Saturday, October 27, 2012

பூட்டு

செல்வாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி செல்வாவின் அறிவாளித்தனத்தால்(?) சண்டைகள் ஏற்படுவது வழக்கமே.

செல்வாவும் எவ்வளவோமுறை தனது அறிவாளித்தனத்தை வெளியில் காட்டிக்கொல்லாமலிருக்க முயன்றுள்ளார். ஆயினும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதும் உண்டோ ? என்பதுபோல அவரது அறிவின் ஒளிக்கிரணங்கள் வெளிப்பட்டேவிடுகின்றன.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர் ஒருவர் செல்வாவின் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று செல்வாவின் பெற்றோர் வெளியூருக்குச் சென்றிருந்தனர்.

செல்வாவும் அவரது நண்பரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுவரையிலும் செல்வாவின் அறிவாளித்தனம் வெளிப்படாதது குறித்து அவரது நண்பர் மிக்க சந்தோசத்தில் இருந்தார். 

நண்பர் விடைபெறும் தருணமும் வந்தது.

"சரிடா, நான் கிளம்புறேன்!"

" சரி, போயிட்டு வா. அப்புறம் போறதுக்கு முன்னாடி எங்க வீட்டுல முன்னாடி இருக்கிற பூட்ட பூட்டிட்டுப் போய்டு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வெளில போகணும். அப்படி போகும்போது நான் பூட்டுரதுக்கு மறந்தாலும் மறந்துடுவேன்!"

வந்திருந்த நண்பர் கொஞ்சம் எரிச்சலாக " என்ன சொல்லற ? நான் எப்படி பூட்ட முடியும்? பூட்டினாலும் சாவியை என்ன செய்யுறது ?"

" நீ பூட்டிட்டு , சாவிய திண்ணைமேல வச்சிடு. நான் வெளிய வரும்போது எடுத்துக்கிறேன்!"

" எரும, வெளிய பூட்டிட்டா நீ எப்படி வருவ? "

" ஆமாம்ல, இத மறந்தே போயிட்டேன். அப்போ உள்ளே பூட்டிட்டு போய்டு!" என்றதும் அதற்குமேல் அந்த நண்பர் அங்கிருக்கவில்லை.





Thursday, March 29, 2012

லிட்டருக்கு 512 கி.மீ

செல்வாவிற்கு இருசக்கர வாகனம் ஒன்று வாங்க வேண்டுமென்பது நீண்ட நாளைய கனவு. தன் கனவு எப்பொழுது நிறைவேறுமென்று காத்திருந்தார்.

அவர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவரது தந்தை புதிதாக இருசக்கர வாகனம் வாங்கித்தர இசைந்தார்.

செல்வாவும் இருசக்கர வாகன விற்பனையகத்திற்குச் சென்று தனக்குப் பிடித்த வண்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைப் பற்றிய சில சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் அது ஒரு லிட்டர் பெட்ரோலில் எத்தனை கி.மீ செல்லும் என்ற கணக்கையும் கேட்டார்.

“ நம்ம ரோட்டுக்கு லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் கிடைக்கும்!” இது விற்பனையாளர்.

“ எப்படி அத டெஸ்ட் பண்ணுறது ? “

“ இப்ப டெஸ்ட் பண்ண முடியாதுங்க , வண்டிய ரிஜிஸ்டர் பண்ணின அப்புறம் மீட்டர் மாட்டிருவோம். அப்போ நீங்க பெட்ரோல் ஊத்தும் போது வண்டி எவ்ளோ கி.மீ ஓடிருக்குனு எழுதி வச்சுக்கங்க. மறுபடி பெட்ரோல் தீர்ந்து போகும்போது எவ்ளோ கி.மீ ஓடிருக்குனு பார்த்தா ஒரு லிட்டருக்கு எத்தன கி.மீட்டர் மைலேஜ் கொடுக்குதுனு தெரிஞ்சிக்கலாம்! “

“ இல்லைங்க, எனக்கு மீட்டர் மாட்டுறதுக்கு முன்னாடியே தெரிஞ்சாகனும்!”

” அப்படின்னா ஒரு லிட்டர் பெட்ரோல் ஊத்திக்கங்க, உங்களுக்கு வழக்கமா தெரிஞ்ச இடங்களுக்கு, அதாவது எத்தன கி.மீட்டர் தூரம்னு தெரிஞ்ச இடங்களுக்குப் போயிட்டு வாங்க. இத வச்சு எத்தன கிலோ மீட்டர்னு மைலேஜ் கொடுக்குதுனு கண்டுபிடிச்சிடலாம்!”

செல்வாவிற்கு இந்த யோசனை சரியென்று படவே இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டார்.

ஒருவாரம் கழிந்திருந்தது. செல்வா மிகுந்த ஆச்சர்யத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருசக்கர வாகனம் வாங்கிய விற்பனையகத்திற்கு வந்திருந்தார்.

செல்வாவின் மகிழ்ச்சியைக் கண்ட விற்பனையாளருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. மகிழ்ச்சிக்கான காரணம் என்னவென்று கேட்டார்.

“ என்னோட வண்டி, நீங்க சொன்னத விட அதிக மைலேஜ் கொடுக்குதுங்க!” ஆச்சர்யம் விலகாமல் செல்வா.

“ எவ்ளோ கொடுக்குது?”

“ லிட்டருக்கு 512 கி.மீ..!”

” என்ன? 512 கிலோ மீட்டரா? வாய்ப்பே இல்லையே? எத்தன லிட்டர் பெட்ரோல் ஊத்துனீங்க? “

“ ஒரே லிட்டர்தாங்க!”

“ உண்மையாவா சொல்லுறீங்க? நம்பவே முடியலையே ?”

“ சத்தியமாங்க.. ஒரு லிட்டர் பெட்ரோல் ஊத்தினதுக்கு அப்புறம் இந்த வாரம் முழுக்க எங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்துட்டு இருக்கேன். இன்னும் பெட்ரோல் தீரல. எங்க ஆபீசு எங்க ஊர்ல இருந்து 50 கி.மீ. அப்படின்னா ஒரு நாளைக்கு நூறு கி.மீட்டர் கணக்காகுது. அப்போ அஞ்சு நாளைக்கு 500 கி.மீட்டர் ஆச்சுல. பஸ்ல போனத மட்டும் சேர்த்துக்கிட்டேன். சனிக்கிழமை ட்ரெயின்ல வேற ஒரு ஊருக்குப் போனேன் அதையும் சேர்த்துக்கனுமா ? “ என்று செல்வா ஆர்வம் பொங்கக் கேட்டார்.

விற்பனையாளர் கடுங்கோபத்துடன் முறைக்கத் தொடங்கினார்.

Saturday, January 7, 2012

மீண்டும் ராங் நம்பர்!

செல்வாவின் வீட்டில் புதிதாக செல்போன் வாங்கியிருந்தார்கள். அதுதான் அவர்கள் வீட்டில் வாங்கப்பட்ட முதல் செல்போனும் கூட.

அதனால் செல்வாவிற்கு அதை இயக்கும் விதங்களைப் பற்றியும், அதில் பெயரினைப் பதிந்து வைக்கும் முறை பற்றியும் அவரது சகோதரர் விளக்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அவர்களது தொலைபேசிக்கு புதிய ஒரு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. தொலைபேசியை எடுத்த செல்வா, யாரென்று கேட்டுவிட்டு “ அவர் இல்லைங்களே, இல்ல, ஆமா! “ என்று சிறிது நேரம் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

யாருகிட்ட இப்டி குழப்பமா பேசுறான் என்று நினைத்த அவரது சகோதரர் செல்வாவிடமிருந்து தொலைபேசியை வாங்கி யாரென்று கேட்டார். பின் அது ஒரு தவறான அழைப்பென்பதைக் கண்டுகொண்டு “ ராங் நம்பர்ங்க “ என்று அழைப்பினைத் துண்டித்தார்.

 “ ஏன்டா, அவுங்கதான் வேற யாரோ வேணும் கேக்குறாங்கள்ல, ராங் நம்பர்னு சொல்லிட்டு கட் பண்ண வேண்டியதுதானே?”

“ அதான் அதுல ராங் நம்பர்னு வரலையே ? அப்புறம் எப்படி ராங் நம்பர்னு சொல்ல? “

“ராங் நம்பர்னு பேரெல்லாம் வராது, நாமதான் தெரிஞ்சிக்கனும்!”

”அதுக்கு எங்கிட்ட ஐடியா ஒரு சூப்பர் இருக்கு ? இனிமேல் ராங் நம்பர்ல இருந்து போன் வந்தா ஈசியா கண்டுபிடிச்சிடலாம்! “ என்று சொடுக்குப் போட்டார் செல்வா.

”அப்படியெல்லாம் எதுவும் முடியாது, போனே வராத மாதிரி எதாச்சும் பண்ணிவச்சிடாத?” என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு அதே போன்றொரு தவறான அழைப்பு வந்திருந்தது. அப்பொழுதும் செல்வாதான் அழைப்பினை ஏற்றது. இந்த முறையும் முன்பைப் போலவே “ யாரு, அவரு இல்லை, அவரும் இல்லை “ என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.

சந்தேகப்பட்டு தொலைபேசியை வாங்கிய அவரது சகோதரர் அது ஒரு தவறான அழைப்பென்பதைக் கண்டுகொண்டு அழைப்பினைத் துண்டித்தார்.

“ ஏன்டா, ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா ? இது ராங் நம்பர் “ என்றார்.

” இல்ல,எனக்கு நல்லா தெரியும்; அது ராங் நம்பர் இல்லை!

“ என்ன நல்லா தெரியும் ? “

”இரு, இப்ப கண்டுபிடிக்கிறேன் “ என்றவர் செல்போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு தொடர்புகொண்டார்.

தனது பெயரைச் சொல்லிவிட்டு தன்னைத் தெரியுமா என்று கேட்டார். எதிர்முனையிலிருந்து “ இல்லைங்க, இது ராங் நம்பர் “ என்று பதில் வந்து, இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தனது சகோதரரைக் கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்துவிட்டு,

“கொஞ்சநாள் முன்னாடி நம்ம போனுக்கு ராங் நம்பர்ல இருந்து கால் வந்துச்சுல்ல, அப்பவே அத ராங் நம்பர்னு சேவ் பண்ணி வச்சிட்டேன். இப்ப கூட அவுங்களுக்குத்தான் போன் பண்ணினேன். அவுங்களே ராங் நம்பர்னு சொன்னாங்க. ஆனா  இப்ப வந்தது வேற நம்பர்தானே ? அப்புறம் இது எப்படி ராங் நம்பர் ஆகும் ? “ குழப்பமாகக் கேட்டார் செல்வா.


Monday, January 2, 2012

வட்டம்!

”ஒரு வட்டத்திலிருந்து மூன்று வட்டங்களை உருவாக்க முடியுமா.?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வகுப்பிலிருந்த அனைவரையும் உற்றுப்பார்த்தார் செல்வாவின் கணக்கு ஆசிரியர்.

எல்லா மாணவர்களும் ஆச்சர்யமாகவும் , அதே சமயம் அது எப்படி முடியும் என்றும் குழம்பிக்கொண்டிருந்தனர்.

அரைமணி நேர அவகாசம் தருவதாகவும், அதற்குள் எப்படி என்று யோசித்துச் சொல்பவர்களுக்கு ஒரு பரிசு தருவதாகவும் கூறியிருந்தார்.

எல்லா மாணவர்களும் தங்களால் இயன்றமட்டும் யோசித்துப் பார்த்தனர். ஆனால் ஒருவராலும் அது எப்படி என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. செல்வாவும் யோசித்தார். அவராலும் முடியவில்லை. பின் எல்லா மாணவர்களும் தங்களால் அதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று ஒப்புக்கொண்டு அவரையே விளக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஒரு வெள்ளைக் காகித்தை எடுத்த ஆசிரியர் முதலில் பெரிதாக ஒரு வட்டத்தை வரைந்தார். பின் அந்தக் காகிதத்தின் நடுவில் ஒரு கோட்டினை வரைந்து கோட்டிற்கு வலது பக்கம் அதே போல மற்றொரு வட்டத்தை வரைந்தார். அந்த வட்டத்தின் மையப்பகுதியில் மற்றொரு சிறிய வட்டத்தினை வரைந்து அந்தச் சிறிய வட்டத்திற்கு வேறொரு வண்ணம் தீட்டினார்.

பின்னர் அந்தச் சிறிய வட்டத்தின் அளவைப் போலவே மற்றொரு வட்டத்தை பெரிய வட்டத்தின் கீழ்ப் பகுதியில் வரைந்துவிட்டு அவ்வளவுதான் என்றார்.

மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புதிதாக வட்டம் வரைந்துவிட்டு அதை எப்படி ஒரு வட்டத்திலிருந்து வந்ததாக எடுத்துக்கொள்ளமுடியும் ? என்ற குழப்பம் அவர்களுக்கு.



மாணவர்களின் குழப்பத்தை அறிந்த ஆசிரியர் “ அதாவது அந்தப் பெரிய வட்டத்துல இருந்து இந்தச் சின்ன வட்டத்த வெட்டி எடுத்துட்டேன். அப்படி வெட்டி எடுத்த இடம்தான் பெரிய வட்டத்துல நடுவுல இருக்கிற வட்டம். அதே மாதிரி பெரிய வட்டத்திலிருந்து வெட்டின அந்தச் சின்ன வட்டம்தான் கீழ இருக்கிற சின்ன வட்டம். இப்போ மூணு வட்டம் வந்திச்சா ? “ என்றார்.

மாணவர்களுக்குக் கொஞ்சம் புரிந்தது போலவும், கொஞ்சம் குழப்புவதாகவும் இருந்தது.

அப்பொழுது டக்கென எழுந்த செல்வா “ சார், ஒரு வட்டத்துல இருந்து அதே சைசுக்கு இன்னொரு வட்டத்த உருவாக்க முடியுமா.? “ என்றார்.

சிறிது நேரம் யோசித்த ஆசிரியர் “ அது முடியாதே! “ என்றார்.

”இல்ல சார், உருவாக்கமுடியும்!” இது செல்வா.

“ எப்படி ? “

செல்வாவும் அவரைப் போலவே ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக்கொண்டு அவரிடம் ஓடி, அந்த வெள்ளைப் பேப்பரின் இரண்டு பக்கங்களிலும் ஒரே அளவுள்ள இரண்டு வட்டங்களை வரைந்துவிட்டு “ அவ்ளோதான்!” என்றார்.

இப்பொழுது ஆசிரியருக்குக் குழப்பம். “என்ன அவ்ளோதான் ? இந்த வட்டம் எப்படி வந்துச்சு ?“

“ சார், நான் முதல்ல வரைஞ்ச வட்டத்த குறுக்கால வெட்டிட்டேன். அதோட முதல்பாதி அங்க இருக்கு. இன்னொரு பாதி இந்த வட்டம்! “ என்றார் செல்வா.