பாவம் அவுங்க! இத எப்படி அவுங்களுக்குத் திருப்பிக்கொடுக்கிறது ? “ என்று சிரிப்பை அடக்கமாட்டாமல் கேட்டார் செல்வா. 

” அது உன்னோட நிழல்தான். குழிக்குள்ள இருந்து எந்திருச்சு வந்திருக்கும்! “ என்று எதயாவது சொன்னார் அவரது தாயார்.

“ இல்ல அது குழிக்குள்ள விழுந்ததால அதுக்கு தலைல அடி பட்டிருச்சோனு நினைச்சு அதுக்கு கட்டு போடுறதுக்காக காலைல போய் அந்தக் குழிய நோண்டி பார்த்தேன். அது அதுக்குள்ளவேதான் கிடந்திச்சு! இது வேற யாரோ ஒருத்தரோ நிழல். இத எப்படி திருப்பிக்குடுக்கறது ? “ என்று மறுபடியும் தரையில் புரண்டு உருளத்தொடங்கினார் செல்வா. 


Saturday, August 20, 2011

மீண்டும் ரயில்வே அதிகாரியாக செல்வா!


செல்வா சிறந்த அறிவாளி என்பது நாமறிந்ததே. அடிக்கடி தனது புத்திக்கூர்மையை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதும் நாமறிந்ததே.

அதிலும் தனது உடலில் கெட்ட ரத்தமே ஓடக்கூடாது என்பதற்காக தனது உடலில் உள்ள சிரை (vein) நரம்புகளை முற்றிலும் உடலிலிருந்து எடுத்துவிடவேண்டுமென மருத்தவரிடம் சண்டைபோட்டது கூட செல்வாவின் அறிவுத்திறனுக்குச் சான்றுதான்.

ஒருமுறை ரயில்வே அதிகாரியாக இருந்து சில புதிய திட்டங்களைப் புகுத்தியதற்காக அவர் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் என்பதை நாம் ஏற்கெனவே ரயில்வேயும் செல்வாவும் என்ற கதையின் மூலமாக அறிந்துள்ளோம்.

பின் சிறிது காலங்களுக்குப் பிறகு அவர் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் வேலை கிடைத்து அதிலும் பலப்பல புதிய நுட்பங்களைப் புகுத்தி மக்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.

இருந்தபோதிலும் ரயில்வே துறை மீதிருந்த அவரது ஆசை அகலவேயில்லை.

மீண்டும் ரயில்வே பணிக்கான பரீட்சைகளைத் தொடர்ந்து எழுதி அதில் தேர்வு செய்யப்பெற்று மீண்டும் ரயில்வேயில் பணியில் அமர்ந்தார்.

இந்த முறை மிகக் கவனமாக எல்லா வேலைகளையும் செய்துவந்தார். ஆனாலும் விதி அவரை இந்த வேலையையும் நிம்மதியாகச் செய்யவிடவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு நெடுஞ்சாலைத்துறையில் தான் செய்துவந்த சிற்சில மாற்றங்களை இதிலும் செய்யவேண்டும் என தனது அதிகாரிகளுக்கு விரிவான ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமே அவரது வேலைக்கும் ஆப்பு வைத்தது.

அந்தக் கடித்ததில் முக்கியமாக அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் “ பள்ளி , கல்லூரிகளுக்கு எதிராகவோ அல்லது அருகாமையிலோ இருக்கும் ரயில் தண்டவாளங்களில் வேகத்தடை அமைக்கவேண்டுமென்பதே!”

Thursday, August 18, 2011

ராங் நம்பர்


அன்று செல்வாவின் சகோதரர் புதிதாக செல்போன் ஒன்று வாங்கி வந்திருந்தார்.அதுதான் அவர்கள் வீட்டில் வாங்கப்பட்ட முதல் செல்போன்.

அதனால் செல்வாவிற்கு செல்போன் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. 

உறவினர்கள், நண்பர்கள் இப்படி எல்லோருக்கும் அழைத்து செல்போன் வாங்கியிருப்பதையும் அதன் எண்களையும் கொடுத்தபடி இருந்தார் அவரது சகோதரர்.

எல்லோருக்கும் அழைத்து முடித்த பிறகு செல்வாவிடம் அதில் எப்படி எண்களைப் பதிவது என்பதை விளக்கிக்கொண்டிருந்தார்.

“ சரி, ராங் நம்பர்னா என்ன ?” என்று தனது சந்தேகத்தைக் கேட்டார் செல்வா.

“ அது நமக்குத் தெரியாத புது நம்பர்ல இருந்து வரும்! “ 

“ ஆனா எனக்குத்தான் 0 லிருந்து 9 வரைக்கும் எல்லா நம்பரும் தெரியுமே, அப்புறம் எப்படி புது நம்பர்?!” என்று வியந்தார் செல்வா.

“ ஐயோ! புது நம்பர்னா வேற யாருக்கோ கால் பண்ண நினைச்சு நமக்கு பண்ணுறதுதான் ராங் நம்பர்” விளக்கினார் சகோதரர்.

மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய செல்வாவின் சகோதரர் தனது நண்பருக்கு அழைக்கலாம் என்று செல்போனை எடுத்தார். பேலன்ஸ் சுத்தமாகத் தீர்ந்திருந்தது.

“ அட கொடுமையே, 500 ரூபாய்க்கு ரீ சார்ச் பண்ணிருந்தேன், அவ்ளோ எப்படி ஒரே நாள்ல தீர்ந்துபோச்சு, என்ன பண்ணின?” என்று செல்வாவைப் பார்த்துக்கேட்டார்.

” ராங் நம்பர்ல இருந்து கால் பண்ணுறவங்களுக்கு நம்ம நம்பர் தெரியாதுல, அதான் எல்லா ராங் நம்பருக்கும் கூப்பிட்டு நாம செல்போன் வாங்கிட்டோம்னு சொன்னேன்!” என்றார்.Saturday, August 13, 2011

ஆடி வெள்ளியும் கோழி முட்டையும்


செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை நேரம் செல்வா ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.

”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.

பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.

அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே செல்வாவின் யோசனை. அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.

பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள் “ முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே! “ என்று மிரட்டலாகச் சொன்னார்.

“ ஐயனே நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!” என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் செல்வா.

அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார் “ லூசு, இது சேவலோட கால் ரேகை!”
Wednesday, August 10, 2011

வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?


இது செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நடந்தது.

3 அல்லது 4 வயது இருக்கும் போது செல்வா மிதிவண்டி பழகிக்கொண்டிருந்தார். சாலையோரமாக மிதிவண்டியை ஓட்டியவாறு வந்தவர் எதிரில் வந்துகொண்டிருந்தவரின் மீது லேசாக மோதிவிட்டார்.

” ஏய், பாத்துபோ! “ என்றார் எதிரில் வந்தவர்.

“ உன்ன எதுக்கு நான் பாத்துட்டுப் போகனும், நீ என்ன மாமனா ? மச்சானா? மானங்கெட்டவனே!” ( அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்திருந்தார்) என்றார் செல்வா.

” வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா? “ என்று கோபமாகக் கேட்டார் அந்த வாலிபர்.

“ நான் எதுக்கு உங்க வீட்டுல வந்து சொல்லனும், நீ மட்டும் எங்க வீட்டுல வந்து சொன்னியா? “ என்று வழக்கம்போலவே லூசுத்தனமாகக் கேட்டார் செல்வா.

இனியும் இங்கே நிற்பது மரியாதையல்ல என்று அந்த வாலிபர் அங்கிருந்து எதுவும் சொல்லாமலே கிளம்பிவிட்டார்.

அப்பொழுது சாலையில் இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட செல்வா அவசர அவசரமாக தனது மிதிவண்டியைக் கையில் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

வீட்டிற்குள் வந்ததும் ஒரு பெரிய கருப்புத்துணியை எடுத்துக் கண்ணை முழுவதும் மறைத்துக் கட்டிக்கொண்டார்.

கண்ணை மறைத்துக் கட்டிக்கொண்டதால் எதிரில் என்ன வருகிறது என்று கூடத் தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அவரது சகோதரர் “ என்னடா இது? எதுக்கு இப்படி கண்ணக் கட்டிட்டு திறியுற? “ என்றார்.

“ இன்னிக்கு நாலாம் பிறை வரப்போகுதாம்ல, அதப் பார்த்தா நாய் படாத பாடு படனும்னு ரோட்டுல பேசிட்டிருந்தாங்க. அதான் அத பாக்கக் கூடாதுனு இப்படி கட்டிருக்கேன். நீயும் கட்டிக்க! “

” நாலாம் பிறையப் பார்த்தா நாய் படாத பாடு படனும்னு சொல்றதே ஒரு முட நம்பிக்கை,அத பாக்காம இருக்கவே இப்படி நாய் படாத பாடு படுறவங்கள என்ன பண்ணுறது? “ என்று அதட்டினார் அவரது சகோதரர்.

(சத்தியமா இது கற்பனைக் கதைங்க! உண்மை நிகழ்ச்சி அல்ல)

Thursday, July 21, 2011

நிலவுக்கு ஒரு பயணம்


செல்வாவின் ஊர் அன்று பரபரப்பாக இருந்தது. ஆம் நிலவுக்கு ஆட்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சி வெற்றி பெற்று அதன் பிறகு நடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட இலவசத்திட்டத்தின் பயனாக ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஐந்து பேரை நிலவுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுக் கொண்டிருந்தது!

அந்த வகையில் செல்வாவின் ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் செல்வாவும் ஒருவர்.

மொத்தம் ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதால் ஒவ்வொருவராக அவர்களின் உடல் நலம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிலவுக்குச் செல்லும் பயணம் பற்றிய முக்கியக் குறிப்புகளை விஞ்ஞானிகள் கூறிக்கொண்டிருந்தனர்.

பின்னர் நிலவுக்குச் செல்லும் நாளும் வந்தது. செல்வாவும் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தார். ஆனால் செல்வா வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால் ஏவுதளம் செல்லும் வாகனம் செல்வாவை மட்டும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

சிறிது நேரம் கழித்து அவரது நண்பருக்குப் போன் செய்து செல்வா சொன்னதைக் கேட்டுவிட்டு அவரது ஊரே செல்வாவைப் பார்த்துச் சிரித்துகொண்டிருந்தது.

அப்படி அவர் என்னதான் சொன்னார்?

அவர் சொன்னது “ மச்சி, ஜன்னலோரமா ஒரு சீட் போட்டு வைடா, புளிச்சோறு கட்டிட்டு வந்திடறேன்! “ சீக்கிரமா வந்திடரேன்! 

Saturday, July 9, 2011

செல்வாவின் அறிவுத்திறன்!

செல்வாவும் அவரது நண்பரும் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தார்கள்.

செல்வாவின் அறிவாளித்தனத்தைச்(!?) சமாளித்து அவருடன் இருப்பதற்கு அவரது நண்பர் மிக மிகச் சிரமப்படவேண்டியிருந்ததது.

இப்படித்தான் ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். நல்ல உறக்கத்திலிருந்த அவரது நண்பருக்கு யாரோ “ புஸ் புஸ்” என்று ஊதுவது போல சத்தம் கேட்டது. விழித்துப்பார்த்தவருக்கு ஆச்சர்யம்.

பக்கத்தில் செல்வா ஒரு சைக்கிள் பம்பினை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அதன் காற்றுக் குழாயில் வாயை வைத்து ஊதிக்கொண்டிருந்தார்.

அவரது நண்பருக்கு குழப்பத்திற்கு மேல் குழப்பம். அதுவும் இல்லாமல் அவர்களிடம் இது போன்ற பம்ப் ஏதும் இல்லை.

“ டேய், எதுக்குடா இப்ப இந்த பம்பல வாய வச்சு ஊதிட்டு இருக்க?” என்றார்.

“சத்தமா பேசாதடா, இது எதிர்த்த வீட்டுக்காரங்க பம்பு, நானே அவுங்களுக்குத் தெரியாம ஊதிட்டு இருக்கேன்! “ என்று மெதுவான குரலில் சொன்னார் செல்வா.

” சரி மெதுவாவே சொல்லு , இப்ப எதுக்கு இப்பிடி ஊதிட்டு இருக்க ?”

” காலைல நம்ம சைக்கிளுக்கு இந்த பம்ப்ல இருந்துதானே காத்து அடிச்சோம் , அதான் பம்புக்குள்ள இருக்குற எல்லா காத்தும் நாமலே எடுத்துட்டோம்ல. நாளைக்கு அவுங்க செக் பண்ணும்போது காத்து இல்லைனு நம்ம கிட்ட காசு கேட்டா என்ன பண்ணுறது? அதான் இப்பவே அவுங்களுக்குத் தெரியாம ஊதி வச்சிட்டா பிரச்சினை வராதுல! எப்டி ஐடியா?” என்று குசுகுசுவெனச் சொன்னார் செல்வா.

Friday, July 8, 2011

இதுவும் சரிதானே?

”ஏன்டா உங்கிட்ட ஒரு வேலையக் கொடுத்தா உருப்படியா பண்ணமாட்டியா?“ என்று திட்டியவாரே செல்வாவின் அறைக்குள் நுழைந்தார் அவரது தாயார்.

“ஏன் மா ?”

“உப்பு வாங்கிட்டு வரச்சொன்னா இதென்ன அழுக்கு உப்ப வாங்கிட்டு வந்திருக்க? இத வச்சு என்ன பண்ணுறது?”

“அது, அது, அது வந்து வாங்கிட்டு வரும்போது கீழ கொட்டிருச்சு, அதான் அப்படி அழுக்காகிருச்சு!” என்று பயந்தவாரே சொன்னார் செல்வா.

”இத்தன உப்பும் வேஸ்ட். கண்ணாடி காகிதத்துலதான போட்டு கொடுத்திருப்பாங்க, அது எப்படி கீழ கொட்டுச்சு?”

“அஞ்சு காலி கவர் கொடுத்தா ஒரு பாக்கட் உப்பு இலவசம்னு சொன்னாங்க, அதான் அஞ்சு பாக்கட் வாங்கி அதுல இருந்து உப்ப எல்லாத்தயும் கீழ கொட்டிட்டு அந்த காலி பாக்கட்ட கொடுத்து ஒரு பாக்கட் உப்பு இலவசமா வாங்கிட்டேன்! அதான் இப்டி அழுக்காகிருச்சுனு நினைக்கிறேன் மா! “

“இலவசப் பொருள வாங்குறதுக்கு இப்படி எல்லாம் பண்ணனுமா? இப்ப பாரு எல்லாமே வெட்டியாப் போச்சு!” என்று தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் உப்பு வாங்குவதற்காக கடைக்குச்சென்றார் அவரது தாயார்.

கடைக்குச் சென்று திரும்பிய அவரது தாயாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

செல்வா அவர் வாங்கி வந்திருந்த உப்பினை ஒரு பக்கட்டில் தண்ணீர் ஊற்றி அதற்குள் கொட்டிவைத்திருந்தார்.

“இது எதுக்குடா இப்ப பக்கட்ல தண்ணி ஊத்தி வச்சுருக்க? “ 

“அதான் உப்பு அழுக்காகிப்போச்சுல. அத வாசிங்பவுடர் போட்டு அலாசிட்டோம்னா அழுக்கு போய்டும்ல அதான் பக்கட்ல ஊற வச்சிருக்கேன்” என்றார்.

Wednesday, July 6, 2011

தண்ணீரில் நனைந்த மீன்!


இது செல்வாவின் குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த சம்பவம்.

அன்று செல்வா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் வந்த ஒரு காட்சியைப் பார்த்துக்கொண்டு பயந்தவர் வீட்டின் மூலையில் ஒரு கோணிப்பைக்கு அடியில் போய் ஒளிந்துகொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்த அவரது தாயார் செல்வாவைக் காணாததால் தவித்துப்போய் சத்தமாகக் கத்திக் கூப்பிடத்தொடங்கினார். ஆனால் செல்வா வாயைத் திறக்கவே இல்லை.

சிறிது நேரம் கத்திய அவரது தாயார் "எங்க போய்த் தொலைஞ்சான்னு தெரிலையே?" என்று சலித்தவாறே வீட்டிற்குள் சென்றார்.

அங்கே ஒரு கோணிப்பையில் " இந்தக் கோணிப்பைக்குள் ஒன்றும் இல்லை!" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தவர் அந்த கோணிப்பையை தூக்கினார்.

கோணிப்பையில் ஒளிந்திருந்த செல்வாவைப் பார்த்த அவரது தாயார் " இங்க ஏண்டா ஒளிஞ்சிட்டு இருக்க ? அந்தக் கத்துக் கத்தி கூப்பிட்டேன் வயத்தொறந்து சொல்லுறதுக்கு என்ன ? " என்றார் கோபமாக.

" என்னைய போலீஸ் பிடிக்க போகுது, அதான் ஒளிஞ்சிக்கிட்டேன்!" என்றார் செல்வா. இதைச்சொல்லும்போதே கை கால்களெல்லாம் தனித்தனியாக நடுங்கிக்கொண்டிருந்தது.

" எதுக்கு போலீஸ் பிடிக்குது ? " 

" டிவில ஒரு படத்துல ஒரு ஆளு இன்னொருத்தன தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு கொன்னுட்டான், அவன போலீஸ் பிடிச்சிட்டு போச்சு. அப்படின்னா என்னையும் பிடிக்கும்ல" என்றார் செல்வா.

" உன்ன எதுக்குடா பிடிக்குது?" குழப்பமாகக் கேட்டார் அவரது தாயார்.

" நேத்திக்கு அப்பா ஒரு மீன் வாங்கிட்டு வந்தார்ல, அத கொண்டுபோய் நான் தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டேன்! அப்படின்னா என்னையும் போலீஸ் பிடிக்கும்ல!" என்று அழ ஆரம்பித்தார்.

Saturday, July 2, 2011

இலவச நிமிடங்கள்!


செல்வா புதிதாக போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்பொன்று வாங்கியிருந்தார்.

செல்வா அவ்வளவு எளிதாக எந்த செலவும் செய்துவிடமாட்டார். அப்படியே செலவு செய்தாலும் ஏதேனும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்.

அவரின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த செல்போன் இணைப்பு அமைந்திருந்தது. 

ஒரு மாதத்திற்கு 1440 நிமிடங்கள் இலவசம் என்ற அவர்களின் திட்டம் செல்வாவை வெகுவாகக் கவர்ந்ததால் உடனடியாக அந்த நிறுவனத்தில் புதிய இணைப்பொன்றை வாங்கினார்.

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. செல்வாவின் மனதில் குடியேறியிருந்த சந்தேகம் வலுவடையத் தொடங்கியது.

இனியும் தாமதித்தால் தான் ஏமாற்றப்படுவோமோ என்ற பயத்தில் தனது நண்பனை அழைத்து " மச்சி ஒரு மாசத்துக்கு எத்தன நாளு ?" என்று கேட்டார்.

" நாலாம் தேதி ஒரு நாலு வரும் , அப்புறம் பதினாலாம் தேதி ஒரு நாலு வரும், அப்புறம் இருபத்தினாலம் தேதி ஒன்னு ஆக மொத்தம் ஒரு மாசத்துக்கு மூணு நாலு! " என்று சொன்னார் அவரது நண்பர்.

எரிச்சலடைந்த செல்வா " ஐயோ நான் கேட்டது நாள் (DAY ) , நம்பர் இல்ல! " என்றார்.

" அது மாசத்தப் பொறுத்து வரும்! " 

" சரி இந்த மாசத்துக்கு எத்தன நாளு ? "

" இது ஜூலை மாசம் , இந்த மாசத்துக்கு 31 நாள் வரும்! " என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார் அந்த நண்பர்.

உடனடியாக அந்த செல்போன் கம்பனிக்கு அழைத்த செல்வா " மேடம் இந்த மாசத்துக்கு எத்தன நாள் ? " என்றார்.

" உங்களுக்கான டீடைல் தான் செக் பண்ணிட்டு இருக்கேன் சார் , உங்க பேர் சொல்லுங்க! " என்றார்.

" இந்த மாசத்துக்கு எத்தன நாளுன்னு கேட்டா கூட செக் பண்ணி சொல்லுறேன்னு சொல்லுறாங்க, கொடுமைடா!" என்று மனதில் நினைத்துகொண்டு தனது பெயரைக் கூறினார்.

" சார் இந்த மாசத்துக்கு எத்தன நாள் நீங்க பேசிருக்கீங்கனு தகவல் வேணுமா?" என்றார் அந்த அதிகாரி.

" அதில்லைங்க , இந்த மாசம் ஜூலைக்கு மொத்தம் எத்தன நாள் ? " என்று தெளிவாகக் கேட்டார் செல்வா.

" இந்த டீடைல் இங்க கிடைக்காது சார் , இருந்தாலும் சொல்லுறேன் 31 நாள்! " என்றார்.

செல்வாவிற்கு தூக்கிவாரிப்போட்டது, மேலும் தான் ஏமாந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக அந்த அதிகாரியிடம் " அப்படின்னா எனக்கு தரவேண்டிய அந்த ஒருநாள எப்படி தருவீங்க ? " என்றார்.

" உங்களுக்குத் தரவேண்டிய ஒருநாளா? என்ன சொல்லுறீங்க ?" என்றார் அந்த அதிகாரி.

" கனெக்சன் தரும்போது அவ்ளோ அருமையா பேசுறீங்க, இப்ப மட்டும் மறந்திருவீங்களா ? என்னோட பிளான் படி எனக்கு 1440 நிமிஷம் இலவசம்னு சொன்னீங்கள்ல, 1440 நிமிசம்னா ஒரு நாள் , அந்த நாள எனக்கு எப்படி தரப்போறீங்க? அப்புறம் இலவசமா தர்ற நாளுக்கு(கிழமை) என்ன பேரு வைக்கப் போறீங்க ? அப்படின்னா என்னோட மாசத்துக்கு 32 நாள் வரணும்ல?" என்றார்.

செல்வாவின் இந்தக் கேள்வியால் கதிகலங்கிப்போன அந்த அதிகாரி உடனடியாக இணைப்பைத் துண்டித்தார்!

Wednesday, June 29, 2011

எதை விதைக்கிறீர்கள்?


செல்வாவின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார்.

வழக்கமான உபசரிப்புகள் முடிந்ததும் குடும்ப விசயங்களைப் பேசத்தொடங்கினர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த உறவினர் தங்கள் தோட்டத்தில் மிளகாய் நல்ல மகசூல் கொடுத்திருப்பதாகவும் அதை விற்பதற்கு ஏதேனும் வழி சொல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.

" நிச்சயமாக உதவுகிறோம்" என்று செல்வாவின் தந்தை உறுதியளித்தார்.

உள்ளூரில் இருந்த சிலரிடம் விசாரித்த செல்வாவின் தந்தை அனைவருமே வேகவைத்த மிளகாயே விரும்புவதைத் தெரிந்துகொண்டார்.

அடுத்தவாரம் வீட்டிற்கு வந்த அவரது உறவினரிடம் பச்சை மிளகாயை அதிக அளவில் யாரும் விரும்பமாட்டார்கள் என்றும் வேகவைத்துக் காயவைத்த மிளகாயையே அனைவரும் விரும்புகின்றனர் என்பதையும் எடுத்துக்கூறினார்.

இதைக்கேட்ட உறவினர் தங்கள் தோட்டத்தில் அதிக அளவு மிளகாய் விளைவதாகவும் ஒரே நேரத்தில் வேகவைப்பது சிரமம் என்றும் கவலைப்பட்டார்.

இதனை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த நமது செல்வாவிற்கு " என்ன விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்" என்ற பொன்மொழி ஞாபகம் வந்தது.

உடனடியாக அந்த உறவினரிடம் ஓடிய செல்வா " மாமா , உங்களுக்கு மிளகாய வேகவைக்கிறதுக்கு சிரமமா இருந்தா அத விதைக்கறதுக்கு முன்னமே அந்த விதைய வேகவச்சுடுங்க. வேக வச்ச விதைல இருந்து வேக வச்ச மிளகாய்தானே வரும்! " என்றார்.

Wednesday, June 22, 2011

இனி பெட்ரோலே தேவையில்லை!


தனது நீண்ட ஆராய்ச்சியின் பயனாக செல்வா பெட்ரோல் இல்லாமல்  மின்சாரத்தால் இயங்கும் வண்டியைக் கண்டுபிடித்தேவிட்டார்.

இதுவரை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் செல்வாவின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருந்தன. பெட்ரோல் இல்லாமல் ஓடுகின்ற வண்டியைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரண விசயமல்லவே!

உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் செல்வாவின் பெட்ரோல் இல்லாமல் ஓடும் வாகனத்தைப் பார்க்க ஆவலுடன் வந்துகொண்டிருந்தனர்.

செல்வா தனது வாகனத்தினைப் பார்வைக்கு வைத்திருந்தார். அது இயங்குவதற்கு பெட்ரோல் எதுவும் தேவைப்படாது என்றும் மின்சாரம் மட்டுமே போதுமானது என்றும் விளக்கிகொண்டிருந்தார்.

ஊர்ப்பொது மக்களும் ஆராய்ச்சியாளர்களும் செல்வாவின் வாகனத்தை அதிசயமாகப் பார்த்துகொண்டிருந்தனர்.

அப்பொழுது இது எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் செல்வாவிடம் கேட்டார்.

" இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது , இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் அனைத்து வாகனங்களும் சிறிது நேரத்திற்கே மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடியது. ஆனா என்னோட இந்த வாகனம் நீண்ட நேரத்திற்கு இயங்கும். அதனால எங்க போறதுனாலும் நீங்க இத நம்பி போலாம்! " என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகச் சொன்னார் செல்வா.

" அதுக்கு எவ்ளோ நேரம் சார்ஜ் போடணும் ? " என்றார் மற்றொருவர்.

" சார்ஜ் போட வேண்டியதில்லை , நம்ம வண்டிக்குப் பக்கத்துல இன்னொரு வண்டி இருக்கு பாருங்க அதுல ஒரு ஜெனரேட்டர் இருக்கும் அதுல இருந்துதான் இதுக்கான கரண்ட் வருது! "

" அப்ப அதுக்கு பெட்ரோல் ஊத்தனும்ல ?"

" கண்டிப்பா அதுக்கு ஊத்தித்தான் ஆகணும்! "

" அப்புறம் இது என்ன பெரிய கண்டுபிடிப்பு, நமக்கு அதிகமா செலவுதானே ஆகுது ?" என்று குழப்பமாகக் கேட்டார் அந்த நபர்.

" இந்த வண்டிய மட்டும் நீங்க வச்சிட்டு , அந்த வண்டிய வேற ஒருத்தருக்கு வித்திடுங்க , இப்ப நீங்க அதுக்கு பெட்ரோல் ஊத்த வேண்டாம்ல! " என்று தனது அறிவாளித்தனத்தை நிலைநாட்டினார் செல்வா.

Tuesday, June 21, 2011

ரயில்வேயும் செல்வாவும்!


இது செல்வா ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.

செல்வா ரயில்வே அதிகாரியாகப் பொறுப்பேற்று ஒரு நிலையத்தின் நிலைய அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்.

புதிய சிந்தனையுடைய நமது செல்வா அநேக மாறுதல்களைக் கொண்டுவந்தார். சில நாட்களிலேயே மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும் உயரதிகாரிகளும் செல்வாவைப் பாராட்டத் தொடங்கினர்.

ஆனால் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் "EMERGENCY EXIT " என்று எழுதப்பட்ட இடத்தில் ஒரு மாறுதல் கொண்டுவரும் வரையே நீடித்தது.

ஒருநாள் "EMERGENCY EXIT" என்ற இடத்தில் கம்பிகள் பொருத்தப்பட்ட ஜன்னலைக் கொண்டு அடைத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த உயரதிகாரி ஒருவர் எதற்காக இதனை அடைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

" சார் , எமர்ஜென்சி எக்சிட் அப்படிங்கிறது எதாச்சும் பிரச்சினைனா தானே வேணும் , எல்லா நேரத்திலும் எதுக்கு இருக்கணும் ? அதான் அடைக்கிறேன்! எப்பவாச்சும் எதாச்சும் பிரச்சினைனா நாம அந்த நேரத்துல இந்த ஜன்னல எடுத்திட்டு பழையபடி ஓட்டையா மாத்திடலாம்ல! " என்று தனது திட்டத்தைச் சொன்னார் செல்வா.

சற்றே அதிர்ச்சியாக செல்வாவைப் பார்த்த அந்த அதிகாரி செல்வா போன்ற அறிவாளிகளை வெறும் ரயில்வே துறையில் வைத்து அவரது அறிவினை வீணாக்க விரும்பாமல் உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கினார்.

Thursday, June 16, 2011

தமிழ் தெரியாதுனா சொல்லவேண்டியதுதானே!


ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் சுற்றுலா செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தனர்.

சுற்றுலா செல்லலாம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்த நாளில் செல்வாவின் நண்பர் செல்வாவின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

நீண்ட நேரம் கழித்து வந்த செல்வாவிடம் " ஏன்டா இவ்ளோ நேரம் ? ஒரு மனுஷன் எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்ணுறது ? "

" எங்க வீட்டுல இருந்து இங்க வரதுக்கு ஒரே ஒரு பஸ் தான் இருக்கு , அதுவும் போயிருச்சு! அதான் நடந்தே வரேன்! அதனால லேட் ஆகிருச்சு " என்றார் செல்வா.

" எரும , வர்ற வழில டூ வீலர்ல வர்ற யாரச்சும்கிட்ட லிப்ட் கேட்டு வரலாம்ல! "

" லிப்டுனா பெரிய கட்டடத்துல கீழ இருந்து மேல போறதுக்கு வச்சிருப்பாங்களே அதுதானே ? டூ வீலர்ல எப்படி அவ்ளோ பெரிய லிப்ட்ட எடுத்துட்டு வர முடியும்?" என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார்.

இதற்குமேல் பேசினால் வீண் விவாதங்கள் வரலாம் என்று மேற்கொண்டு பேசாமல் தாங்கள் ஏற்கெனவே பேசிவைத்திருந்த சுற்றுலாத் தளத்திற்கு விரைந்தனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் செல்வாவின் நண்பர் செல்வாவை தனியாக விட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த அவரது நண்பர் செல்வாவும் வேறொருவரும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

" டேய் , ஏண்டா அவர் கூட சண்டை போடுற ? " 

" அவன் என்ன சொன்னான்னு நீயே கேளு ! "

அருகில் இருந்த நபரிடம் " என்ன பிரச்சினைங்க ?" என்றார் செல்வாவின் நண்பர்.

இவர் என்ன கேட்டார் என்று புரியாத அந்த நபர் " I DON'T KNOW TAMIL " என்றார்.

செல்வாவிடம் திரும்பிய அவரது நண்பர் " டேய் லூசு , அவருக்கு தமிழ் தெரியாதாம்ல , அப்புறம் எதுக்கு அவர் கூட சண்டை போட்டுட்டு இருக்க ?"

" தமிழ் தெரியலைனா தமிழ் தெரியாதுன்னு சொல்லவேண்டியதுதானே ?! " என்று கோபமாகக் கேட்டார் செல்வா.

" தமிழ் தெரியாதுன்னு தான சொல்லுறாரு ? "

" தமிழ் தெரியாதுன்னு தமிழ்ல சொல்லவேண்டியதுதானே !? அப்பத்தான எனக்கு புரியும்! " என்ற செல்வாவைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டு " வா போலாம்! " என்று அழைத்துச்சென்றார்.

Thursday, June 9, 2011

செல்வாவின் வித்தியாசமான சிந்தனை!


செல்வா ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். செல்வாவின் திறமை கண்டு வியந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வாவிடம் ஒரு பொருளை விளம்பரப்படுத்த வித்தியாசமாக முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

செல்வாவும் அந்தப் பொருளினைப் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொண்டு தனது அறைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் சிறு பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய கடைக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் துணைக்கு வரும்படியும் செல்வாவை அழைத்தார்.

" என்ன பிரச்சினை ? " என்றார் செல்வா.

" யாராச்சும் SMS அனுப்பினா அரை மணிநேரம் கழிச்சுதான் எனக்கு வருது  , அதான் என்னனு பாக்கணும்" என்றார் நண்பர்.

" இதுக்கு ஏன் கடைல கொடுக்குறீங்க ? , உங்களுக்கு SMS அனுப்புறவர்கிட்ட அரை மணிநேரம் முன்னாடியே அனுப்ப சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சதுல! " என்றார்.

இதற்குப் பிறகு அந்த நண்பர் எதுவும் சொல்லமால் செல்வாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வா அந்த விளம்பரத்திற்குத் தேவையான ஒரு வித்தியாசமான கற்பனையை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு மேலாளரிடம் சென்றார்.

செல்வாவின் கற்பனையைப் படித்துப்பார்த்த அவரது மேலாளர் தனது வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அப்படி என்னதான் செல்வா வித்தியாசமாக எழுதித் தொலைத்தார் ? செல்வா எழுதிய வித்தியாசமான கற்பனை இதோ!


                                        ****** போன் விளம்பரம்!

*.எங்கள் போன் விலை மற்ற போன் விலைகளைக் காட்டிலும் மிகக் குறைவு , மற்ற போன்களின் விலை 4000 என்றால் எங்கள் போன்களின் விலை வெறும் 6000 மட்டுமே!

*.எங்கள் போன்கள் மிகமிக வலிமையானவை. எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் உடனே உடைந்து போகக்கூடியவை!


*.மிகச்சிறந்த பேட்டரி வாழ்நாளை உடையவை. ஒருநாளைக்கு 24 மணிநேரம் சார்ஜ் செய்தாலே 10 நிமிடம் வரை பேட்டரி சார்ஜ் நிக்கக்கூடியது!Friday, June 3, 2011

சரியான எடை!


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்வா வீட்டில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.  

சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாயார் சிறிது நேரம் கழித்து செல்வாவை அழைத்து கேஸ் தீர்ந்துவிட்டதாகவும் , அருகில் இருக்கும் பாரத் கேஸ் விற்பனையகத்திற்குச் சென்று வாங்கிவருமாறும் கூறினார். மேலும் கேஸின் எடை அளவினை சோதனை செய்து வாங்கிவருமாறும் கூறினார்.

செல்வாவும் காலியான கேஸ் ட்ரம்முடன்  விற்பனையகத்திற்குச் சென்றார். சிறிது நேர காத்திருப்பிற்குப் பின்னர் அவருக்கு புதிய கேஸ் ட்ரம் கிடைத்தது. அதன் எடையை சோதனை செய்யவேண்டும் என்று கூறிய செல்வா அங்கிருந்த எடைக்கல்லின் மீது வைத்து எடயினைச் சரிபார்த்தார்.

நிரப்பப்பட்ட ட்ரம்மின் எடை 29.4 KG எடை வந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்த செல்வா காலி ட்ரம்மின் எடை 15.2 KG எனவும் அதில் நிரப்பப்பட்டுள்ள கேஸின் எடை 14.2 KG எனவும் அறிந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது தாயார் 

" இங்க இருக்கிற கேஸ் எடுத்துட்டு வரதுக்கு இவ்ளோ நேரமாடா ? " என்றார்.

அதற்கு செல்வா " இல்லமா , நீ எடை செக் பண்ணி வாங்கிட்டு வரச்சொன்னதால முதல்ல மொத்தமா எடைபோட்டேன் , அப்புறம் ட்ரம் எவ்ளோ எடைன்னு தெரிஞ்சிக்க உள்ள இருக்குற கேஸ் எல்லாத்தையும் பிடுங்கிவிட்டுட்டு மறுபடியும் எடை போட்டேனா அதான் லேட் ஆகிருச்சு! " என்றார்.

Friday, May 27, 2011

பாட்டியின் இறப்பு!


அன்று செல்வா மிகவும் சோகமாக இருந்தார். மேலும் அழுதுகொண்டே இருந்தார்.

செல்வாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துகொண்டிருந்தனர்! செல்வா இப்படி உடைந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் செல்வாவைத் தேற்றிக்கொண்டிருந்தார்.

" அழாத செல்வா , பாட்டிக்கு வயசாய்டுட்சுல அதான் இறந்திட்டாங்க! உனக்கும் ஒருநாள் வயசாச்சுனா நீயும் சாகலாம் இரு! " என்று கல்யாணத்திற்கு வாழ்த்துவது போல ஆறுதல் கூறினார். உண்மையில் அவரும் செல்வா போன்ற அறிவாளியாக (?!) இருந்திருக்க வேண்டும். ஆனால் செல்வா தரப்போகும் அதிர்ச்சி அவருக்கு இப்பொழுது தெரியாது.

சிறிது நேரம் செல்வாவைத் தேற்றிக்கொண்டிருந்த அவரது உறவினர் அப்பொழுது கண்ட காட்சியால் மயங்கிவிழும் அளவிற்கு அதிர்ச்சியுற்றார்.

இறந்துவிட்டதாக சொன்ன செல்வாவின் பாட்டி நல்ல ஆரோக்யத்துடன் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த செல்வா

" இந்தப் பாட்டிதான் இறந்திட்டாங்க ! " என்றார்.

அவரது உறவினருக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. இது வழக்கம்போல அறிவாளி(?!) செல்வாவின் முட்டாள்தனங்களில் ஒன்றாக இருக்கும் என்று எண்ணியவர் , செல்வாவிடம்

" என்னடா ,செத்துட்டாங்கன்னு சொல்லுற, இப்ப உயிரோட வராங்க! "என்றார்.

" அவுங்க இப்ப சாகல, இன்னும் பத்து வருஷம் கழிச்சு செத்திட்டாங்க! அதான் அழுறேன்!" என்றார் செல்வா.

செல்வாவின் உறவினருக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. " பத்து வருஷம் கழிச்சு செத்துப் போவாங்கன்னு இப்ப எதுக்கு அழுகுற? "

" நேத்திக்கு பக்கத்து வீட்டுல ஒருத்தர் செத்ததுக்காக கூரை மேல சோறு போட்டாங்களா  அத பாத்த எங்க அப்பா " உயிரோட இருக்கும்போது சோறு போடலை , இப்போ போடுராணுக பாரு ! " அப்படின்னு திட்டினாரு. எங்க பாட்டி செத்த பின்னாடி அழுதா அவுங்களுக்குத் தெரியாதுல , அதான் உயிரோட இருக்கும்போதே அழுதிடலாம்னு அழுறேன்! " என்றார் செல்வா அழுதுகொண்டே.

அப்பொழுது உள்ளே வந்த அவரது தந்தையைப் பார்த்த உறவினர் " அவுங்க கூரை மேல சோறு போடுறாங்கனா அது அவுங்க நம்பிக்கை , அத ஏன் கிண்டல் பண்ணுறீங்க ? இப்ப பாருங்க இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்னு! " என்று கூறிவிட்டு கிளம்பளானார்.

Thursday, May 26, 2011

அறிவாளிகள் அழிவதில்லை!


செல்வாவும் அவரது நண்பரும் ஒரே ஊரில் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்ததால் இவர்களே சமையல் செய்து சாப்பிட்டு வந்தனர்.

ஒருநாள் செல்வா சமையலை முடித்துவிட்டு அவரது நண்பரை சாப்பிட அழைத்தார். செல்வா வைத்திருந்த குழம்பு நுரைதள்ளி வெண்மையாகக் காட்சியளித்தது.

" டேய் , என்னடா இது ? இப்படி பொங்கிப்போய் கிடக்குது!" என்றார் நண்பர்.

" அது உப்பு தீர்ந்து போச்சா , அதான் டூத் பேஸ்ட்ட எடுத்து போட்டுட்டேன்! " என்றார் செல்வா.

" டூத் பேஸ்ட்ட எதுக்கு எடுத்த அதுக்குள்ளே போட்ட ? " 

" நீதான சொன்ன , அதுல உப்பு இருக்குனு ! " என்றார் செல்வா சிரித்தவாறே.

" அடேய், அது பல்லு விளக்கறதுக்கு பயன்படுத்துறது ! ஏண்டா உயிரை எடுக்குறீங்க ? விளம்பரத்துலதான் இது போட்டு பல்லு விளக்கலைனா பல்லு போய்டும்னு சொல்லுறாங்க , நீ அத விட ! கொடுமைடா! " என்று அலுத்துக்கொண்டே குழம்பினை எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு வெளியில் சென்று சாப்பிட்டுகொள்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கு என்று விளம்பரத்தைப் பார்த்துதானே அப்படிசெய்தோம் என்று குழம்பிப்போனார்.

மாலையில் வீடுதிரும்பிய செல்வாவின் நண்பர் செல்வா சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.

" ஏன்டா ? என்னாச்சு ? மறுபடியும் டூத்பேஸ்ட்ல எதாச்சும் பண்ணி வச்சிருக்கியா ? " என்றார் நக்கலாக.

" அதெல்லாம் இல்ல , உங்க மேனஜர் செய்யுற வேலைகள்ல பாதி நீ செஞ்சு தரதால உன்ன சீக்கிரமா ப்ரோமோசன் பண்ணினார்னு சொன்னீல , அதே மாதிரி நானும் எங்க ஓனர் கிட்ட அவரோட வேலை எதாச்சும் நான் பண்ணுறேன்னு கேட்டேன் , அதுக்கு திட்டி அனுப்பிட்டாங்க! " என்றார் சோகமாக.

" திட்டுற அளவுக்கு அப்படி என்ன கேட்ட ? "

" நான் வேணா கொஞ்ச நாளைக்கு MD யா இருக்கட்டுமான்னு கேட்டேன்! அதான் கண்டபடி திட்டினார் " என்றார் செல்வா.அழுதவாறு!

Tuesday, May 24, 2011

ஆவினன்குடி தரிசனம்!


செல்வாவின் வீட்டிற்கு ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார்.

செல்வாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு " உங்க ஜாதகத்துல 12 ல ராகு இருக்குறது அவ்வளவு நல்லதில்லையே?! " என்றார்.

"அப்படின்னா அந்த 12 வது கட்டத்த அடிச்சு விட்டிருங்க , ராகு போய்டுவார்ல ?! " என்றார் செல்வா.

கோபம் வந்தாலும் அதனை மறைத்துக்கொண்டு " அப்படியெல்லாம் பண்ண முடியாது , நீங்க ஒரு தடவ பழனி மலை அடிவாரத்துல இருக்குற திருஆவினன்குடி கோயிலுக்குப் போயிட்டு வாங்க! உங்களுக்கு நல்லது! , வேற எதாச்சும் சந்தேகம் இருக்கா ? " என்று கேட்டார் சோதிடர்.

" இருக்கு , ஆனா உங்களுக்கு தெரியுமா இல்லியான்னு தெரியலையே ?! "

" சும்மா கேளுங்க , எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுறேன்! " 

" ஆடு ஏன் வெள்ளைக் கலர்லயும் , கருப்புக்கலர்லையும் மட்டும் குட்டி போடுது ? ஏன் பச்சை , சிவப்புக் கலர்ல குட்டி போடுறது இல்லை ?! " என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார் செல்வா. இந்தக் கேள்வியினை காதில் வாங்கிய சோதிடர் அவரது மூளைக்கு இந்தக்கேள்வி செல்வதற்குள் செல்வாவின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு செல்வா சோதிடர் சொன்னது போல பழனி திருஆவினன்குடி கோவிலுக்குச் செல்லலாம் என்று கிளம்பினார்.

பேருந்து நிலையத்தில் இறங்கிய செல்வா கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது கோவிலிலிருந்து ஒரு 200 மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த பொழுது அங்கிருந்த தேங்காய் பழம் விற்கும் கடைக்காரர் ஒருவர் " உங்க செருப்ப இங்க விட்டுட்டுப் போங்க! காசு தரவேண்டாம்! " என்றார்.

செல்வாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நம்ம மேல அவ்ளோ மரியாதையா என்று நினைத்துக்கொண்டு  செருப்பினை அவரது கடையில் விட்டுவிட்டு கோவிலுக்குச் செல்ல முற்பட்டார். 

" சார், சாமிக்கு தேங்காய் பழம் வாங்கிட்டு போங்க! " என்றார் கடைக்காரர்.

செல்வா ஏற்கெனவே வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்ததால் வேண்டாமென்றார்.

" அப்படின்னா செருப்ப எடுத்துகோங்க , தேங்காய் பழம் வாங்கினா மட்டும்தான் நாங்க உங்க செருப்பப் பார்த்துக்குவோம்"  என்று கூறியதால் செல்வா தனது செருப்பினை போட்டுக்கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார்.

அடுத்த கடைக்காரரும் அதே போல அழித்து அங்கேயும் தேங்காய் பழம் வாங்க வேண்டும் என்று கூறியதால் மீண்டும் செருப்பினைப் போட்டுக்கொண்டு கோவில் வாசல் வரை சென்றுவிட்டார். 

அங்கு செருப்பினை விடுவதற்கு ஏதேனும் கடைகள் இருக்கின்றதா என்று சுற்றும் முற்றும் பார்த்தவர் எங்கும் கடைகள் இல்லாததால் கோவில் வாசலில் விட்டுவிட்டு கோவிலுக்குள் சென்றார்.

கோவிலுக்குள் சென்றவர் கோவிலின் கருவறையைச் சுற்றிவந்துவிட்டு நேராக முருகப்பெருமானைப் பார்த்து " என்னோட செருப்ப யாரும் எடுத்துட்டுப் போய்டக்கூடாது! " என்று வேண்டிவிட்டு வேகமாக கோவிலிலிருந்து வெளியில் வந்தார்! பழனி சென்று செருப்பினை யாரும் எடுத்துட்டுப் போய்டக்கூடாது என்று வேண்டியவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

பின்குறிப்பு : இந்தக் கதைல சோதிடர் சொன்னதா சொன்னது கற்பனை. ஆனா நான் பழனி கோவிலுக்குப் போனதும் அந்த தேங்காய் பழக்கடைக்காரர் கூப்பிட்டதும் உண்மை. ஆனா நான் வேண்டினது கற்பனை. ஏன்னா நான் என்ன வேண்டுவேன்னு உங்களுக்குத் தெரியும். நான் சீக்கிரமா RJ ஆகணும்கிறத  தவிர வேற என்ன வேண்டிக்கப்போறேன்?

Saturday, May 14, 2011

ராசிபலன்!


நாட்காட்டியில் தனது ராசிக்கான பலனைப் பார்த்தவுடன் இன்று வேலைக்குச் செல்வதில்லை என்ற முடிவிலிருந்தார் செல்வா!

இந்நேரத்துக்கேல்லாம் ரெடி ஆகிருப்பானே, எங்க ஆளக் காணோம் ?  என்று நினைத்தவாறு செல்வாவுடன் வேலை செய்யும் அவரது நண்பர் செல்வாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

" என்னடா இப்படி உட்கார்ந்திட்டு இருக்க ? வேலைக்கு வரலியா ? "

" இல்ல " என்றார் செல்வா.

" ஏன் , ஒடம்பு சரியில்லையா ? "

" அதெல்லாம் இல்ல , இன்னிக்கு என்னோட ராசிக்கு தீமைனு ராசிபலன் போட்டிருக்கு அதான் வேலைக்கு வந்தா ஏதாச்சும் ஆகிடும்னுதான் வரல! "

" ஏன்டா , காலண்டர்ல போட்டிருக்குற ராசிபலன கூடவா நம்புற  ? எனக்கு அதுல நம்பிக்கை இல்ல , நீ என்கூடவே வா , உனக்கு என்ன தீமை நடக்குதுன்னு பார்க்கறேன்!" என்று கிண்டலாகக் கூறினார் நண்பர்.

" போடா வெண்ண , ராசிபலன் உண்மை! தெரிஞ்சிக்க "

" அதெல்லாம் டுபாகூருடா , ஒழுங்கு மரியாதையா என்கூட வேலைக்கு வந்திடு ! "

சிறிது நேரம் வாதாடிப் பார்த்த செல்வா அவரது நண்பர் ராசிபலன் முழுவதும் பொய் என்றும் தான் நம்ப மாட்டேன் என்றும் கூறுவதைக் கேட்டு நண்பருடன் அலுவலகம் செல்ல முடிவு செய்தார். இருவரும் வேலைக்குக் கிளம்பினர். சிறிது தூரம் சென்றது செல்வா

" டேய் , பூனை குறுக்கால வருதுடா , இது கெட்ட சகுனம்  நான் வரல ! " என்று மறுபடியும் திரும்பி வீட்டிற்கே வந்துவிட்டார்.

தண்ணி குடிச்சா சகுனம் போய்டும் , அதனால தண்ணிகுடிச்சிட்டுத் போலாம் என்ற நண்பரின் ஆலோசனையை ஏற்று தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் வேலைக்குக் கிளம்பினர் இருவரும்.
மறுபடியும் சிறிது தூரத்தில் வெள்ளைப் புடவை உடுத்திய ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த செல்வா " டேய் , இதுவும் கெட்ட சகுனம்டா , இனி நீ என்ன சொன்னாலும் வர மாட்டேன் ! " என்று கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்.

அவரது நண்பருக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் அவர் மட்டும் வேலைக்குச் சென்றார்.

மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய அவரது நண்பர் செல்வாவிடம் சென்று ராசிபலனைப் பற்றிக் கிண்டல் செய்யலாம் என்று செல்வாவின் வீட்டிற்கு வந்தார்.

" ஏன்டா , என்னமோ தீமைனு சொன்ன ? எதாச்சும் நடந்திச்சா ? " என்றார் நக்கலாக.

" ஆமாடா , காலண்டர்ல போட்டிருந்த மாதிரியே தீமை ஆகிப்போச்சு! " என்றார் சோகமாக.

நண்பருக்கு ஆச்சர்யம். " அப்படி என்னடா தீமை நடந்திச்சு ? "

" நம்ம குமாரு இருக்கான்ல , அவன் காலைல என்கிட்டே வந்து " ஏன்டா வேலைக்குப் போகலை " ன்னு கேட்டானா, நானும் ராசிபலன் பத்தி சொன்னேன்!" அதுக்கு அவன் " நீ எப்பத்தான் ஒழுங்கா வேலைக்குப் போயிருக்க? வேலைக்குப் போகாமா இருக்க இப்படி ஒரு சாக்கு ! " அப்படின்னு திட்டினான். எனக்கு செம கோவம் வந்திருச்சு. உடனே அவன் மூஞ்சியப் பாத்துக் குத்திட்டேன்! மூக்கெல்லாம் ரத்தமா ஒழுகுச்சு! நீ காலண்டர் ராசிபலன் பொய்னு சொன்ன , உண்மை ஆகிருச்சு பாரு! " என்றார் செல்வா.

" இதுல உனக்கு எங்க தீமை நடந்துச்சு ? , உனக்கு ஒரு தீமையும் இல்லைனா ராசிபலன் பொய்தானே!" என்றார் நண்பர் ஆவலாக.

" அதான் குமாருக்கு நடந்திசுல ! "

" குமாருக்கு நடக்குறதுக்கும் நீ சொன்னதுக்கும் என்ன சம்பந்தம் ? "

" லூசு, குமாருக்கும் எனக்கும் ஒரே ராசி! எனக்கு நடக்கலைனாலும் குமாருக்கு நடந்திச்சுல! " என்றார் செல்வா.

" அப்படின்னா காலண்டர்ல போட்டிருக்கறது யாரோ ஒருத்தருக்குத்தான் நடக்குமா ? அப்புறம் எதுக்கு அத நம்புற ? "

" ஹி ஹி " என்று பதில் சொல்லத்தெரியாமல் இளித்தார் செல்வா.

Tuesday, May 10, 2011

அறிவுக் கொழுந்து!

.
நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார் செல்வா.

செல்வாவின் பக்கத்து வீட்டுப் பெண் ( குழந்தை என்று சொல்லலாம் , இரண்டாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள் ) கையில் ஷாம்பூ பாக்கட்டுடன் வந்துகொண்டிருந்தாள்.

" சைக்கிள்ள போலாம்ல , ஏன் நடந்து போற ? " என்றார் செல்வா.

" சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா நான் ஏன் அண்ணா நடந்து போகப்போறேன் ? " என்றாள் அந்தச் சிறுமி.

" அட , எனக்கும் கூடத்தான் பஸ் ஓட்டத் தெரியாது , நான் பஸ்ல போகலையா என்ன ? "

செல்வாவின் இந்த நக்கலைக் கேட்டதும் கீழே இருந்த ஒரு கல்லைக் கையில் எடுத்தாள். சற்று பயந்த செல்வா " அட சும்மா லுளுலாய்க்கு சொன்னேன் , ஹி ஹி " என்று வழியலானார்.

அந்தச் சிறுமியும் செல்வாவை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் பேருந்திற்காகக் காத்திருந்த செல்வா சட்டென எதையோ மறந்தவராக " அடச்சே" என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பி வீட்டிற்கே சென்றார்.

வீட்டிற்குச் சென்றவர் வாடகைக்கு இரண்டு மினி ஆட்டோக்களை அழைத்தார். ஒரு ஆட்டோவின் மீது ஆளுயரக் கண்ணாடியை வைத்துவிட்டு இன்னொரு ஆட்டோவின் மீது ஏறி அமர்ந்துகொண்டார்.

வடிவேலு ஸ்டைலாக ஆட்டோவின் மீது அமர்ந்து எதிரிலுள்ள ஆட்டோவில் தனது உருவத்தைப் பார்த்தாவாறே பயணம் செய்தார்.

நண்பரின் வீடு வந்ததும் கீழே இறங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியையும் எடுத்து தனக்கு முன்னர் பிடித்தவாறு நண்பரின் வீட்டிற்குள் சென்றார்.

தனது உருவத்தைப் பார்த்தவாறே சென்றதால் எதிரில் என்ன இருக்கிறதென்பதைப் பார்க்கமுடியாமல் தவறிக் கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரது நண்பர் செல்வா கீழே விழுந்து கிடப்பதையும் , கண்ணாடி உடைந்து கிடப்பதையும் பார்த்தார்.

" என்ன எழவுடா இது ? " என்று திட்டியவாறே கீழே விழுந்துகிடந்த செல்வாவைத் தூக்கினார்!

" நீதான நேத்திக்கு எங்கிட்ட ஒடம்ப பார்த்துக்கனு சொன்ன, அதான் ஒடம்ப பார்க்கணும்னா கண்ணாடி வேணும்ல அதுக்குதான் வாங்கி ஆட்டோ வாடகைக்கு வச்சு ஒடம்ப பார்த்துட்டே வந்தேன். இங்கயும் கண்ணாடியே எடுத்து ஒடம்ப பார்த்துட்டே வந்தேனா திடீர்னு கீழ விழுந்திட்டேன்! " என்றார் செல்வா.

" நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ? எதையுமே அப்படியேதான் புரிஞ்சிக்குவியா ? என்ன சொல்லவராங்கன்னு புரிஞ்சிக்காம அப்புறம் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பழிபோடுறது! ஒடம்ப பார்த்துக்கறதுனா கண்ணாடில பாக்குறது இல்ல ! "

" அப்படின்னா வீடியோ எடுத்து அதுல பாக்கணுமா ? " அப்பாவியாகக் கேட்டார் செல்வா.

ஏதோ சொல்ல வாயைத் திறந்த அவரது நண்பர் கோபமாக முறைத்துவிட்டு செல்வாவின் காயங்களுக்கு மருந்து எடுக்கச் சென்றார்.

வாழ்த்து : நம்ம எல்லோரும் எப்படா இந்த பருவத்தைத் தாண்டுவோம் அப்படின்னு யோசிச்சிருப்போம் , ஆனா அது எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு இன்னும் மாணவனாவே இருக்கிற எங்கள் மாணவன் சிலம்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 

Wednesday, May 4, 2011

விளையும் பயிர்!


செல்வாவின் வீட்டில் கோழி ஒன்று அடைகாத்து வந்தது!

செல்வா ஏதேனும் ரகளை செய்துவிடுவார் என்று அஞ்சிய அவரது தாயார் செல்வாவிடம் எச்சரிக்கை செய்தார்.

செல்வா வழக்கம்போல தனது அறிவாளித்தனத்தை(?!) அரங்கேற்றி இருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு கோழி அடைகாத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து கெட்ட வாடை வருவதை உணர்ந்த அவரது தாயார் அது எதனால் வருகிறதென்று சோதித்தார்.

அடைகாக்க வைக்கப்பட்டிருந்த சில முட்டைகள் அவிக்கப்பட்டு , மசாலா பொடிகள் தூவப்பட்டு , எண்ணெயில் பொரிக்கபட்டிருந்தன!

செல்வாவின் தாயாருக்கு அதிர்ச்சி! யார் இப்படி செய்திருப்பார்கள் என்று அவர் நீண்ட நேரம் யோசிக்கவில்லை, செல்வாதான் இதை செய்திருப்பார் என்பதையும் ஊகித்தவர் செல்வாவிடம் விசாரித்தார்.

" எதுக்குடா முட்டைய அவிச்சு , மசாலா போட்டு வச்சிருக்க ? " என்றார் கோபமாக.

"எனக்கு எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும் ,அதான் அப்படி பண்ணினேன்! "

" எண்ணெய்ல பொரிச்ச கோழி வேணும்னு , முட்டைய எதுக்கு அவிச்சு அடைல வச்சிருக்க ? "

" நீங்கதானே சொன்னீங்க பிற்காலத்துல  என்ன ஆகணுமோ அத சின்ன வயசுல இருந்தே பழக்கப்படுத்திக்கணும்னு , அதான் இப்பவே அத அவிச்சு வச்சிட்டா அது கோழியா வளர்ந்ததுக்கு அப்புறம் இன்னொரு தடவ அவிக்க வேண்டாம்ல , அப்படியே பிடிச்சி சாப்ட்றலாம்ல? அதான் அப்படி பண்ணினேன்! " என்று தனது நியாயத்தைக் கூறினார் செல்வா.

செல்வாவின் இந்தப் பதிலைக் கேட்ட அவரது தாயார் " நீ சொல்லுறதும் சரிதான் , இங்க பல பேர் இப்படித்தான் இருக்காங்க! அவுங்க பசங்க பெரிய படிப்பாளியா வரணும்னு பக்கத்து வீட்டுப் பசங்ககூட கம்பேர் பண்ணுறது ,  அவன் ரண்டு வயசுலேயே நூறு திருக்குறள் மனப்பாடம் பண்ணிருக்கான் உனக்கு ஒண்ணுமே தெரியாது, நீ எதுக்குமே லாயக்கு இல்ல  அப்படி இப்படின்னு திட்டவேண்டியது , அவனும் சின்ன வயசுல இருந்தே நாம எதுக்கும் ஆக மாட்டோம் போலன்னு நினைச்சு நினைச்சே வீணாப் போயிடறான்! " என்று கூறிவிட்டு செல்வாவிடம் அவித்த முட்டை குஞ்சு பொறிக்காது என்பதை விளக்கினார்.

Monday, May 2, 2011

அட்சய திருதியை!


அன்று செல்வா மிகவும் சோகமா இருந்தார்!

அப்பொழுது அங்கு வந்த அவரது நண்பர் செல்வா சோகமாக இருப்பதைப் பார்த்தார். செல்வா இவ்வளவு சோகமாக இருந்து அவர் இதுவரை பார்த்தே இல்லை.

" என்னடா ஆச்சு , கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க ? " என்றார் அந்த நண்பர்.

" கப்பல் கவுந்தா எல்லோரும் ஒரே அடியா போய்ச் சேர்ந்திருவாங்க , அப்புறம் எங்க உட்காருறது ? " என்று அந்த சோகத்திலும் நண்பரின் தவறினைச் சுட்டிக்காட்டி தான் அறிவாளி(!?) என்பதை நினைவுறுத்தினார் செல்வா!

" ஒழுங்கா சொல்லுடா , ஏன் சோகமா இருக்க ? "

" அது ஒன்னும் இல்லை , இந்த வீட்ட விக்கப் போறேன்! அதான் அழுகை அழுகையா வருது" என்று தான் குடியிருந்த வீட்டினை விற்கப் போவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட அந்த நண்பருக்கு அதிர்ச்சி. ஏனென்றால் செல்வாவிற்கு வீட்டினை விற்கும் அளவு எந்தச் செலவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

" வீட்ட விக்குற அளவுக்கு உனக்கு அப்படி என்னடா செலவு ? " என்றார் நண்பர் சற்று அதிர்ச்சியாக.

" அது வந்து , போன வருஷம் அட்சய திருதியை வந்துச்சுல்ல , அப்போ நகை வாங்கினா செல்வம் பெருகும்னு சொன்னாங்க , அதான் அப்போ அதிக வட்டிக்குக் கடன் வாங்கி தங்கம் வாங்கினேன் , ஆனா செல்வம் பெருகவே இல்ல. இப்ப வட்டி ரொம்ப அதிகமா போய் நான் வாங்கின தங்கத்த வித்தா கூட பத்தாத அளவுக்கு வந்திடுச்சு, அதான் வீட்ட வித்துக் கடன அடைக்கப் போறேன்! " என்றார் செல்வா சோகமாக.

" அட பாவி , வீட்ட வித்து கடன அடைக்கணும்னா அதிகமா வாங்கிருப்ப போல ! கைல இருக்குற காசுக்கு தங்கம் வாங்கித் தொலைய வேண்டியதுதானே ?! "

" அப்போ எங்கிட்ட பணம் கொஞ்சமா தான் இருந்துச்சு , சரி கம்மியா தங்கம் வாங்கினா அந்த அளவுக்குத்தானே செல்வம் வளரும் , அதான் கொஞ்சம் அதிகமா வாங்கினா இன்னும் அதிகமா வளரும்ல , அதான் அரை கிலோ தங்கம் வாங்குற அளவுக்கு கடன் வாங்கினேன்! "

" உன்ன எல்லாம் திருத்தவே முடியாது , இனிமேலாச்சும் இந்த மாதிரி மூட நம்பிக்கைய நம்பாத ! "என்று அறிவுரை கூறினார் நண்பர்.

" எது மூட நம்பிக்கை , உண்மைல அட்சய திருதியை அன்னிக்கு எதாச்சும் பண்ணினா அது பெருகும் தெரிஞ்சிக்க ! " என்றார் செல்வா.

" நீ இன்னும் திருந்தலையா ? என்ன பெருகுச்சு உனக்கு ? "

" ஆமா , போன வருஷம் அட்சய திருதியை அன்னிக்கு கொஞ்சம் தான் கடன் வாங்கினேன் , இந்த வருஷம் இவ்ளோ கடன் ஆகிருச்சு பாரு ? " என்றார் செல்வா.

" கடன் எப்ப வாங்கினாலும் வளரும்! , இதப் போய் அட்சய திருதியை கூட கம்பேர் பண்ணி? , உன்னயெல்லாம் ?! " என்று செல்வாவை முறைத்தார் நண்பர்.

பின்குறிப்பு : அட்சய திருதியை உண்மையோ பொய்யோன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா இப்போ காதுல கேக்குற விளம்பரங்கள் எல்லாமே அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கலைனா போலீஸ் பிடிச்சிட்டுப் போயடும்கிற அளவுக்கு இருக்கு! அதனாலதான் இப்படி :-)