Friday, April 29, 2011

செல்வா எழுதிய நீதிக்கதை!


இது செல்வாவின் பள்ளிக்காலத்தில் நடந்த சம்பவம்.

அப்பொழுது செல்வா பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்தார்.

அன்று அவரது தமிழாசிரியர் " பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்! " என்ற நீதியை விளக்கும்படி நீதிக்கதை எழுதுமாறு கூறி இருந்தார்.

வகுப்பில் உள்ள அனைவரும் தனித்தனியாக அமர்ந்து தத்தமது கதைகளை எழுதத் தொடங்கினர்.

செல்வாவும் எவ்வளவோ யோசனை செய்தும் அவரால் கதை எழுத முடியவில்லை. இருந்தபோதிலும் எழுதுவது போல பாசாங்கு செய்துகொண்டிருந்தார்.

சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த செல்வா பின்னர் தனக்கு முன்னாள் அமர்ந்திருந்த மாணவரிடம் அவர் எழுதிய கதையைக் காட்டுமாறு கூறினார். ஆனால் அவர் காட்ட முடியாது என்று கூறியதோடு ஆசிரியரிடமும்  போட்டுக்கொடுத்தார்.

" படிச்சு எழுதுறதுல தான் ஒழுங்கா எழுத மாட்டிங்கிற, இது கதைதானே , இதையுமா பார்த்து எழுதுவ ? " என்றார் ஆசிரியர் கோபமாக.

" சார் , நான் ஒன்னும் பாத்து எழுதுறதுக்காக அவன் கிட்ட கேக்கல , போன தடவ கணக்குப் பரிட்சைல நாங்க ரண்டுபேரும் 15*15 = 255 னு எழுதினதுக்கு கணக்கு வாத்தியார் ஏண்டா பார்த்து எழுதினணு திட்டினார் , ஆனா மத்தவங்க எல்லோருமே 15*15= 225 னு எழுதிருந்தாங்க, அவுங்கள திட்டல! அதான் இந்த தடவையும் அவன் எழுதின கதையவே நானும் எழுதிட்டா என்ன திட்டுவீங்கனுதான் , அவன் எழுதினத பார்த்துட்டு அது மாதிரி இல்லாம வேற எழுதலாம்னு கேட்டேன்! " என்றார் செல்வா.

" உனக்கு என்ன வருதோ அத எழுது ! இனிமேல் திரும்பி பார்க்குறத பார்த்தேன்னா அப்புறம் நடக்குறதே வேற ! " என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் ஆசிரியர்.

செல்வாவிற்கு இருந்த ஒரு நம்பிக்கையும் வீணாய்ப் போனது. மற்ற மாணவர்கள் சிலர் இன்னமும் வேக வேகமாக எழுதுவதும் , சிலர் எழுதி முடித்துவிட்டு கிளம்புவதுமாக இருந்தனர். செல்வாவும் தேர்வு நேரம் முடியும் வரையிலும் முயற்சித்துப் பார்த்தார். அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. இறுதியாக ஒரு வரி மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.

அன்று மதியம் ஆசிரியர் அனைவரின் கதைகளையும் படித்துக்கொண்டிருந்தார். செல்வாவின் பேப்பரைப் பார்த்தவருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. இப்படியும் ஒரு மாணவனா என்று வியந்தவர் செல்வாவை அழைத்து " நீ என்ன கதை எழுதி வச்சிருக்க ? " என்றார்.

" இல்ல சார் , நீங்க தானே அவுங்க அவுங்க வேலைய அவுங்க அவுங்கதான் செஞ்சிக்கணும்னு , அதான்! " என்றார் சற்று பயந்தவாறே.

செல்வா எழுதி இருந்த கதை இதுதான் " பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் - நீதிக்கதை என்று தலைப்பிட்டு இது நீதிக்கதை என்பதால் இதற்கான தீர்ப்பினை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் , மேலும் இது நீதிக்கதை என்பதால் இதற்கான நீதியினை ஒரு நீதிபதி வழங்குவார்! "

Wednesday, April 27, 2011

செல்வா செய்தது சரியா?


பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தார் செல்வா!

அங்கு வருவோருக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுக்கும் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

செல்வாவும் தனது வேலையினைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்தார்.

ஒருநாள் கடையின் மேலாளர் செல்வா இருக்கும் இடத்திற்கு வந்திருந்தார். அங்கே பிளாஸ்டிக் டப்பா ஒன்று உடைந்து காணப்பட்டது.

உடைந்ததற்கான காரணத்தைக் கேட்டார் அவரது மேலாளர். பொருள் வாங்க ஒரு வாடிக்கையாளர் தனக்கு எட்டாத உயரத்திலிருந்த பொருளை எடுப்பதற்காக இந்த டப்பாவின் மேல் ஏறி எடுக்க முயன்றபோது உடைந்ததாகக் கூறினார் செல்வா.

" வர்ற கஸ்டமர்க்கு தேவையானத எடுத்துத் தர்றதுக்குத் தான் உன்னைய வேலைக்கு வச்சிருக்கு ,  அவுங்கள ஏன் நீ எடுக்க சொல்லுற ? இனிமேல் இப்படி எதாச்சும் உடஞ்சா உன்னோட சம்பளத்துலதான் பிடிப்பேன்! " என்று கோபமாகத் திட்டிவிட்டுச் சென்றார் மேலாளர்.

அதற்குப் பிறகு செல்வா இன்னமும் கவனமாக வேலை பார்க்கத் தொடங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு செல்வாவின் வேலைக்கே உலை வைக்கும் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 

கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரிடம் சிறு தகராறு செய்துகொண்டிருந்தார் செல்வா. என்னவென்று விசாரித்த அவரது மேலாளர் செல்வாவை வெகுவாகக் கடிந்துகொண்டார். இருந்தபோதிலும் செல்வாவிற்குக் குழப்பம். இதற்கு முன்னாள் மேலாளர் சொன்னதைத் தானே செய்தோம் , பின்னர் எதற்காகத் திட்டுகிறார் என்று. அவரிடமே கேட்டுவிட முடிவு செய்தார் செல்வா.

" சார் , நீங்கதானே சார் அன்னிக்கு அந்த டப்பா மேல ஒருத்தர் ஏறி உடைச்சதுக்கு என்னையத் திட்டுனீங்க! அதான் இப்படி பண்ணினேன் ? " என்று அப்பாவியாய்க் கேட்டார் செல்வா.

" அதுக்காக எடை பாக்குறதுக்காக எடை போடுற மிசின் மேல ஏறப் போனவன  வேண்டாம்னு சொல்லிட்டு, நீ அது மேல ஏறி நின்னு உன்னோட எடையச் சொல்லுறியே கொஞ்சம் கூட அறிவே கிடையாதா ? "

" கடைக்கு வர்றவங்க எது கேட்டாலும் எடுத்துக் குடுன்னு நீங்கதானே  சொன்னீங்க , அதான் எடுத்துக் குடுத்தேன் , இது தப்பா ? " என்ற செல்வாவை முறைத்தாலும் உள்ளூர சிரித்துக்கொண்டே நகர்ந்தார் மேலாளர்.

Monday, April 25, 2011

செல்வாவும் இணையச் சண்டையும்!


அன்று செல்வா மிகவும் கோபமாக இருந்தார் . 

செல்வா ஒரு வலைப்பதிவர் என்பதால் அவரின் கோபத்துக்கு அவரது பதிவிற்கு வந்த பின்னூட்டமே காரணமாக இருந்தது!

அவரது பதிவு ஒன்றிற்கு " பாதிமப்பில் உளறியது போன்ற பதிவு ! " என்ற பின்னூட்டம் வந்திருந்தது.

அதில் ஆரம்பித்த சண்டை செல்வாவும் அந்தப் பின்னூட்டம் போட்டவரும் ஒருவரை ஒருவர் கேவலமாகத் திட்டிக்கொண்டனர்.

இருவரின் குடும்பத்தைப் பற்றியும் , பரம்பரையே மோசம் என்றும் திட்டிக்கொண்டனர்.

செல்வா கோபமாக இருப்பதைக் கண்ட அவரது நண்பர் என்னவென்று விசாரித்தார்.

" நான் எழுதின போஸ்ட்ல ஒருத்தன் வந்து எனக்கு ஒன்னும் தெரியாது அப்படின்னு சொல்லுறான்டா! அதான் சண்டை ! " என்றார் மிகவும் கோபமாக.

"அதுக்கு ஏண்டா குடும்பத்த எல்லாம் இழுக்குறீங்க ?  ப்ளாக் எழுதுறவங்க எல்லோருமே தனியா படிச்சிட்டா வராங்க ? ஒருத்தன் எழுதுறது பிடிக்கலைனா நாகரீகமா சொல்லலாம்ல! அதுக்கு ஏன் இந்தக் கொலை வெறி? அதிலும் அவன் பிறப்புல இருந்தே அசிங்கப்படுத்துரீங்க ? "

" அவன் என்னையத் திட்டினான் , அதான் நானும் திட்டினேன் ! "

" சரி சண்ட போட்டு என்ன பண்ணுவீங்க ? " என்று கேட்டார் நண்பர்.

" சண்டை போட்டா என்னைய அறிவாளின்னு நினைச்சிடுவாங்கல்ல , அது மட்டும் இல்லாம எனக்கும் சமுதாய அக்கறை இருக்குனு எல்லோரும் எனக்கு மரியாதை குடுப்பாங்க! "

" சமுதாய அக்கறை இருக்குற பதிவா ? அப்படி என்னடா பதிவு அது ? "

" நான் போட்ட பதிவோட தலைப்பு " நாய் ஏன் லொல் லொல்னு குரைக்குது? " அப்படிங்கிறது. 

" இதுல கூடவாடா சண்டை வருது ? "

" ஆமா , அவன் வந்து நாய் லொல் லொல் னு குரைக்காது லொள் லொள் னு தான் குழைக்கும் அப்படின்னு கமெண்ட் போட்டான்! அதான் கடிச்சிட்டேன், எத்தன தடவ பார்த்திருக்கேன் , எங்க நாய் குரைக்குறது எனக்குத் தெரியாதா ?"

" அட பாவிங்களா , கடைசில நாய் குலைக்கிறது கூடவா சண்டை ? அது என்ன பள்ளிக்கூடம் போயாடா படிச்சது ? லகர ளகரம் எல்லாம் உச்சரிக்க ? உங்களைச் சொல்லியும் தப்பு இல்ல , இங்க பாதிச் சண்டை இப்படித் தான் நடக்குது! "

" இருந்தாலும் அவன் அப்படி கமெண்ட் போட்டிருக்கக் கூடாது ! அவன இன்னிக்கு விட மாட்டேன் பாரு! "

" உனக்கும் வேலை இல்லை , அவருக்கும் வேலை இல்லை போல! வேலை நேரத்துல கொஞ்சம் ரிளேக்ஸ்சா இருக்கலாம்னு இணையம் வந்தா இங்கயும் நீ பெரிசு , நான் பெரிசு , நீ முட்டாள் , நான் அறிவாளின்னு சண்டை! எப்படியோ போங்க! "

" நான் எவ்ளோ படிச்சிருக்கேன் தெரியுமா ? நான் அவன விடப் பெரிய அறிவாளி ! இன்னிக்கு ரண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டேன் " என்றார் செல்வா.

" அப்படின்னா ப்ளாக் எழுதுறவங்க மட்டும்தான் அறிவாளியா ? இல்ல அறிவாளிங்க மட்டும்தான் ப்ளாக் எழுதுறாங்களா ? உன்னப் பத்திப் பிரச்சினை இல்ல , நீ ஒரு லூசு ! அவர் எப்படி இந்தமாதிரி கமெண்ட் போட்டு சண்டை போடுரார்னு தான் தெரியல ! " என்று சிரித்தவாறே கிளம்பினார் அவரது நண்பர்.


( பின்குறிப்பு : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கான பதிவு மட்டுமே. யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. பதிவுலக சண்டைகளில் பெரும்பாலும் சரியான புரிதல் இருப்பதில்லை என்பதே இதன் சாரம்! அதுமட்டும் இல்லாமல் பதிவுலக சண்டைகள் பயனற்றவை என்ற எனது புரிதலுமே காரணம்:-) )

Saturday, April 23, 2011

திறக்க முடியாத பூட்டு


செல்வாவின் ஊரில் ராமசாமி என்றொருவர் வசித்துவந்தார். அவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களையே நம்பாமல் அவரது அறையைப் பூட்டிப் பூட்டிப் பாதுகாத்து வந்தார்.

ஆனால் அறையைப் பூட்டி வைத்தாலும் நிம்மதி இல்லாமலே இருந்தார்.

அவரது குடும்பத்தில் உள்ளோர் சாவித் துவாரத்தின் வழியாக உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கின்றனர் என்பதே அவரது நிம்மதியைக் கெடுத்தது.

செல்வா அந்த ஊரிலேயே சிறந்த அறிவாளி(!?) என்பதால் அவரிடம் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

அவரது குறையைக் கேட்ட செல்வா " சாவித் துவாரத்து வழியா பாக்குறாங்களா? சரி பண்ணிடலாம் விடுங்க !" என்று தேற்றி அனுப்பிவிட்டு அவரது வீட்டிற்குச் சென்றார்.

சிறிது நேரத்தில் அவரை அழைத்த செல்வா " இனிமேல் அவுங்க சாவித் துவாரத்து வழியா பாக்க முடியாதபடி பண்ணிட்டேன் , தைரியமா இருங்க! " என்று மகிழ்ச்சியாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இரவு வேலை முடிந்து செல்வா என்ன செய்து சாவித்துவாரத்தை அடைத்தார் என்ற ஆவலில் வீட்டிற்கு வந்த ராமசாமிக்கு அதிர்ச்சி. உடனே செல்வாவைத் தேடி ஓடினார்.

" என்ன பண்ணி வச்சிருக்க ? இதுக்குத்தான் உங்கிட்ட ஐடியா கேட்டேனா  ?" என்று கோபமாக செல்வாவைப் பார்த்துக் கத்தினார்.

" நீங்க தானே சாவித்துவாரம் வழியா பாக்குறாங்கன்னு சொன்னீங்க , அதான் அப்படி பண்ணினேன்! "

" அதுக்குன்னு கதவவே எடுத்திட்டியே , இனி எப்படி நான் பூட்டுப் போடுறது ? "

" சாவி துவாரம் வழியா பாக்க கூடாதுனா பூட்டு இருக்க கூடாது , பூட்டு இருக்க கூடாதுனா கதவு இருக்க கூடாது , அதான் கதவ எடுத்திட்டேன் , இனி எப்படி அவுங்க சாவித்துவாரம் வழியா பாப்பாங்க ?"

" உன்ன மாதிரி ஒரு லூச நான் பார்த்ததே இல்ல , இப்ப அவுங்க நான் வேலைக்குப் போனதுக்கு அப்புறம் வேற கதவு வாங்கி தே இடத்துல வச்சு மறுபடி சாவித்துவாரம் வழியா பார்த்தா என்ன பண்ணுறது ? "

செல்வாவும் ராமசாமியும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த மற்றொரு நண்பருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.

" வீட்டுல இருக்குறவங்கள நம்பலைனா எப்பவுமே உனக்கு நிம்மதி இருக்காது"! என்று அறிவுரை கூறி ராமசாமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவரது நண்பர்.

Friday, April 22, 2011

செல்வாவின் சாதிக் குழப்பம்!


செல்வாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. விருந்திற்கு செல்வாவும் அழைக்கப்பட்டிருந்தார்.

செல்வா உறவினர் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. அங்கு இருந்தவர்களைச் சாப்பிட அழைத்தனர். செல்வாவும் பந்திக்குச் செல்லத் தயாரானார்.

அங்கு செல்வாவின் அருகில் வேறு சாதிக்காரர் ஒருவரும் தரையில் அமர்ந்திருந்தார். செல்வாவிற்கு சாதி பேதங்கள் பற்றி அதிகம் தெரியாததால் அவரையும் பந்திக்கு அழைத்துச் சென்று அவரருகில் அமரவைத்தார்.

அப்பொழுது அங்கு வந்த அவரது உறவினர் அந்த வேற்று சாதிக்கார ஆளினைப் பார்த்து " நீ எதுக்கு இங்க உட்கார்ந்த ? , போய் கீழ உட்கார் " என்று அதட்டலாகக் கூறினார்.

இதைக் கேட்ட செல்வா " நான் தான் இங்க உட்காரச் சொன்னேன்,ஏன்?" என்றார்.

" அவன் வேற சாதி , அவன் நம்ம சாப்பிடற இடத்துல எல்லாம் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது ! " என்று கூறிவிட்டு அங்கிருந்த வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

பின்னர் சில நாட்களுக்குப் பிறகு செல்வா அவசர அவசரமாக அந்த உறவினரின் வீட்டிற்கு வந்தார்.

" மாமா , உங்க காட்டுல அந்த வேற சாதிக்காரர் நின்னு களை பறிச்சிட்டு இருந்தார். நான் நீ இங்க வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லி விரட்டிட்டேன்! , இனிமேலாச்சும் நல்லா பார்த்துகோங்க! அவர உள்ள விட்டுறாதீங்க" என்றார் செல்வா.

இதைக்கேட்ட அந்த உறவினர் " அடப் பாவி , ஏண்டா அப்படி பண்ணின ? நானே ரொம்ப சிரமப்பட்டு அவனக் கூட்டிட்டு வந்தேன்! நீ எதுக்கு வேலை செய்ய வேண்டாம்னு சொன்ன ? "

" நீங்கதானே அவர் வேற சாதி , நாம சாப்பிடற இடத்துல சாப்பிடக் கூடாதுன்னு அன்னிக்கு சொன்னீங்க.! அதான் நாம சாப்பிடற இடத்துலேயே சாப்பிடக் கூடாதுனா , நாம வேலை செய்யுற இடத்துல அவர் வேலை செஞ்சா தீட்டு ஆகாதா ? அதான் போகச் சொன்னேன் ! " என்று குழப்பமாகக் கூறினார் செல்வா.

செல்வாவின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று குழப்பமாக செல்வாவையே பார்த்துக் கொண்டிருந்தார் அவரது உறவினர்.Wednesday, April 20, 2011

சாலை விதிகளை மதிக்கணும்!


செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். செல்வா பைக்கை ஓட்ட அவரது சகோதரர் பின்னால் அமர்ந்திருந்தார்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு திருப்பத்தில் திரும்பவேண்டி இருந்தது. செல்வா எந்தவித சைகையும் செய்யாமல் வண்டியைத் திருப்பிவிட்டார். அப்பொழுது அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொருவர் ,செல்வா இப்படி திடீரெனத் திருப்பியதில் மோதுவது போல் வந்து பின்னர் சுதாகரித்து நிறுத்தினார். 

" வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா ? வண்டி ஓட்டிப் பழகுறதுனா வீட்ல போய் பழக வேண்டியதுதானே! " என்றும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவும் திட்ட ஆரம்பித்தார்.

இதைக் கேட்ட செல்வா எதுவும் காதில் வாங்காதது போல தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த அவரது சகோதரர் " பார்த்துப் போடா ! " என்று சற்றுப் பயந்தவாறு கூறினார்.

பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு " அட ச்சே " என்று தலையில் அடித்துக்கொண்டு செல்வா திரும்பவும் வந்த வழியிலேயே வண்டியைத் திருப்பினார். பின்னால் இருந்த அவரது சகோதரர் " ஏண்டா, என்னாச்சு ! " என்றார்.

" ஒன்னும் இல்ல , உட்காரு " என்று கூறிவிட்டு வந்த வழியில் சிறிது தூரம் வந்துவிட்டு பின்னர் மீண்டும் உறவினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் திரும்பினார்.

அவரது சகோதரருக்கு ஒன்றும் விளங்கவில்லை. " என்னடாஆச்சு ? ஏன் இப்படியும் அப்படியும் திருப்பித் திருப்பி ஓட்டிட்டு இருக்க ? " என்றார்.

" ஒன்னும் இல்ல , இதுக்கு முன்னாடி அந்தத் திருப்பத்துல திரும்பும்போது இண்டிகேட்டர் போடாம வந்திட்டோம்ல , அதே மாதிரி இந்தத் திருப்பத்திலும் இண்டிகேட்டர் போடாம வந்திட்டேன். நாம இண்டிகேட்டர் போடாம  வந்ததுக்கு அப்புறம் இனிமேல் எவனாச்சும் வந்து கீழ விழுந்திட்டு நான் இண்டிகேட்டர் போடாம திரும்பினதால தான் விழுந்திட்டேன்னு சொன்னா என்ன பண்ணுறது ? அதான் இப்ப போய் இண்டிகேட்டர் போட்டுத் திருப்பினேன் ! " என்றார் செல்வா.

" அட கெரகம் ,, அது ட்ராபிக் இருக்கிற ரோடு , இது நடுக்காடு.! அதுவும் இல்லாம அப்போ பின்னாடி ஒருத்தன் வந்திட்டு இருந்தான் , அவனப் பார்த்துட்டாவது நீ இண்டிகேட்டர் போட்டுக் காட்டிருக்கணும் , இங்க எவனுமே இல்ல, அத விடக் கொடுமை என்னன்னா மறுபடி திரும்பிப்போய் இண்டிகேட்டர் போட்டுட்டு வர்ற ! கொடுமை ! " என்று திட்டினார்.

" என்ன இருந்தாலும் சாலை விதிகளை மதிக்கோனும்ல! "

" கிழிச்ச ? செய்யவேண்டிய நேரத்துல செய்யாத ! அப்புறம் தனியா போய் சாலை விதிகள மதிக்கிறேன்னு சொல்லிட்டு திரி! அப்பன் அம்மா கூட இருக்கும்போது சோறு போடுறது இல்ல , அவுங்க போனதுக்கு அப்புறம் முதியோர் இல்லம் , அநாதை ஆசரமம்னு போய் அன்பக்காட்டுறது , உங்கள எல்லாம் திருத்தவே முடியாது !" என்று பலவாறு திட்ட ஆரம்பித்தார்.

Monday, April 18, 2011

செல்போன் கயிறு.!

செல்வாவின் செல்போன் அடிக்கடி கீழே விழுந்து உடைந்து விடுவதாக மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட செல்வாவின் நண்பர் " அட , நீ சர்ட் பாக்கட்ல போன் வைக்கிறதால குனியும்போது கீழ விழுந்திடுது. அதனால பேன்ட் பாக்ட்ல போட்டு வை, உடையாது! " என்று ஆலோசனை கூறினார்.

" பேன்ட் பாக்கட்ல போட்டா போன் வந்தா கூட தெரிய மாட்டிங்குது , சத்தமே கேக்குறது இல்ல , சர்ட் பாக்கட்லயே வச்சிட்டு கீழ விழாம இருக்குறதுக்கு எதாச்சும் ஐடியா கொடேன் "

" ஒ ,அப்படின்னா ஒரு TAG வாங்கி கழுத்துல மாட்டிக்கிட்டா கீழ விழாது!"

" TAG னா என்ன ? "

" இத வேற விளக்கனுமா ?  அது ஒரு கயிறு மாதிரி இருக்கும் ! " என்றார் நண்பர்.

" ஒ , மந்திரக் கயிறு தானே ? தாயத்து இருக்குமா ? போன் கீழ விழாம இருக்கிற மாதிரி மந்திரம் பண்ணி வச்சிருப்பாங்களா ? " செல்வா வழக்கம்போல தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்தினார்.

" உன்னயெல்லாம் திருத்தவே முடியாது. அது சாதாரணக் கயிறு.! கடைல கேட்டீனா தருவாங்க ! " என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.


சிறிது நாட்களுக்குப் பிறகு அதே நண்பரைச் சந்தித்த செல்வா " போடா வெண்ண , நீ சொன்னது மாதிரி செல்போன் கயிறு வாங்கி என் கழுத்துல கட்டினதுக்கு அப்புறமும் செல்போன் கீழ விழுந்திருச்சு! "


" வாய்ப்பே இல்ல , நான் நம்ப மாட்டேன்! , ஆமா நீ உன் கழுத்துல தான கட்டின ? "

" நீ நம்ப மாட்டீனு தெரியும் , அதான் இப்ப கூட கழுத்துலையே கட்டிருக்கேன்! " என்று கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த செல்போன் TAG இணைக் காட்டினார்.

" நான் முதல்லையே நினைச்சேன் , நீ இன்னொரு முனைல உன்னோட செல்போன இணைச்சியா இல்லியா ? "

" லூசா நீ ? இன்னொரு முனைல இணைச்சிருந்தா நான் எப்பவோ செத்திருப்பேன் ! " என்றார் செல்வா கொஞ்சம் கோபமாக.

" என்ன ஒளர்ற ? "

" ஆமா இன்னொரு முனைல இணைச்சிருந்தாக்க , செல்போன் கீழ விழும்போது நானும் அதுக்கூட சேர்ந்து விழுந்திருப்பேன்ல! அப்புறம் எப்படி நான் உயிரோட இருப்பேன் !? " என்று கேட்டார் செல்வா.

இதைக் கேட்ட நண்பருக்கு என்ன சொல்லுவதென்றே தெரியாமல் அமைதியானார்.

பின்குறிப்பு : எப்படியோ தத்தித் தவழ்ந்து ஐம்பதாவது கதைய எட்டிப் பிடிச்சிட்டேன். இதுல சில கதைகள் உங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். சிலது பிடிக்காம இருந்திருக்கலாம். செல்வா கதைகளின் நிறை என்ன குறை என்ன அப்படின்னு உங்களோட கருத்துக்களை இந்தப் பதிவுல பின்னூட்டத்திலோ   இல்ல எனது மின்னஞ்சலுக்கோ (thamizhbarathi@gmail.com) அனுப்புங்க. உங்களோட கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

Saturday, April 16, 2011

பச்சை பச்சையாகப் பேசுவோருக்கு


( இந்தக் கதைல எந்த சிந்தனையும் இல்லைங்க. சும்மா சிரிச்சிட்டுப் போலாம் )

செல்வா ஒரு முறை அவரது நண்பரைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். செல்வா தன்னுடன் ஒரு ஸ்டவ் அடுப்பினை எடுத்து வந்திருந்தார் . அப்பொழுது அவரது நண்பர் இன்னொரு நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார். 

" டேய் , புத்தாண்டு அதுவுமா காலைல எட்டு மணிவரைக்கும் தூங்கினா இந்த வருஷம் முழுசும் தூங்கிட்டேதான் இருப்ப, உனக்குப் போய் போன் பண்ணினேன் பாரு " என்று கூறிவிட்டு அந்த நண்பருடன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

உடனே செல்வா " டேய் , எனக்கு ஒரு சந்தேகம் ? " என்றார்.

" உனக்குத்தான் அடிக்கடி சந்தேகம் வந்திடுமே ! சொல்லு " 

" புத்தாண்டு அன்னிக்கு நேர வரைக்கும் தூங்கினா வருஷம் முழுசுமே அப்படி இருக்கும்னு சொன்னீல , அதே மாதிரி புத்தாண்டு அன்னிக்கு ஒருத்தன் செத்துப் போய்ட்டா வருஷம் முழுக்க அவன் செத்துட்டே இருப்பானா ? ஆனா அது முடியாதுல ! "

செல்வாவை முறைத்துப் பார்த்தவர் " அது ஒரு பேச்சுக்குச் சொல்லுறது ! " என்று கூறிவிட்டு " ஆமா , எதுக்கு அடுப்பு எடுத்துட்டு வந்திருக்கற ? " 

" நீ தான நான் பச்ச பச்சையா பேசுறேன்னு சொன்ன , அதான் ஒரு குண்டாவுக்குள்ள தண்ணி ஊத்தி நான் பேசுறத செல்போன்ல ரெகார்ட் பண்ணி அந்த செல்போன தண்ணிக்குள்ள போட்டு அடுப்பப் பத்தவச்சு அத வேக வச்சிடோம்னா நான் பேசுறது பச்சையா இருக்காதுல்ல ?! எப்படி ஐடியா ? "

" எனக்கு இதுவும் வேணும் , இன்னமும் வேணும் ! "

" என்கிட்டே ஒரு அடுப்புதான் இருக்கு ?! "

" உஸ்ஸ்ஸ்.. என்னால முடில டா.. சர்க்கரைல எறும்பு ஏறுதுன்னு அதுக்கூட எறும்பு மருந்தக் கலக்கி வச்சவன்தான நீயி .. உன் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும் ! " என்று புலம்ப ஆரம்பித்தார்  அந்த நண்பர்.

Friday, April 15, 2011

தேர்தலும் செல்வாவும்

தேர்தல் தினத்தன்று தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக செல்வா வாக்குச் சாவடிக்குச் சென்றார்.

செல்வாவிற்கு எப்படி வாக்களிப்பது என்று தெரியாது என்பதால் அங்கிருந்த தேர்தல் அதிகாரியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்.

" அந்த லைன்ல போய் நில்லுங்க, உள்ள இருக்குறவுங்க உங்க பேர சரி பார்த்திட்டு எப்படி ஓட்டுப் போடுறதுன்னு சொல்லுவாங்க ! " என்று அனுப்பினார்.

வரிசையில் சென்ற செல்வா உள்ளே இருந்த தேர்தல் அதிகாரியிடம் சென்றதும் அவர் செல்வாவின் பெயரைச் சரிபார்த்துவிட்டு அவரது கையில் மை வைக்க அவரது கையைக் காட்டுமாறு கூறினார்.

" ஐயோ , இது என்னங்க ப்ளூ கலர் மை வச்சிருக்கீங்க ? எனக்கு ப்ளூ கலர் பிடிக்காது ! வேற கலர் வச்சு விடுங்க ! " என்றார்.

" எல்லோருக்குமே ப்ளூ கலர்தாங்க , கலர் கலரா வச்சு விட இது என்ன பியூட்டி பார்லரா ? "

" அதெல்லாம் முடியாது , எனக்கு சிவப்பு கலர் மை வச்சு விடுங்க ! "

" சுத்தி எடுத்துப் போட்டா சிவப்புக் கலர் வரும் , போடட்டுமா ? "

" யாரச் சுத்தி வந்து ? " என்றார் செல்வா.

" சுத்தி எடுத்துப் போடுறதுனா யாராவோ சுத்தி வரது இல்ல , சுத்தியல் எடுத்து கைமேல போடுறது ? "

" ஒ , அப்படின்னா எனக்கு சிவப்பு பிடிக்காது , ப்ளூ கலரே வைங்க ! "

கையில் மை வைத்துவிட்டு ஓட்டுப் போடும் இயந்திரத்தின் அருகில் சென்ற செல்வா " சார் , எப்படி ஓட்டுப் போடுறது ? "

" அங்க ப்ளூ கலர் பட்டன் இருக்கும் பாருங்க , அத அழுத்துங்க ! "

" ஆனா இங்க 16 இருக்கு. அத்தனையும் அழுத்தனுமா ? "

" அய்யா சாமி , உங்களுக்குப் பிடிச்சத அழுத்துங்க " 

" எனக்குத்தான் ப்ளூ பிடிக்காதே ? " என்றார் செல்வா.

" போலீச கூப்பிடவா ? " என்று கோபமாக எழுந்தார் அந்த அதிகாரி.

" வேண்டாம் , நான் ***** கட்சிக்கு ஓட்டுப் போட்டுட்டேன் , யார் கிட்டவும் சொல்லிடாதீங்க " என்று சத்தமாகக் கூறிக்கொண்டு வெளியில் சென்றார்.

வெளியில் நின்றுகொண்டிருந்த அவரது நண்பர்கள் " வாடா , எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்ட ? " என்றனர்.

" நான் ***** கட்சிக்கு ஓட்டுப் போட்டேன் டா " 

" பன்னாட , அதுக்கு எதுக்குடா ஓட்டுப் போட்ட ? யார் நல்லவங்கன்னு கூட உனக்குத் தெரியாதா ? "

" அவர் எங்க ஆளுடா " என்றார் செல்வா.

" உங்க ஆளுனா ? "

" எங்க ஜாதி , அதான் போட்டேன் "

" நீயெல்லாம் உருப்படவே மாட்ட , தேர்தல் எதுக்கு வைக்கிறாங்கன்னு கூட தெரியாதா, சாதிக்காரனுக்கு ஓட்டுப் போட்டானாம்  ? "

" நீதான் லூசு , யார் ஜாதி பெருசு அப்படின்னு பாக்குறதுக்குதானே தேர்தல் வைக்கிறாங்க , இது கூடத் தெரியாதா ? "

" உன்கிட்டப் பேசுறதுக்கு நான் வேற ஏதாச்சும் பண்ணலாம் " என்று கூறிய அந்த நண்பர் பக்கத்தில் இருந்த மற்றொரு நண்பரிடம் " நீ எதுக்கு ஓட்டுப் போட்ட ? என்றார்.

" நா ##### கட்சிக்குப் போட்டேன் ! " என்றார் அந்த நண்பர்,

" ஏண்டா அவன் தான் அவன் ஜாதின்னு அந்தக் கட்சிக்குப் போட்டான் , நீ ஏண்டா இந்தக் கட்சிக்குப் போட்ட ? "

" எனக்கு நம்ம ரங்கசாமியப் பிடிக்காது. அவன் எனக்கு எதிரி மாதிரி. அதான் அவன் நான் போட்ட கட்சியோட எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போடுறேன்னு சொன்னான். அதனால அவன் போடுற கட்சிக்கு நான் போடக்கூடாதுன்னுதான் இந்தக் கட்சிக்குப் போட்டேன்! " என்றார் அந்த நண்பர்.

" ஓட்டுப் போட்டு ஒரு நல்ல ஆளத் தேர்ந்தெடுக்கச் சொன்னா அங்க போய் ஜாதி , எதிரி இதெல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க , உங்களை வச்சு ஒன்னும் பண்ண முடியாது ! " என்று புலம்பியவாறே கிளம்பினார் அந்த நண்பர்.

Tuesday, April 12, 2011

சாகுற போதும் தமிழ்ல பேசமாட்டங்க.!

செல்வா ஒரு முறை ஒரு குளக்கரையில் நடந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவருக்கு எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தவர் பின்னால் வந்த லாரி ஒன்றுக்கு வழிவிடுவதற்காகக் கரை ஓரத்தில் கால் வைத்தார்.

கரையின் ஓரம் மிகவும் ஈரமாக இருந்ததால் அவர் நின்ற இடம் அப்படியே குளத்திற்குள் சென்றது. அவரும் குளத்தில் விழுந்தார்.

அவருக்கு நீச்சல் தெரியாது போலும். " Help me ,Help me " என்று கத்த ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த செல்வாவிற்கு அன்பே சிவம் படத்தில் வரும் காட்சி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. அவர் விழுந்த இடத்திற்கு அருகில் சென்ற செல்வா

" ஏன் சார் சாகுற நேரத்துல கூட தமிழ்ல பேச மாட்டிங்களா ? " என்றார்.

செல்வாவைப் பார்த்த அந்த நண்பர் மேலும் " I can't swim , Help me " என்று உரக்கக் கத்தினார். செல்வா கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் செல்வா ஒரு தமிழ் ஆர்வலர்.

அவர் தமிழில் சொன்னால்தான் காப்பாற்றுவது என்று முடிவில் இருந்தார் செல்வா. அப்பொழுது செல்வாவின் நண்பர் அங்கே வந்தார்.

குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் அவரது நண்பர் சடாரெனத் தண்ணீரில் குதித்து அவரைக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தார். பின்னர் செல்வாவைப் பார்த்து 

" ஏண்டா , ஒருத்தன் தண்ணிக்குள்ள விழுந்து சாகக் கிடக்கிறான் , அவனக் காப்பாத்தாம என்ன பண்ணிட்டு இருக்க ? "

" போடா இவனே ., அவன் சாகும்போது கூட தமிழ்ல பேச மாட்டிங்கிறான் , அவன நான் எதுக்குக் காப்பாத்தணும் ? "

" நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ? பஞ்சாப்ல வந்து நின்னுட்டு தமிழ்ல பேசினாத்தான் காப்பாத்துவேன்னு சொல்லுறியே , உனக்கு அறிவு இருக்கா இல்லியா ? " 

" ஏன் பஞ்சாப்ல நாம தமிழ் பேசலியா ? "

" ஐயோ நம்மளுக்குத் தமிழ் தெரியும் அதனால பேசுறோம் , இவனுக்கு எப்படித் தெரியும் ? இவன் பஞ்சாப்காரன்ல!"

" தண்ணிக்குள்ள விழுறதுக்கு முன்னாடி தமிழ் படிச்சிட்டு விழ வேண்டியதுதானே! "

" மொதல்ல மனுசங்களப் பாருடா , மொழிய அப்புறம் பாத்துக்கலாம் ! " என்று கூறிவிட்டுக் கிளம்பினார் நண்பர்.

Monday, April 11, 2011

இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான செல்வா

இந்திய அணி உலகக் கோப்பை வாங்கியதற்கு பலரும் பலவித காரணங்கள் கூற செல்வாவின் காரணம் இதோ.

செல்வாவும் அவரது நண்பரும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது இந்திய அணியின் முதல் இரண்டு ஆட்டக்காரர்களும் ஆட்டமிழந்ததும் அவரது நண்பர் மிகவும் கவலைப்பட்டார்.

" டேய் , என்னடா நாம தோத்துருவோம் போல இருக்கு.! , ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்று புலம்பினார்.

சிறிது நேரம் யோசித்த செல்வா " அவுங்க ஜெயிக்கணும்னா ஒரு ஐடியா இருக்கு ! " என்றார்.

" என்ன ஐடியா , சீக்கிரம் சொல்லு "

" டிவி ய ஆப் பண்ணனும் .. "

" டிவி ய ஆப் பண்ணுறதுக்கும் அவுங்க ஜெயிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் ? " என்று சற்று குழப்பத்துடன் கேட்டார் நண்பர்.

" இருக்கு ! " என்று கூறிவிட்டு டிவியை ஆப் செய்துவிட்டு இருவரும் வெளியில் சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து பார்த்த பொழுது இந்திய வெல்லும் சூழ்நிலையில் இருந்தது. நண்பர் மகிழ்ச்சியில் குதித்தார்.

" டேய் , சூப்பர்டா ! நாம ஜெயிச்சிருவோம். நீ உண்மைலேயே பெரிய ஆளுடா.அது எப்படி டிவிய ஆப் பண்ணினா ஜெயிப்போம்னு கண்டுபிடிச்ச ? "

" அது ஒன்னும் இல்ல , நாம டிவி பார்த்தோம்னா அவுங்க கேமராவுக்கு போஸ் குடுத்துக் குடுத்து ஆடனும்ல. டிவிய ஆப் பண்ணிட்டா அந்தத் தொந்திரவு இல்ல. அதான் சொன்னேன் ! " என்றார் செல்வா சற்று பெருமிதத்துடன்.

உண்மையில் சாதாரண நாட்களாக இருந்திருந்தால் அந்த நண்பர் செல்வாவின் இந்தப் பதிலைக் கேட்டு செல்வாவை உண்டு இல்லை என்று பண்ணி இருப்பார்.ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற சந்தோசத்தில் இருந்ததால் எதுவும் செய்யவில்லை.

சிறிதுநேரம் இந்தியாவின் வெற்றியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த நண்பர் பின்னர் செல்வாவிடம் " சரி உலகக் கோப்பை முடிஞ்சது , அடுத்து IPL தான். சரி IPL ல உன்னோடது எந்த டீம் ? "

" அதான் முடிஞ்சதே , நானும் வாங்கலாம்னு தான் பார்த்தேன். ஆனா கோடிக்கணக்குல சொன்னாங்க , நூறு , இருநூறு னா வாங்கிருப்பேன்! " என்றார் சோகமாக.

செல்வாவின் நண்பர் பல்லைக் கடித்துக்கொண்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.

Thursday, April 7, 2011

தேர்தல் காலமும் செல்வாவின் குழப்பமும்


செல்வா மும்முரமாக எதையோ கூகிளில் தேடிக்கொண்டிருந்தார். 

அப்பொழுது அவரது வீட்டிற்கு வந்த அவரது நண்பர் " என்னடா இவ்ளோ அவசர அவசரமா எதத் தேடிட்டு இருக்க ? " என்றார்.

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க ஓட்டுக் கேக்குறதுக்காக MLA  வந்திருந்தார். அவர் சொன்னததான் தேடிட்டு இருக்கேன் " 

" அவர் என்ன சொன்னார் ? நீ என்ன தேடுற ? "

"எங்களுக்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தாருங்கள் அப்படின்னார் , அதான் பாவம் போனா போகுது சும்மா வெட்டியாத்தானே இருக்கோம் , தேடித்தரலாமேன்னு தேடுறேன் " என்ற செல்வா கணினியை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

" நான் அப்பவே நினைச்சேன் , ஏண்டா இப்படி இருக்க ? சரி கொஞ்சம் தள்ளு செய்தி பாக்கலாம் " என்றவர் செய்திகளுக்கான இணையதளத்திற்கு மாற்றினார். 

அதன் முதல் பக்கத்தில் " ஆம்னி பஸ்ஸில் ரூ.5  கோடி சிக்கியது ? " என்ற செய்தியைப் பார்த்ததும் " அடடா கை சிக்கிச்சா , கால் சிக்கிச்சா ? இதுக்குத்தான் எங்க போனாலும் மெதுவா போகனும்கறது " என்றார் செல்வா.

" ச்சே, போயும் போயும் இங்க வந்தேன் பாரு " என்று அலுத்துக்கொண்ட நண்பர் வெளியில் கிளம்ப ஆயத்தமானார். அப்பொழுது அவருக்கு எதிரில் கணினித்  திரை ஒன்று இரண்டாகப் பிளக்கப்பட்டுக் கிடந்தது.

" ஏண்டா , இது இப்படி ஒடஞ்சு கிடக்கு ? "

" அது நேத்திக்கு நம்ம ரமேசு ஒரு மெயில் அனுப்பச்சொன்னான் , அதுல கார்பன் காப்பி மெய்ல பிரபுக்கு அனுப்பிடுனு சொன்னானா , அதான் கார்பன் பேப்பர் எங்க வெக்கிரதுன்னு தெரியாம ஒடச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது கார்பன் காப்பி மெயில் அனுப்ப கார்பன் பேப்பர் தேவை இல்லைன்னு ! " என்றார் செல்வா சோகமாக.

"கெரகம் ,இது கூட தெரியாம இருந்திருக்க ? " என்று பேசிக்கொண்டிருக்கையில் வெளியில் மற்றொரு கட்சியினர் ஒட்டுகேட்டுத் தெருவில் பேசிக்கொண்டு சென்றனர்.

வெளியில் வந்த செல்வாவும் நண்பரும் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது " உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ----- சின்னத்தில் போட்டு எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள் " என்று வாக்குச் சேகரித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தனர்.

" சிந்துரதுக்கு ஓட்டு என்ன அரிசி மூட்டையா ? , சிந்தாமல் சிதராமல்னு ஏன் சொல்லுறாரு ? " என்றார் செல்வா.

" உன் சந்தேகத்த எல்லாம் அவர்கிட்டவே போய்க்கேட்டுக்க , நான் போறேன் " என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நண்பர்.

Tuesday, April 5, 2011

செல்வாவின் வீடு


செல்வாவின் நண்பர் ஒருவர் செல்வாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.

வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அங்கு அவர் கண்ட காட்சிகள் சிரிப்பினை வரவைத்தன. மேலும் சில இடங்களில் குழம்பியும் போனார்.

வீட்டின் முற்றத்தின் ஒரு பக்கத்தில் கொசுக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் கொசுவின் படம் போட்டு அனுமதி இல்லை என்பதுபோல அதன்மேல் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தது. அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.

அதே போல இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றவர் அங்கு கண்ட காட்சியால்  சிரிப்பினை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டார். அங்கு பூனை போன்ற ஒரு வடிவம் செய்து அதன் மேலே எலிகள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வடிவத்தினை ஒரு எலி தின்றுகொண்டிருந்தது.

" டேய் , உன்னோட பூனைய எலி திங்குதுடா ? "என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

" ச்சே ..அந்த எலிக்கு இருக்குற தைரியம் கூட நான் வளர்த்த பூனைக்கு இல்லையே ! " என்று சலித்துக்கொண்டார் செல்வா.

" என்ன சொல்ற ? "

" ஆமா இதே மாதிரி இரும்புல எலி மாதிரி பண்ணி இது மாதிரி எதாச்சும் வந்தா பிடிக்கணும்னு நான் வளர்த்த பூனைகிட்ட சொன்னேன் .. அந்தப் பூனை அந்த இரும்பு எலிய கொஞ்சநேரம் கடிச்சுப் பார்த்திட்டு அப்புறம் கீழ போட்டிருச்சு.. இப்ப உண்மையான எலி வந்தா கூட பிடிக்க மாட்டேங்குது ! "

நண்பருக்கு மேலும் சிரிப்பு. அப்பொழுது செல்வா " அங்க ஒரு மெழுகுவர்த்தி ஏத்தணும் , நான் எவ்ளோ நேரம் முயற்சி பண்ணினேன் ..ஆனா கெட்டுக் கெட்டுப் போகுது . நீ பத்த வச்சுத் தரியா ? " என்றார்.

" சரி வா " என்று செல்வாவுடன் அவர் காட்டிய அறையை நோக்கிச் சென்றார். அந்த அறையின் நுழைவாயிலிலும் அதே போல ஒரு பக்கத்தில் " காற்றுக்கு அனுமதி இல்லை, மீறினால் பலூனில் அடைக்கப்பட்டு பாம் வைத்துக் கொல்லப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும் நண்பருக்கு மறுபக்கத்தில் எப்படி எழுதியிருப்பான் என்று ஆச்சர்யம் வந்தது. மறுபக்கத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு ஒரு குழாயின் மூலம் அதிலிருந்து வந்த காற்றானது அந்த இடத்தில் வெளியேறுமாறு வைக்கப்பட்டு அங்கே அனுமதி இல்லை என்பது போன்ற சிவப்புகோடு போடப்பட்டிருந்தது.

" டேய் என்னடா , இது ? "

" அதான் நான் இங்க மெழுகுவர்த்தி வச்சா வச்சா காத்து வந்து அணைச்சிடுது. அதனாலதான் இப்படி ! "

" அதுக்கு ஏன் இப்படி ? "

" லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் " என்றார் செல்வா.

" இப்ப மெழுகுவர்த்தி கெட்டுப் போறதுக்கு காரணமே இந்த மோட்டர்ல இருந்து வர்ற காத்துதான் , உன்னப் பார்த்து சிரிக்கிறதா அழுகறதா ? " என்றவாறு அந்தக் குழாயை பிடுங்கினார்.

Monday, April 4, 2011

எனக்கு MLAவைத் தெரியும்

செல்வாவும் அவரது நண்பரும் அவர்களது கிராமத்தில் இருந்து அருகில் இருந்த நகரத்திற்கு நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

பாதி தூரம் சென்றதும் " டேய் , லைசன்ஸ் இருக்கா ? " என்று நண்பரிடம் கேட்டார் செல்வா.

" லைசென்ஸ் இருக்கு , ஆனா வண்டியோட RC புக் மட்டும் வீட்டிலேயே வச்சிட்டேன் ! "

" அட பாவி , இப்ப யாராச்சும் வண்டி புக் எங்கனு கேட்டா என்ன பண்ணுறது ? "

" நம்ம ஊர் என்ன அவ்ளோ பெரிய ஊரா ? யாரும் கேக்கமாட்டாங்க வாடா ! " என்று சமாதானம் கூறிய நண்பர் நகரத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

செல்வா பயந்தது போலவே வழியில் வாகனச் சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த செல்வா " டேய் , அதுக்குத்தான் அப்பவே சொன்னேன் , வா திரும்பிப் போயிறலாம்.! "

" இனி திரும்பிப் போனா ,தொரத்திட்டு வந்து பிடிப்பாங்க , நீ ஏதும் பேசாம இரு , நான் பார்த்திக்கிறேன் ! " என்ற நண்பர் தனது வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு காவலரிடம் சென்றார்.

காவலரிடம் வேகமாகச் சென்ற நண்பர் தனது ஓட்டுனர் உரிமத்தைக் காட்டினார். அதை வாங்கிப் பார்த்த காவலர் வேறு எதையும் விசாரிக்காமல் " சரி நீங்க போலாம் " என்றார்.

நண்பர் காவலரிடம் இருந்து விலகுவதற்குள் " மச்சி RC புக் கொண்டு வரலைங்கறத எப்படி சமாளிச்ச ? " என்று சத்தமாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.

இதைக்கேட்ட காவலர் " தம்பி உங்க வண்டியோட புக் எடுத்துட்டு வாங்க"  என்றார்.

செல்வாவை கோபமாக முறைத்த அவரது நண்பர் காவலரிடம் " சார் , புக் வீட்டுல வச்சிட்டேன் சார் , இனிமேல் எடுத்து எப்பவும் வண்டிலேயே வச்சிடறேன் சார் , இப்ப கொஞ்சம் அவசரமா போகணும்  விடுங்க சார் " என்று குழைந்தார் .

ஆனால் காவலர் விடுவதாக இல்லை. சிறிதுநேரம் பேசிய அவரது நண்பர்  பின்னர் " சார் எனக்கு MLA குமாரத்  தெரியும் , நான் வேணா பேச சொல்லட்டுமா?   " என்றார்.

இதைக் கேட்ட காவலர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருவரையும் கிளம்புமாறு சைகை செய்தார் . சிறிது தூரம் சென்றதும் செல்வா 

" மச்சி , உனக்கு உண்மைலேயே MLA வ தெரியுமா  ? "

" தெரிஞ்சா என்ன தெரியலைனா என்ன ? ஊர் போய்ச் சேர  வரைக்கும் வாயத்  தொறக்காத " என்று கத்தியவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நகரத்தில் இருந்த வேலைகளை முடித்து விட்டு  வீடு  திரும்பினர், செல்வாவை அவரது வீட்டில் இறக்கிவிட்ட பின்பு  " நாளைக்கு லீவ் போடுடா , கோயிலுக்குப் போகணும் " என்று கூறிவிட்டுச் சென்றார். 

சரி என்ற செல்வா அவரது மேலாளரிடம் விடுமுறை  கேட்கலாம் என்று அழைத்தார்.

" சார் , செல்வா பேசுறேன் சார் , நாளைக்கு எனக்கு லீவ் வேணும் சார் , கோயிலுக்குப் போறேன் " 

" நாளைக்கு லீவ் இல்லைப்பா , நீ வேணா அடுத்தநாள் எடுத்துக்க ! " என்றார்.

" இல்ல சார் , எனக்கு கண்டிப்பா நாளைக்குதான் லீவ் வேணும் !" 

" நாளைக்கு கண்டிப்பா லீவ் குடுக்க முடியாதுப்பா ! "

" சார் எனக்கு MLA வைத் தெரியும் சார் .. இப்ப லீவ் தர முடியுமா ? "

" MLA வை தெரியுறதுக்கும் லீவ் தரத்துக்கும் என்னப்பா சம்பந்தம் ? "

செல்வா சற்றுக் குழம்பிப்போனார். அவனும் இதத்தான சொன்னான் .. சரி அவனுக்குத் தெரியும்னு சொல்லுவோம்.

" சார் என் பிரண்டு சசிக்கு MLA வை தெரியும் சார் "

" என்ன ஒளர்ற , நாளைக்கு லீவ் எல்லாம் இல்ல , வேலைக்கு வந்து சேர்! " என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் அவரது மேலாளர்.

அப்பொழுது அங்கு வந்த அவரது நண்பர் " என்னடா நாளைக்கு லீவு தான ? "

" லீவு தரலைன்னு சொல்லிட்டாங்கடா ! "

" ஏன் , நீ என்ன சொன்ன ? "

" நான் கோவிலுக்குப் போகணும்னுதான் சொன்னேன் , தரலைனாங்க , சரி MLA வை தெரியும்னு சொன்னா தருவாங்களோனு அதையும் சொன்னேன் .. அப்பாவும் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க ! "

செல்வாவை முறைத்துப்பார்த்த அவரது நண்பர் " எந்த இடத்துல எத சொல்லணுமோ அத்தான் சொல்லணும் , எல்லா இடத்திலையும் எல்லாமும் பயன்படாது , எப்பத்தான் திருந்தப் போறியோ ?! "  

Friday, April 1, 2011

சுத்தம் சோறு போடும்

ஒரு நாள் காலை செல்வா அவசர அவசரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென குளியலறையில் இருந்து வெளியே தலை நீட்டிய செல்வா அவரது நண்பரிடம் கொஞ்சம் அவசரமாகச் " சோப்பு வாங்கிட்டு வா"  என்று கத்தினார்.

அவரது நண்பரும் அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று சோப்பு வாங்கி  வந்தார். அதற்குள் செல்வா குளித்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பர் " அதுக்குள்ளே ஏண்டா குளிச்ச ? "

" பாத் ரூமுக்குள்ள தான் குளிச்சேன் , அங்கதானே குளிக்கணும் ?! "

" ஐயோ , என்னைய சோப்பு வாங்கிட்டு வரச்சொல்லிட்டு சோப்பு வரதுக்கு முன்னாடியே ஏன் குளிச்சனு கேட்டேன் ? நீ எப்பவும் சுத்தமா இருப்பண்ணுதான் நான் அவ்ளோ வேகமா ஓடிப் போய் சோப்பு வாங்கிட்டு வந்தேன் ! இப்படிப் பண்ணுறதுக்கு எதுக்கு அவ்ளோ அவசரப்படுத்தி சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ?  "

 " அதுக்கு காரணம் இருக்கு , இரு சாப்பிட்டுட்டு வரேன் ! "

" என்ன மண்ணாங்கட்டிக் காரணம் ? " என்று கோபமாகக் கத்தினார் நண்பர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்த செல்வா நண்பர் வாங்கிவந்த சோப்பினை எடுத்துகொண்டு வேகமாக குளியலறைக்குச் சென்றார். மறுபடி குளிப்பானோ என்று நினைத்த அவரது நண்பர்

" ஏண்டா நீ எப்பவும் சாப்பிட்டுட்டுக் குளிக்க மாட்டியே , இன்னிக்கு எதுக்கு மறுபடியும் குளிக்கிற ? "

" நான் எங்க குளிக்கப் போறேன் ?! " என்று கூறியவர் குளியலறையில் இருந்து மற்றொரு சோப்பினைக் கையில் எடுத்து வந்தார்.

" ஏண்டா , இன்னொரு சோப்பு வச்சிட்டே எதுக்கு எங்கிட்ட எதுக்கு இன்னொரு சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ? "

" சும்மா தொணதொணன்னு பேசாத , ஒரு நிமிஷம் இரு ! " என்றவர் குளியலறையில் இருந்து எடுத்துவந்த சோப்பின் மீது தண்ணீரை ஊற்றி நண்பர் வாங்கிவந்த சோப்பால் தேய்க்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த அவரது நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. " டேய் , என்ன பண்ணுற ? "

" அது ஒன்னும் இல்ல , நான் குளிச்சிட்டிருக்கும்போது  இது கீழ விழுந்திடுச்சு , அதனால இது மேல கிருமி ஒட்டிருக்கும். அதான் இதுக்கு சோப்புப் போட்டு குளிப்பாட்டிட்டு இருக்கேன். இப்ப அதுமேல இருக்குற கிருமி எல்லாம் போயடும்ல " என்றார் செல்வா.

" சோப்புக்கே சோப்புப் போட்ட ஆள் நீயாத்தாண்டா இருப்ப ! உன்னையும் ஒரு ஆளா மதிச்சு போய் சோப்பு வாங்கிட்டு வந்து கொடுத்தேன் பாரு என்னச் சொல்லனும் ? "

" சுத்தமா இருக்கிறது தப்பாடா ? "

" மொதல்ல இந்த சோப்பு விளம்பரத்த நிறுத்தனும் , போற போக்குல நீ பண்ணின மாதிரி பண்ணச்சொன்னாலும் சொல்லுவாங்க , அது சரி இனிமேல அந்தச் சோப்ப என்ன பண்ணுவ ? "

" நாளைக்கும் இதே மாதிரி குளிப்பாட்டி விடுவேன் ?! " என்றார் செல்வா.

" நாளைக்குமா ? எதுக்கு ? "

" ஏன்னா இந்தச் சோப்பு 24 மணிநேரப் பாதுகாப்புத் தானே ! " என்ற செல்வா கீழே விழுந்த சோப்பினை தண்ணீரில் கழுவத் தொடங்கினார்.