Saturday, January 7, 2012

மீண்டும் ராங் நம்பர்!

செல்வாவின் வீட்டில் புதிதாக செல்போன் வாங்கியிருந்தார்கள். அதுதான் அவர்கள் வீட்டில் வாங்கப்பட்ட முதல் செல்போனும் கூட.

அதனால் செல்வாவிற்கு அதை இயக்கும் விதங்களைப் பற்றியும், அதில் பெயரினைப் பதிந்து வைக்கும் முறை பற்றியும் அவரது சகோதரர் விளக்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அவர்களது தொலைபேசிக்கு புதிய ஒரு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. தொலைபேசியை எடுத்த செல்வா, யாரென்று கேட்டுவிட்டு “ அவர் இல்லைங்களே, இல்ல, ஆமா! “ என்று சிறிது நேரம் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

யாருகிட்ட இப்டி குழப்பமா பேசுறான் என்று நினைத்த அவரது சகோதரர் செல்வாவிடமிருந்து தொலைபேசியை வாங்கி யாரென்று கேட்டார். பின் அது ஒரு தவறான அழைப்பென்பதைக் கண்டுகொண்டு “ ராங் நம்பர்ங்க “ என்று அழைப்பினைத் துண்டித்தார்.

 “ ஏன்டா, அவுங்கதான் வேற யாரோ வேணும் கேக்குறாங்கள்ல, ராங் நம்பர்னு சொல்லிட்டு கட் பண்ண வேண்டியதுதானே?”

“ அதான் அதுல ராங் நம்பர்னு வரலையே ? அப்புறம் எப்படி ராங் நம்பர்னு சொல்ல? “

“ராங் நம்பர்னு பேரெல்லாம் வராது, நாமதான் தெரிஞ்சிக்கனும்!”

”அதுக்கு எங்கிட்ட ஐடியா ஒரு சூப்பர் இருக்கு ? இனிமேல் ராங் நம்பர்ல இருந்து போன் வந்தா ஈசியா கண்டுபிடிச்சிடலாம்! “ என்று சொடுக்குப் போட்டார் செல்வா.

”அப்படியெல்லாம் எதுவும் முடியாது, போனே வராத மாதிரி எதாச்சும் பண்ணிவச்சிடாத?” என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு அதே போன்றொரு தவறான அழைப்பு வந்திருந்தது. அப்பொழுதும் செல்வாதான் அழைப்பினை ஏற்றது. இந்த முறையும் முன்பைப் போலவே “ யாரு, அவரு இல்லை, அவரும் இல்லை “ என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.

சந்தேகப்பட்டு தொலைபேசியை வாங்கிய அவரது சகோதரர் அது ஒரு தவறான அழைப்பென்பதைக் கண்டுகொண்டு அழைப்பினைத் துண்டித்தார்.

“ ஏன்டா, ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா ? இது ராங் நம்பர் “ என்றார்.

” இல்ல,எனக்கு நல்லா தெரியும்; அது ராங் நம்பர் இல்லை!

“ என்ன நல்லா தெரியும் ? “

”இரு, இப்ப கண்டுபிடிக்கிறேன் “ என்றவர் செல்போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு தொடர்புகொண்டார்.

தனது பெயரைச் சொல்லிவிட்டு தன்னைத் தெரியுமா என்று கேட்டார். எதிர்முனையிலிருந்து “ இல்லைங்க, இது ராங் நம்பர் “ என்று பதில் வந்து, இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தனது சகோதரரைக் கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்துவிட்டு,

“கொஞ்சநாள் முன்னாடி நம்ம போனுக்கு ராங் நம்பர்ல இருந்து கால் வந்துச்சுல்ல, அப்பவே அத ராங் நம்பர்னு சேவ் பண்ணி வச்சிட்டேன். இப்ப கூட அவுங்களுக்குத்தான் போன் பண்ணினேன். அவுங்களே ராங் நம்பர்னு சொன்னாங்க. ஆனா  இப்ப வந்தது வேற நம்பர்தானே ? அப்புறம் இது எப்படி ராங் நம்பர் ஆகும் ? “ குழப்பமாகக் கேட்டார் செல்வா.


Monday, January 2, 2012

வட்டம்!

”ஒரு வட்டத்திலிருந்து மூன்று வட்டங்களை உருவாக்க முடியுமா.?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வகுப்பிலிருந்த அனைவரையும் உற்றுப்பார்த்தார் செல்வாவின் கணக்கு ஆசிரியர்.

எல்லா மாணவர்களும் ஆச்சர்யமாகவும் , அதே சமயம் அது எப்படி முடியும் என்றும் குழம்பிக்கொண்டிருந்தனர்.

அரைமணி நேர அவகாசம் தருவதாகவும், அதற்குள் எப்படி என்று யோசித்துச் சொல்பவர்களுக்கு ஒரு பரிசு தருவதாகவும் கூறியிருந்தார்.

எல்லா மாணவர்களும் தங்களால் இயன்றமட்டும் யோசித்துப் பார்த்தனர். ஆனால் ஒருவராலும் அது எப்படி என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. செல்வாவும் யோசித்தார். அவராலும் முடியவில்லை. பின் எல்லா மாணவர்களும் தங்களால் அதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று ஒப்புக்கொண்டு அவரையே விளக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

ஒரு வெள்ளைக் காகித்தை எடுத்த ஆசிரியர் முதலில் பெரிதாக ஒரு வட்டத்தை வரைந்தார். பின் அந்தக் காகிதத்தின் நடுவில் ஒரு கோட்டினை வரைந்து கோட்டிற்கு வலது பக்கம் அதே போல மற்றொரு வட்டத்தை வரைந்தார். அந்த வட்டத்தின் மையப்பகுதியில் மற்றொரு சிறிய வட்டத்தினை வரைந்து அந்தச் சிறிய வட்டத்திற்கு வேறொரு வண்ணம் தீட்டினார்.

பின்னர் அந்தச் சிறிய வட்டத்தின் அளவைப் போலவே மற்றொரு வட்டத்தை பெரிய வட்டத்தின் கீழ்ப் பகுதியில் வரைந்துவிட்டு அவ்வளவுதான் என்றார்.

மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. புதிதாக வட்டம் வரைந்துவிட்டு அதை எப்படி ஒரு வட்டத்திலிருந்து வந்ததாக எடுத்துக்கொள்ளமுடியும் ? என்ற குழப்பம் அவர்களுக்கு.



மாணவர்களின் குழப்பத்தை அறிந்த ஆசிரியர் “ அதாவது அந்தப் பெரிய வட்டத்துல இருந்து இந்தச் சின்ன வட்டத்த வெட்டி எடுத்துட்டேன். அப்படி வெட்டி எடுத்த இடம்தான் பெரிய வட்டத்துல நடுவுல இருக்கிற வட்டம். அதே மாதிரி பெரிய வட்டத்திலிருந்து வெட்டின அந்தச் சின்ன வட்டம்தான் கீழ இருக்கிற சின்ன வட்டம். இப்போ மூணு வட்டம் வந்திச்சா ? “ என்றார்.

மாணவர்களுக்குக் கொஞ்சம் புரிந்தது போலவும், கொஞ்சம் குழப்புவதாகவும் இருந்தது.

அப்பொழுது டக்கென எழுந்த செல்வா “ சார், ஒரு வட்டத்துல இருந்து அதே சைசுக்கு இன்னொரு வட்டத்த உருவாக்க முடியுமா.? “ என்றார்.

சிறிது நேரம் யோசித்த ஆசிரியர் “ அது முடியாதே! “ என்றார்.

”இல்ல சார், உருவாக்கமுடியும்!” இது செல்வா.

“ எப்படி ? “

செல்வாவும் அவரைப் போலவே ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக்கொண்டு அவரிடம் ஓடி, அந்த வெள்ளைப் பேப்பரின் இரண்டு பக்கங்களிலும் ஒரே அளவுள்ள இரண்டு வட்டங்களை வரைந்துவிட்டு “ அவ்ளோதான்!” என்றார்.

இப்பொழுது ஆசிரியருக்குக் குழப்பம். “என்ன அவ்ளோதான் ? இந்த வட்டம் எப்படி வந்துச்சு ?“

“ சார், நான் முதல்ல வரைஞ்ச வட்டத்த குறுக்கால வெட்டிட்டேன். அதோட முதல்பாதி அங்க இருக்கு. இன்னொரு பாதி இந்த வட்டம்! “ என்றார் செல்வா.