Wednesday, March 30, 2011

வெளியூர் நண்பர்

செல்வாவின் நண்பர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார். அவர் செல்வாவின் ஊரைப் பற்றிக் கிண்டலாகவும் அவரது ஊரைப் பற்றி பெருமையாகவும் பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் இதைக் கேட்ட செல்வா மிகவும் எரிச்சலடைந்தார். இருந்தபோதும் தனது எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

" எங்க ஆபீசுல எனக்கு AC ரூம் குடுத்திருக்காங்க , உனக்கு ? " என்று கேட்டார் நண்பர்.

" இல்ல எனக்கு தரல , அது சரி அவரு வந்தா நீ வெளிய போயிருவியா?"

" எவரு வந்தா ?" 

" AC ரூம்னு சொன்னியே , AC னா Assistant Commissioner தானே. அதான் கேட்டேன்! "

" உங்க ஊர்ல எதைச் சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிங்களா ? AC னு சொன்னது Air Conditioner .. என்ன ஆளுங்கடா நீங்க ? " என்று மறுபடியும் செல்வாவை மட்டம் தட்ட ஆரம்பித்தார். அப்பொழுது பின்னாலிருந்து வந்த லாரி ஒன்று அவர் அருகில் மோதுவது போல வந்து பின்னர் விலகிச் சென்றது.

" என்ன கேவலமான ட்ராபிக் ரூல்ஸ் உங்க ஊர்ல , எப்படி வரான் பாரு ? " என்று மேலும் மட்டம் தட்ட ஆரம்பித்தார்.

எதாச்சும் செய்யணுமே என்று எண்ணிய செல்வா " எங்க ஊர் ரோடு அப்படி , ஆக்சிடென்ட் ஆனா கூட ஒன்னும் ஆகாது  " என்றார்.

" அது எப்படி ஆக்சிடென்ட் ஆனா கூட ஒன்னும் ஆகாது ? " என்றார் நண்பர் ஆச்சர்யமாக.

" எல்லாம் லேட்டஸ்ட் டெக்னாலஜி , இங்க இருக்குற ரோடுல நாங்க லாரி டயருக்கு அடில செல்போன வச்சு எடுப்போம் , அப்ப கூட உடையாது தெரியுமா ? " என்றார் செல்வா.

" உண்மையாவா , என்னால நம்பவே முடியல , எங்க உன்னோட செல்போன வச்சு காமி பாப்போம் " என்றார் அந்த நண்பர்.

" அத வீட்டுல வச்சிட்டு வந்திட்டேன் !" 

" சரி என்னோட போன வைக்கலாம் "  என்றவர் திடீரென கொஞ்ச தூரத்தில் வந்துகொண்டிருந்த லாரியைப் பார்த்துவிட்டு அதுல வைக்கட்டுமா என்று கூறிக்கொண்டு லாரியின் சக்கரம் செல்போனில் ஏறுமாறு வைத்துவிட்டு ஓரத்தில் வந்து நின்றுகொண்டார்.
      
வேகமாக வந்த லாரி நண்பரின் செல்போன் மீது ஏறிச் சென்றது. லாரி சென்றதும் தனது போனின் அருகில் சென்ற அந்த நண்பர் மிகுந்த கோபத்துடன் " அட பாவி!  லேட்டஸ்ட் டெக்னாலஜினு பொய் சொல்லி என்னைய ஏமாத்திட்டியே , 12 ஆயிரம் குடுத்து வாங்கின செல்லு ஒடஞ்சு போச்சே " என்று அழ ஆரம்பித்தார்.

" நான் எங்க பொய் சொன்னேன் ? "

" நீ தான லாரி டயருக்கு அடில போன வச்சா கூட உடையாதுன்னு சொன்ன., இப்ப உடைஞ்சு போச்சே ! " 

" உனக்கும் உங்க ஊர்க் காரங்களுக்கும் அறிவே கிடையாது , லாரி டயருக்கு அடில போன வச்சா உடையாதுன்னு சொன்னேன் , ஆனா அது லாரி நின்னுட்டு இருக்கும்போது மட்டும் , நீ எதுக்கும் போயிட்டு இருக்குற லாரி டயருக்கு அடில வச்ச? " என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் செல்வா.

Tuesday, March 29, 2011

செல்வாவின் திட்டம்

மருத்துவமனையில் செல்வாவும் மருத்துவரும் எதைப்பற்றியோ கொஞ்சம் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். செல்வா தனக்கு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை செய்யுமாறு வேண்டிக்கொண்டிருந்தார்.

" ஐயோ அதெல்லாம் நினைச்ச நேரத்துக்குப் பண்ண முடியாதுங்க ! "

" ஏன் பண்ண முடியாது ? சரி இன்னிக்கு வேண்டாம் , நாளைக்கு பண்ணுங்க ., அதுவும் முடியலைனா இந்த வாரத்துக்குள்ள பண்ணிடுங்க! "

" என்ன விளையாடுறீங்களா ? நான் இங்க என்ன சின்ன குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடமா நடத்திட்டு இருக்கேன் , உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆபரேசன் பண்ண முடியாது ! " என்று கத்த ஆரம்பித்தார்.

ஆனால் செல்வா மருத்துவரின் கூச்சலுக்குப் பயக்கவில்லை. " அதெல்லாம் முடியாது டாக்டர் , எனக்கு நீங்க ஆபரேசன் பண்ணித்தான் ஆகணும் " 

" என்னங்க புரியாம பேசுறீங்க , உங்களுக்குத்தான் ஒரு பிரச்சினையும் இல்லையே , அப்புறம் எதுக்கு ஆபரேசன் பண்ணனும் ? " 

" எனக்குப் பிரச்சினை இல்ல , ஆனா அடுத்த மாசத்துக்குள்ள என்னோட மெடிக்ளைம் பாலிசி முடியுது, அதனால என்னோட பணம் வேஸ்ட் ஆகிடும் போல , அதான் ஒரு ஆபரேசனாச்சும் பண்ணிக்கலாம்னுதான் " என்றார் செல்வா கொஞ்சம் ஏக்கமாக.

இதைகேட்ட மருத்துவர் " ஏங்க இப்படி இருக்கீங்க ? எல்லோரும் நோய் வரக்கூடாதுன்னு நினைப்பாங்க , ஆனா உங்களை மாதிரி ஒரு லூச இதுவரைக்கும் பார்த்ததே இல்ல , தயவு பண்ணி வேற ஹாஸ்பிடல் பார்த்துக்கோங்க " என்று கத்தியவரை மேலும் பார்க்க வேண்டாமென எண்ணி செல்வா அகிம்சைக் கடைப்பிடித்து வெளியில் வந்தார்.


Monday, March 28, 2011

மீன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா ?

செல்வாவின் உடல் சற்று ஒல்லியாக இருந்தது. தான் எப்படியும் தனது உடல் அளவினை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய செல்வா அருகில் இருந்த மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறலாம் என்று சென்றார்.

செல்வாவின் உடலைச் சோதனை செய்த மருத்துவர் " ஒன்னும் பிரச்சினை இல்லை , மீன் சாப்பிட்டா உங்க உடம்பு ஒரு வாரத்துல 3 கிலோ ஏறிடும் " என்று கூறி அடுத்தவாரம் வந்து பார்க்குமாறு அனுப்பினார்.

ஒருவாரத்திற்குப் பிறகு மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்த செல்வாவின் எடை கொஞ்சமும் அதிகரிக்கவில்லை. இதைப் பார்த்த மருத்துவர் " மீன் சாப்டா உடம்பு வரும்னு சொன்னேனே , என்ன பண்ணுனீங்க ? "

" சார் நானும் ஒரு கிலோ எடை இருக்குற மீன் வாங்கி எங்க வீட்டுத் தொட்டில விட்டு தினமும் அதுக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டுட்டே இருக்கேன் , அதுதான் கொழு கொழுன்னு வளருதே தவிர என்னோட எடை அதிகமாகவே இல்ல " என்றார் பரிதாபமாக.

இதைக்கேட்ட மருத்துவர் " என்ன சொல்லுறீங்க ? மீனுக்கு எதுக்கு சாப்பாடு போட்டீங்க ? " என்றார் குழப்பமாக.

" நீங்கதானே சொன்னீங்க , மீன் சாப்பிட்டா என்னோட உடம்புக்கு நல்லதுன்னு , அதான் மீனுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன் ., அதுவும் சாப்பிட்டுச்சு ! "

" நான் சொன்னது மீன நீங்க சாப்பிட்டா நல்லதுன்னு சொன்னேன் , மீன் சாப்பாடு சாப்பிட்டா அதுக்குத்தான் நல்லது , உங்களுக்கு இல்ல .." என்று கூறியவர் " இனிமேலாச்சும் மீன் வாங்கி நீங்க சாப்பிடுங்க " என்று அறிவுறுத்தினார்.

" சார் உயிரோட மீனா ? இல்ல செத்துப்போன மீனா ? "

எரிச்சலடைந்த அந்த மருத்துவர் " உயிரோட மீன் தான் " என்றார்.

" அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா ? , ஆனா ஒரு பானை தண்ணி என்னோட வயிறு பிடிக்காதே ?!! "

இந்தக் கேணத்தனமான கேள்வியை எதிர்பார்த்திராத அந்த மருத்துவர் " தயவு செஞ்சு வெளிய போறீங்களா ? இல்ல நான் போகட்டுமா ? " என்று கூச்சல் போட்டார்.

இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.

Saturday, March 26, 2011

தெரிந்த வேலை

செல்வாவின் அலுவலகம் முன்பு மழை நீரினால் ஏற்பட்ட ஒரு குழி ஒன்று இருந்தது.

ஒருநாள் செல்வாவிற்கு வேலை குறைவாக இருந்ததால் அவரது மேலாளர் செல்வாவை அழைத்து யாரேனும் கூப்பிட்டு இந்தக் குழியை மூடிவிடு என்று கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வா அந்த வேலையே முடித்துவிட்டதாகவும் வந்து பார்வையிடுமாறும் அவரது மேலாளரிடம் கூறினார்.

இதைக்கேட்ட அவரது மேலாளர் " வெரி குட் , அதுக்குள்ளே முடிச்சிட்ட " என்று கூறிக்கொண்டே அந்தக் குழி இருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே அந்தக் குழி மூடப்பட்டிருந்தது , ஆனால் அதற்குப் பக்கத்தில் வேறொரு குழி புதிதாகத் தோண்டப்பட்டிருந்தது. மேலாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

" இந்தக் குழி எதுக்கு ? " என்றார் மேலாளர் சற்று கோபமாக .

" சார் அந்தக் குழிக்கு மண் எங்க இருந்து எடுக்கிறதுன்னு கேட்டாங்க , அதான்
பக்கத்துல தோண்டி எடுத்துக்கோங்கனு சொன்னேன் , அதுல குழி ஆகிருக்குமோ ? " என்றார் செல்வா வியப்பாக.

செல்வாவை முறைத்த அவரது மேலாளர் " நல்லா படிச்சிருக்க , இன்டர்வியூவ்லயும் நல்லா பெர்பார்ம் பண்ணினணுதான் உன்ன வேலைக்கு எடுத்தேன். ஒரு குழிக்கு மண்ணு கூட போடத் தெரியாம இருக்கியே , உன்னயெல்லாம் வச்சு என்ன பண்ணுறது? " என்றார்.

" சார் , இது எனக்கு எப்படி சார் தெரியும் , எனக்குத் தெரிஞ்ச வேலை சொல்லி அதுல தப்பு நடந்தா கேளுங்க , தெரியாத வேலையக் குடுத்துட்டு தப்பாகிடுட்சுனா நான் என்ன சார் பண்ண முடியும் ? " என்றார் செல்வா.

Friday, March 25, 2011

செல்வாவின் முன்னெச்சரிக்கை

செல்வாவின் நண்பர் ஒருவர் குளியலறையில் தரை வழுக்கியதால் கீழே விழுந்து பின்னந்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இத்தகவலை அறிந்த செல்வா நண்பரைக் காண்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். அப்பொழுது செல்வாவின் தொலைபேசி ஒலித்தது. செல்வாவின் நண்பர் அழைத்திருந்தார். அவரிடம் பேச செல்வாவிற்கு விருப்பம் இல்லையாதலால் தொலைபேசியை எடுத்து " என்னோட போன் சுவிட்ச் ஆப் ல இருக்கு " என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

அங்கிருந்த அந்த நண்பரின் உறவினர்களிடம் விசாரித்த செல்வா அவரது நண்பர் இருந்த அறைக்குச் சென்றார். 

நண்பரின் உடல்நிலை இப்பொழுது கொஞ்சம் நல்ல நிலைக்கு மாறியிருந்தது. செல்வா அவரது உடல்நிலையைப் பற்றி விசாரித்துவிட்டு " எங்க விழுந்த ? " என்றார்.

" பாத்ரூம் போகும்போது தரை வழுக்கி விட்டுருச்சு ! "

" இதுக்குத்தான் எங்க போனாலும் ஹெல்மெட் போடனும்கறது ? " என்றார் செல்வா.

" லூசா நீ , பாத்ரூம் போகும்போது கூட ஹெல்மெட் போடனும்கற ? "

" அட எங்க போனா என்ன ? ஹெல்மெட் போட்டுட்டுப் போக வேண்டியதுதானே ! "

" உன்னயெல்லாம் எவன் உள்ள விட்டது ? உன்னப் பார்த்த போதே நினைச்சேன் , ஒழுங்கா வெளிய போய்டு " என்று கத்த ஆரம்பித்தார் அவரது நண்பர்.

நல்லதுக்கே காலம் இல்லை என்று முனகியவாறே செல்வா மருத்துவமனையில் இருந்து வெளியில் கிளம்பினார்.


Thursday, March 24, 2011

சோதிடம் பொய்யா ?

செல்வா ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார். ஆனால் அவளது அண்ணனை நினைத்து சற்று பயந்து வந்தார். இதை அறிந்த அவரது நண்பர் அவரிடம் " நீ எதற்கும் ஒரு சோதிடரிடம் ஆலோசனை கேள் " என்றார்.

செல்வாவும் அருகில் இருந்த சோதிடர் ஒருவரிடம் சென்று அந்தப் பெண்ணின் சாதகத்தைக் காட்டி ஆருடம் சொல்லுமாறு வேண்டினார்.

" இந்தப் பொண்ணு நல்ல வசதியான குடும்பத்துல பிறந்திருக்கும்... "

" ஆமா சார் , ரொம்ப சரியா சொன்னீங்க . அப்புறம் நான் முக்கியமா கேக்க வந்தது அவுங்க அண்ணன பத்தி.. "

" அவுங்க அண்ணனப் பத்தி சொல்லனும்னா ..இந்தப் புள்ள சாதகத்துப் படி  ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை .. சந்திரன் , செவ்வாயி ... ம்ம் .. ரொம்ப சாந்தமாதான் இருப்பார். பயப்பட வேண்டாம்.. " என்றார் சோதிடர்.

செல்வா சற்றே ஆறுதல் அடைந்து பின்னர் மீண்டும் அவளது தந்தை பற்றிக் கேட்டார்.

அந்தப் பெண்ணின் சாதகத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்தவர் " இந்த சாதகத்துப் படி இந்தப் பொண்ணோட அப்பா உயிரோட இருக்க முடியாதே . " 

" சார் , நல்லா பார்த்து சொல்லுங்க , அந்த ஆள் குத்துக்கல்லாட்டம் இருக்கார் " என்றார் செல்வா .

" எத வேணா சந்தேகப் படு , என்னோட கணிப்பு என்னிக்குமே பொய் போனதில்ல , அந்த ஆள் மட்டும் உசுரோட இருந்திட்டா நான் சோசியம் பாக்குற தொழிலையே விட்டுடறேன்." என்று சவாலாகப் பேசினார் சோதிடர்.

" உண்மைலேயே அவர் உயிரோடதான் இருக்காருங்க .! " என்றவர் குனிந்து எதையோ தேடினார்.

" நேர்ல காட்ட முடியுமா ? " 

" நேர்ல என்னத்தக் காட்டுறது , உங்க பொண்ணத்தான் நான் லவ் பண்றேன். நீங்க உயிரோடதானே இருக்கீங்க ? அதுக்குத்தான் கொஞ்சம் டவுட் ஆகி உங்க காலப் பார்த்தேன் " என்றார் செல்வா.

இந்தப் பதிலை எதிர்பார்க்காத சோதிடர் சற்று அதிர்ந்தவராய் " என்ன சொல்லுற , உண்மையாவா ? " என்றார்.

" ஆமாங்க , அதான் அவ சாதகத்த ஜெராக்ஸ் எடுத்துப் பேர மட்டும் மாத்திக்கொடுத்தேன் "

" போயும் போயும் உன்ன லவ் பண்றாளே " என்றவர் எப்படி என் ஜோதிடம் பொய்யாப்போச்சு " என்று குழம்பினார்.

இதைக்கேட்ட செல்வா " ஏன் உண்மை ஆகணும்னு நினைக்குறீங்களா ? " என்றார்.

" ஐயோ வேண்டாம் ... நான் வேணா அவள உனக்கே கல்யாணம் பண்ணிக்கொடுத்திடறேன்  " என்று பதறினார் சோதிடர்.

( தெய்வங்களே , இது முழுக்க முழுக்க கற்பனை .. நான் ஜோசியக் காரர் பொண்ண லவ் பண்ணல )

Wednesday, March 23, 2011

தமிழ் தெரியாத ஆடு

செல்வாவின் ஊரில் கிடாய் வெட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. 

ஒவ்வொருவரும் தங்களின் கிடாயை சாமி முன்பு நிறுத்தி அதன் மேல் பூ , போட்டு வைத்து பின்னர் தண்ணீர் தெளித்து தனது வேண்டுதல்கள் நடக்குமா என்று ஆருடம் கேட்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தனர். கிடாய் தனது உடலை சிலிர்த்து ஆட்டினால் அந்த செயல் நடக்கும் என்பது அவர்களின் முடிவு.

ஒவ்வொருவரும் தங்களது கிடாயை அழைத்துவந்து  பிடித்துவந்து கோவில் முன்பு நிறுத்தி மழை பெய்யுமா , கிணற்றில் தண்ணீர் வருமா போன்ற கேள்விகளைக் கேட்பதும் பின்னர் அதன் மீது தண்ணீர் தெளித்து அது தனது உடலை சிலிர்த்ததும் தண்ணீர் வரும் என்று கூறிக்கொண்டு அதனை வெட்டிவிடுவர்.

இப்படியாக ஒவ்வொருவரும் தங்களது கோரிக்கைகளைக் கேட்டு தங்களது கிடாய்களை பலி கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு கிடாய் மட்டும் எவ்வளவு தண்ணீர் அதன் மீது தெளித்தும் அது சிலிர்க்கவில்லை.

ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டிருந்தனர். அதுவும் இல்லாமல் அந்தக் கிடாயை ஒவ்வொருவரும் தங்களது கைகளில் பிடித்து வேறு வேறு கோரிக்கை வைத்து ஆருடம் கேட்டனர். யார் பிடித்துக் கேட்டாலும் அது தனது உடலை சிலிர்ப்பதாக இல்லை. இதைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வா உடனே அந்தக் கிடாயை வாங்கி ஆங்கிலத்தில் எதோ சொல்லிக்கொண்டு கையில் பிடித்தார்.

உடனே அந்தக் கிடாய் தனது உடலைச் சிலிர்க்க ஆரம்பித்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம். ( உண்மையில் செல்வாவிற்கே அது ஏன் தனது உடலை சிலிர்த்தது என்று தெரிந்திருக்கவில்லை ). 

" அது எப்படி உன்னோட கைக்கு வந்ததும் துளுக்குச்சு ( சிலிர்த்தது )..? "

" தெரியல " என்றார் செல்வா.

" இல்ல நீ என்னமோ இங்கிலீசுல சொன்னதாலதான் அது துளுக்குச்சு. அது என்னனு சொல்லு " என்று வற்புறுத்தினார் அவரது நண்பர்.

சற்று நேரம் மழுப்பிய செல்வா கொஞ்சம் நக்கலாக " அதுக்கு தமிழ் தெரியாது , அதான் இங்கிலீசுல கேட்டேன் " என்றார்.

இதைக் கேட்ட அந்த நண்பர் " அதுக்குத் தமிழ் தெரியாதுன்னு உனக்கு எப்படித் தெரியும் ,நான் நம்ப மாட்டேன், நீ என்னமோ மந்திரம் போட்டுட்ட ஒழுங்கா சொல்லு " என்றார் நண்பர்.

நீண்ட நேரம் செல்வாவும் தான் எந்த மந்திரமும் பயன்படுத்தவில்லை , அந்த ஆட்டிற்கு இங்கிலீஸ் தெரியும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.

இதனை நம்ப மறுத்த நண்பர் " அதுக்கு இங்கிலீஸ் தெரியும்னு நான் எப்படி நம்புறது ? " என்றார்.

சற்று யோசித்த செல்வா " சரி அந்தக் கிடாயப் பிடி, அதுகிட்ட கேக்கலாம் " என்றார்.

அந்த நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை . அந்த ஆட்டுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்.

" மழை வர்றது தெரியுது , கடலை வெலயுறது தெரியுது , இது மட்டும் ஏன் தெரியாது ? " என்றார் குறுஞ்சிரிப்புடன்.

" ஓ , அந்தக் கிடாய்கிட்ட துளுக்குக் கேக்கலாம்னு சொல்லுறியா ? " என்றவர் அந்தக் கிடாயை இழுத்து வந்து வழக்கம் போல அலங்கரித்துக் கையில் பிடித்துக்கொண்டு " அந்தக் கிடாய்க்கு இங்கிலீஸ் தெரியுமா ? " என்று கேட்டுக்கொண்டு அதன் மேல் தண்ணீரை ஊற்றினார்.

கிடாயும் வழக்கம் போல தனது உடலை ஆட்டியது. இதைப் பார்த்த அவரது நண்பர் " ஆமா , அந்தக் கிடாய்க்கு இங்கிலீசு தெரியும் " என்று கூறினார்.

இதைக் கேட்ட செல்வா நைட்டு 12 மணிக்கு கெடாய் மேல தண்ணி ஊத்தினா அது சிலிர்க்காம என்னடா பண்ணும் என்று மனதில் நினைத்துக்கொண்டு " நான் அப்பவே சொன்னேன்ல !" என்றார்.

Tuesday, March 22, 2011

செல்வாவும் போக்குவரத்து அதிகாரியும்

 செல்வா அலுவலகம் செல்லும் பாதையில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் நின்றிந்தார். அவர் அனைத்து ஆதாரங்களைக் காட்டினாலும் பணம் பறிப்பார் என்று நண்பர் ஒருவர் செல்வாவிடம் கூறியிருந்தார்.

செல்வா அதை நம்பவில்லை. அது எப்படி அனைத்து ஆதாரங்களும் இருந்தும் ஒருவர் பணம் பறிப்பார் ? என்று நினைத்தவர் வழக்கம் போல அந்த வழியாகச் சென்றார். இவரை வழிமறித்த போக்குவரத்து அதிகாரி 

" லைசென்ஸ் வாங்கிட்டியா ? " என்றார்.

" எதுக்கு சார் ? "

" என்ன நக்கலா ? ஒழுங்கா லைசென்ஸ் , RC புக் , இன்சூரன்ஸ் எல்லாத்தையும் காட்டு ? " 

செல்வாவும் அனைத்து ஆவணங்களையும் காட்டினார். அந்த அதிகாரி எப்படி இவனிடம் பணம் பிடுங்குவது என்று யோசித்தவர் , " எதுக்கு இவ்ளோ வேகமா வந்த ? , அங்க பார் SPEED LIMIT 40 KMPH னு போட்டிருக்கு. நீ 50 KMPH ல வந்திருக்கற , அதனால ஃபைன் போடட்டுமா , இல்ல 100 ரூபாய் குடுத்திட்டு வண்டிய எடுத்துக்கிறியா ? " என்றார்.

செல்வாவிற்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல் நூறு ரூபாயை அவரிடம்   கொடுத்துவிட்டு தனது வண்டியை எடுத்துச்சென்றார். 

அடுத்தநாளும் அதே இடத்தில் அதே அதிகாரி கையை காட்டி செல்வாவை நிறுத்துமாறு கூறினார். செல்வா இந்த முறை தனது வேக முள்ளின் அளவைப் பார்த்தார். அது 40 KMPH என்ற அளவைக்காட்டியது. இதைப் பார்த்த செல்வா அதே வேகத்தில் அந்த அதிகாரியை நெருங்கிச்சென்று நீட்டிக்கொண்டிருந்த அவரது கையில் மோதி அவரைக் கீழே தள்ளிவிட்டு இவரும் விழுந்தார்.

கோபமாக எழுந்த அந்த அதிகாரி செல்வாவிடம் வந்து " நான் கைய நீட்டுறது  கூட தெரியாம என்னத்த வண்டி ஓட்டுற ? " என்றார்.

செல்வா சற்று மரியாதையாக " சார் , நான் அந்த SPEED LIMIT பார்த்துதான் ஓட்டினேன். 40 KMPH னு இருக்கு. அப்படின்னா அத விட கம்மியா ஓட்டினா அதுக்கும் பணம் கேப்பீங்களோனு நினைச்சுத்தான் அதே வேகத்துல வந்தேன் " என்றார்.  

Monday, March 21, 2011

என்னோட போன் எங்க இருக்கு ?

செல்வா ஒரு முறை தனது தொலைபேசியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே தனது நண்பர்களிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.

" டேய் பிரபு , என்னோட போன காணோம் , நீ பார்த்தியா ? "

" நீ உண்மைலேயே லூசா , இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா ? " என்றார் பிரபு சற்று கோபமாக.

" ஏண்டா ? "

" என்ன நோண்டா , இனிமேல் என்கிட்டே போன காணோம் , கீன காணோம் சொல்லிப்பாரு " என்று கோபமாக கூறினார் பிரபு.

" போடா , உன்னோட போன் தொலைஞ்சா தெரியும் " 

" போன் தொலைஞ்சா எப்படி தெரியும் ? லூசு மாதிரி பேசு ! " என்று சிரித்தார் பிரபு.

" போடா , உங்கிட்ட கேட்டேன் பாரு " என்று கூறிவிட்டு அவரது மற்றொரு நண்பரிடம் கேட்டார்.


" மச்சி , என்னோட போன பார்த்தியா ? "

" இல்ல , ஏன் காணாம போச்சா ? எப்ப இருந்து காணோம் ? அது காணாம போகும் போது என்ன கலர் டிரஸ் போட்டிருந்தது ? "

"ங்கொய்யால , போன் எப்படிடா டிரஸ் போடும் ? "

" ஒ , சாரி , வழக்கம்போல கேட்டுட்டேன். சரி அத எப்படி கண்டுபிடிக்கிறது ? "

" அதான் எனக்கும் தெரியல ,ஆ , ஐடியா .. உன்னோட போன்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் விடேன் , அத வச்சு கண்டுபிடிச்சிடலாம்ல " என்றார் செல்வா சற்று மகிழ்ச்சியாக.

" மிஸ்ட் கால எதுக்கு கண்டுபிடிக்கணும் ? "

" டேய் , மிஸ்ட் கால கண்டுபிடிக்கல , என்னோட போன கண்டுபிடிக்கலாம்னு சொன்னேன் ! " 

" சரி , இரு விடுறேன் .... ஐயோ என்னோட போன்ல பேலன்ஸ் இல்ல மச்சி , சாரிடா " என்றார் அவரது நண்பர்.

" ச்சே , சரி விடு , நானே தேடிப்பாக்குறேன் " , என்று காணமல் போனதாகத் தேடிக்கொண்டிருந்த தொலைபேசியின்  இணைப்பைத் துண்டித்தார் செல்வா.

Saturday, March 19, 2011

எமலோகமும் செல்வாவும்

செல்வா இறந்த பின்பு எமதூதர்கள் வந்து செல்வாவை எமன் முன்பு கொண்டு நிறுத்தினர். எமன் அங்கிருந்த " எமலோகக் குறிப்புகள் " என்ற புத்தகத்தினைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது செல்வாவின் முன்பாக அவரது நண்பர் ஒருவரும் நின்றிருந்தார். அவரது நண்பர் கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

எமதர்மன் ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களைப் பார்த்து அவர்களை சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பிக்கொண்டிருந்தார். இப்பொழுது செல்வாவின் குறிப்புகளைப் பார்த்த எமன் அவரை சொர்க்கத்திற்குச் செல்லுமாறு அனுப்பினார். செல்வா தான் அந்த நண்பரின் முடிவினை பார்த்துவிட்டு செல்கிறேன் என்று நின்றுகொண்டிருந்தார்.

அவரது நண்பரின் குறிப்புகளைப் பார்த்த எமன் அவரை நரகத்திற்குச் செல்லுமாறு அனுப்பினர். அந்த நண்பர் தன்னை ஏன் நரகத்திற்கு அனுப்புகிறீர்கள் என்று வினவினார். அதற்கு எமன் " நீ ஒரு முறை திருட நினைத்திருக்கிறாய் , அதனால்தான் உன்னை நரகத்திற்கு அனுப்புகிறேன் " என்றார்.

"ஆனா நான்தான் திருடலையே , அதுக்குள்ளே அந்த வீட்டு ஆளுக வந்திட்டாங்க , அதனால நான் திருடாம வந்திட்டேனே ! "

" நீ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அனால் திருட நினைத்திருக்கிறாய் , செல்வா ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும் நேர்மையாக வாழ நினைத்திருக்கிறார்.வாய்ப்பு கிடைக்காமல் நல்லவராக இருப்பது வேறு , கெட்டுப்போக வாய்ப்புகள் இருந்தும் நல்லவராக இருப்பது வேறு , பெண்களே இல்லாத இடத்தில் ஏகபத்தினி விரதனாக இருப்பதற்கும் , பெண்கள் மட்டுமே உள்ள இடத்தில் ஏக பத்தினி விரதனாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது! இதிலே நீ முதல் வகை " என்றார் எமன்.

அருகில் நின்று கொண்டிருத்த செல்வாவிற்கு குழப்பம் . ஏன் என்றால் திருட்டு என்ற வார்த்தையை இப்பொழுதான் கேட்கிறார். எமனிடமே கேட்டும் விட்டார் " திருட்டுனா என்ன ? "

இதைக்கேட்ட எமன் செல்வாவை ஆரத்தழுவி கண்ணீர் விட்டு " திருட்டுனா என்னன்னே தெரியாம இருக்குற நல்லவன பிடிச்சிட்டு வந்திட்டீங்களேடா ? " என்று எம தூதர்களை திட்டிவிட்டு செல்வாவைத் திரும்பவும் பூமிக்கே அனுப்பிவிட்டார்.

பின்னர் பூமிக்கு வந்த செல்வா " எமலோகக் குறிப்புகள் " என்ற புத்தகத்தினை வைத்துக் கண்காட்சி நடத்தி பெரிய பணக்காரர் ஆனார் என்பது நமக்குத் தேவை இல்லாதது. அவருக்குத் திருட்டு என்றால் என்னவென்றே தெரியாது!!


Friday, March 18, 2011

என்ன தலைப்பு வைப்பது ?

செல்வா அவரது அலுவலகத்திற்கு வருகை தருவோரின் பெயர் மற்றும் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது தினேஷ் என்பவரும் , அவரது மனைவியும் வந்தனர்.

செல்வா : "வாங்க சார் , உங்க பேர் சொல்லுங்க .

தினேஷ் : " என்னோட பேர் தினேஷ் "

" இனிசியல் சொல்லுங்க "

 " S ".

" தினேசா இல்ல தினேஷ்குமாரா ? "

" இல்ல வெறும் தினேஷ்தான்."

" உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ? " 

" ஆகிடுச்சு , இவுங்க தான் என்னோட வைப் , பேரு பரிமளா! "

" ஓகே , சார் , இருங்க அவுங்களைப் பத்தியும் எழுதிக்கிறேன் , அவுங்க பேரு பரிமளா , அவுங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"

" என்ன சார் இப்படி கேக்குறீங்க ? என்னோட வைப்னு சொல்லுறேன் , கல்யாணம் ஆகிடுட்சானு கேக்குறீங்க ? "

" ஏன் உங்க வைப்கு கல்யாணம் ஆகாதா ? "

" யோவ் , கல்யாணம் ஆனா தானையா அவ எனக்கு மனைவி ஆவா ? லூசா நீ ? "

" ஓ , சாரி .. சரி இந்தாங்க உங்க பதிவுச் சீட்டு "

அந்தப் பதிவுச் சீட்டில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது 

பெயர் : S இல்ல வெறும் தினேஷ்.

திருமண நிலை :  மணமாகிவிட்டது.

மனைவி பெயர் :  பரிமளா.


அவர் மனைவியின் சீட்டில் 

பெயர் : பரிமளா 

திருமண நிலை : தினேசிற்குத் திருமணம் ஆனதால் இவருக்கு ஆகிவிட்டது!

கணவர் பெயர் : கல்யாணம் ஆனா தான அவ எனக்கு வைப் !! 


Thursday, March 17, 2011

என்ன வரம் கேட்பது ?

ஒருமுறை செல்வாவின் கனவில் கடவுள் தோன்றினார். செல்வா அவரிடம் " நீங்கள் யார் ? " என்று கேட்டார்.

" நான்தான் கடவுள் , உனக்கு என்ன வரம் வேண்டும் ? " என்று கேட்டார்.

" நீங்க எனக்கு எதுக்கு வரம் தரீங்க ? இப்ப வரம் வாங்கிட்டா  அதத் திருப்பி தரணுமா ? " என்றார்.

கடவுளுக்கு சிரிப்பு தாங்கவில்லை. இருந்த போதிலும் " திருப்பி எல்லாம் தரவேண்டியது இல்லை , உனக்கு வேண்டியதைக் கேள் " என்றார்.

" ஒ , அப்படின்னா ஒரு பத்துக்கோடி பணம் குடுங்க " என்றார் செல்வா.

" அந்தப் பணத்தை வச்சு என்ன பண்ணுவ ? பத்து லட்சம் போட்டு கார் வாங்குவியா , பெரிய அரண்மனை காட்டுவியா ? " 

தான் செலவு செய்துவிடுவேன் என்று சொன்னால் எங்கே தனக்கு வரம் கொடுக்காமல் போய்விடுவாரோ என்று நினைத்த செல்வா " இல்ல அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் , பேங்க்ல போட்டிருவேன் " என்றார்.

" பேங்க் ல போடுறதுக்கு உனக்கு எதுக்கு நான் பணம் தரனும் , தரமாட்டேன் " என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். அடடா இப்படி ஆகிப்போச்சே என்று நினைத்த செல்வா வருத்தமாக அன்றைய பொழுதைக் கழித்தார்.

அடுத்தநாள் இரவும் கடவுள் அவரது கனவில் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பொழுது சுதாகரித்துக்கொண்ட செல்வா " எனக்குப் பத்துக் கோடி குடுங்க , அத வச்சு பத்து லட்சத்துல கார் வாங்குவேன் , பெரிய அரண்மனை கட்டுவேன் " என்று சொன்னார்.

" அந்தக் கார்ல நீ போகும் போது யாராச்சும் லிப்ட் கேட்டா கொடுப்பியா ? , அந்த அரண்மனைய வாடகைக்கு விடுவியா ? " என்றார் கடவுள்.

தனக்குக் கொடுத்ததை அடுத்தவருக்கு விடுவேன் என்று சொன்னால் கடவுள் கோபப்படுவாரோ என்று நினைத்த செல்வா " லிப்ட் கொடுக்க மாட்டேன் , வாடகைக்கும் விட மாட்டேன் " என்றார்.

" நீயும் பயன்படுத்த மாட்ட , அடுத்தவனையும் பயன்படுத்த விட மாட்ட! அப்புறம் உனக்கு எதுக்கு வரம் கொடுக்கணும் , தர மாட்டேன் போ "  என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

செல்வா இன்னமும் குழப்பத்தில் உள்ளார் . இன்று இரவு கடவுள் வந்தால் என்ன வரம் கேட்பது என்று.

Tuesday, March 15, 2011

திருப்பூர் எங்க இருக்கு ?

வழக்கம் போல செல்வா அலுவலகம் செல்வதற்காக பேருந்தில் ஏறினார். பேருந்தில் அதிக கூட்டமாக இருந்ததால் செல்வாவும் படியில் நின்று பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

அங்கு வந்த நடத்துனர் " எல்லோரும் டிக்கட் வாங்கிட்டீங்களா ? " என்றார்.

" கொஞ்சம் கால கீழ வச்சா கண்டிப்பா வாங்கிடுவோம் " என்றார் செல்வா.

" என்ன நக்கலா ? " சீட் வாங்கியாச்சா இல்லையா ? " என்று மறுமுறையும் கேட்டார்.கேட்டு விட்டு பின்னாடி திருப்பூர் இருக்குதாப்பா ? " என்று சத்தமாக பேருந்தின் பின்பக்கம் கேட்டார்.

" அதற்கு செல்வா முன்னாடி இருக்குதுங்க " என்றார்.

" முன்னாடி எல்லோரையும் கேட்டுட்டேனே.," என்று தனக்குள்ளே சொல்லிவிட்டு முன்பக்கத்தில் மீண்டும் ஒரு முறை சத்தமாக " முன்னாடி யாருப்பா டிக்கட் வாங்கணும் ? " என்றார்.

பதில் இல்லை. மீண்டும் ஒரு முறை கத்தினார். அப்பொழுதும் யாரும் எதுவும் சொல்லாததால், செல்வாவிடம் " முன்னாடி யார் வாங்கணும் ? " என்றார்.

" தெரியல சார் "

" முன்னாடி திருப்பூர் இருக்குதுன்னு சொன்ன ? "

" ஆமா சார் , நாம இப்ப கோபில இருந்து திருப்பூர் போயிட்டு இருக்கோம் , அப்படின்னா திருப்பூர் நமக்கு முன்னாடி தானே இருக்கு , அதான் சொன்னேன்! " என்றார்.

" நான் டிக்கெட் வாங்கலைன்னு எண்ணிட்டு இருக்கேன் , நீ நக்கல் பண்ணிட்டு இருக்கியா ? " என்றார் கோபமாக.

உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க என்று மனதுக்குள் நினைத்துகொண்டு " சாரிங்க " என்றார்.

Monday, March 14, 2011

செல்வா கேட்ட சந்தேகம்

ஒரு முறை செல்வாவின் ஆசிரியர் அந்த மூன்று அறிவாளிக் குரங்குகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த மூன்று குரங்குகளின் பெயர்களையும் கூறி , அவை எதனை உணர்த்துகின்றன என்பதையும் விளக்கினர்.

" இங்க பாருங்க பசங்களா , இந்தக் மூணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு. இதுல முதல் குரங்கு ஏன் கண்ண மூடின மாதிரி உட்கார்ந்திருக்குன்னு தெரியுமா ? " 

" தெரியாது சார் " என்றனர் மாணவர்கள் ஒரே குரலில்

" முதல்ல ஒரு குரங்கு கண்ண மூடின மாதிரி உட்கார்ந்திருக்கு. அது நமக்கு எத உணர்த்துதுனா தீயவற்றைப் பார்க்காதே அப்படின்னு சொல்லுது. 

இரண்டாவது குரங்கு காத மூடி இருக்கு இல்லையா , அது தீயவற்றைக் கேட்காதே அப்படின்னு சொல்லுது , மூணாவதா வாய மூடி உட்கார்ந்திருக்குற குரங்கு தீயவற்றைப் பேசக்கூடாது அப்படின்னு நமக்கு உணர்த்துது! , இனிமே நீங்களும் இதே மாதிரி கெட்ட விசயங்களப் பாக்கவோ , கேக்கவோ, பேசவோ கூடாது !, எதாச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க " என்றார்.

சட்டென எழுந்த செல்வா " சார் இங்க இருக்குற மூணு குரங்குல நாங்க எந்த குரங்கு மாதிரி இருக்கணும் ? " என்றார்.

" புரியலப்பா, சரியா கேளு " 

" இல்ல சார் முதல் குரங்கு கெட்ட விசயங்களப் பாக்காதுன்னு சொல்லுறீங்க ? அப்படின்னா அது கெட்ட விசயங்கள கேக்கும் , பேசும் அப்படித்தானே , ஏன்னா அது கண்ண மட்டும் தானே மூடி இருக்கு !! " என்றார்.

Saturday, March 12, 2011

கழுதையைப் பார்க்கச் சென்ற செல்வா!

செல்வாவின் ஊருக்கு ஒருமுறை ஞாநி ஒருவர் வந்திருந்தார். ஊரில் உள்ள அனைவரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர்.

செல்வாவும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றார். மேலும் அவரிடம் தனக்கு எதாவது அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றும் அதுவும் இப்பொழுதே கிடைக்க என்ன செய்வது என்றும் கேட்டார். அதற்கு அந்த ஞாநி " போய் ஒரு கழுதையைப் பார் " என்று கூறினார்.

செல்வாவும் கழுதை எங்கு உள்ளது என ஊரில் விசாரித்தார். பக்கத்தில் உள்ள குட்டிச்சுவற்றில் கழுதை இருக்கும் என சிலர் கூறினர்.

கழுதை இருப்பதாகச் சொன்ன இடத்திற்குச் சென்ற செல்வா அங்கே கழுதை பின்பக்கமாக நின்றிருப்பதைக் கண்டார்.கழுதையின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்பதால் அதனது வாலைப் பிடித்து இழுக்கலாம் என்று வாலைப் பிடித்தார். ஆனால் அது சடீரென செல்வாவை பின்னங்கால்களால் உதைத்து விட்டு ஓடத் துவங்கியது. செல்வா இந்த அடியை எதிர்ப்பார்த்திருக்க வில்லை.

அதன் திடீர்த் தாக்குதலில் நிலைகுழைந்த செல்வா இரண்டடி தள்ளி விழுந்தார்.
அந்த வலியில் கழுதையைப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டார். மேலும் அந்த ஞாநி மீது கோபம்கோபமாக வந்தது. 

நேராக ஞானியிடம் சென்றவர் " கழுதையப் பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்றீர் , ஆனால் அது உதைத்து எனக்கு ரத்தம் தான் வருகிறது " என்றார். இதைகேட்ட ஞாநி " அதிர்ஷ்டம் என்பதைத் தேடிப்போனால் இப்படித்தான் , நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம் " என்றார் சாந்தமாக.

ஜப்பான் சுனாமி நண்பர்கள் கவனத்திற்கு 

Friday, March 11, 2011

கணித மேதை செல்வா

இதுவும் செல்வா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவமே.

ஒருநாள் செல்வாவின் வகுப்பறையில் அனைவரும் பத்துக்குள் ஒரு நம்பர் நினைச்சுக்க என்றும் பின்னர் இரண்டு மூன்று வினாக்களை கேட்டு விடை சொல்லி விளையாடிக்கொண்டிருந்தனர்.

வகுப்பில் உள்ள அனைவரும் எதாவது ஒரு கணக்கினை இதுபோல சொல்லி விடை கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு கேள்விகளில் பதில் கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர்.

செல்வாவும் சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தார். இவருக்கு அதுபோன்ற கணக்குகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் வழக்கம்போல " மூணு ஸ்டெப்ல கண்டு பிடிக்கிறது எல்லாம் மேட்டர் இல்ல , நான் முப்பது ஸ்டெப் சொல்லி விடை கண்டுபிடிப்பேன்.! " என்றார் சற்று பெருமையாக. முப்பது ஸ்டெப் என்றால் யாரும் அந்தக் கணக்கை விரும்ப மாட்டார்கள் என்றும் தன்னை கணித மேதை என்று நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணினார் செல்வா. ஆனால் விதி வலியது.

இதைகேட்ட செல்வாவின் நண்பர் " முப்பது ஸ்டெப் சொல்லி விடை கண்டுபிடிக்கிறது சான்சே இல்ல , யாராலையும் முடியாது " என்றார்.

" அதெல்லாம் எனக்கு சப்ப மேட்டர் , நான் கண்டுபிடிப்பேன் " 

" சரி சொல்லு " என்று ஒரு பெரிய பேப்பரை எடுத்துக்கொண்டு செல்வாவின் அருகில் வந்து அமர்ந்தார் அவரது நண்பர். செல்வாவிற்கு தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என்றும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது. இருந்தாலும் எதாச்சும் சொல்லி சமாளிக்கலாம் என்று முடிவெடுத்து 

" பத்துக்குள்ள ஒரு நம்பர் நினைச்சிக்க " 

" நினைச்சிட்டேன்! "

" அத நாளால பெருக்கு , ஆற கூட்டிக்க " என்று ஒரு இருபத்தியேழு ஸ்டெப் வரை சொல்லிக்கொண்டே போனார். அவரது நண்பர்களுக்கு இவன் எப்படி கண்டுபிடிக்கப் போறான் என்ற எண்ணத்தில் இருவரையும் சூழ்ந்து நின்றனர். செல்வாவிற்கோ அச்சம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலும் அடுத்தடுத்து சொல்லிக்கொண்டே சென்றார்.

செல்வாவின் சொன்ன கணக்குகளை அவர் கூட்டியும் பெருக்கியும் போட்டு இருபத்திஎட்டாவது ஸ்டெப் சொல்லும்போது ஒரு முழு காகிதமும் தீர்ந்து போயிருந்தது. வேறு எதையாவது சொல்லி தப்பித்துவிடலாம் என்ற செல்வாவின் எண்ணமும் நண்பர்கள் சூழ்ந்து நின்றதால் கைவிட்டார். ஆனால் நான் சும்மா சொன்னேன் என்று சொல்லியும் இவர்களிடம் தப்பிக்க முடியாது என்ற பயமும் இருந்தது. நண்பரோ இவன் நல்லா மாட்டிக்கிட்டான் என்ற நினைப்பில் அடுத்த ஸ்டெப் சொல்லு என்று நச்சரித்தார்.

செல்வாவிற்கு அப்பொழுது சட்டென ஒரு யோசனை தோன்றியது. இதுவரையிலும் பேயரைந்தது போல் இருந்தவர் இப்பொழுது சற்றே தைரியமாகவும் வெற்றி பெறப் போகிறவர் போலவும் " சரி வந்த விடைகூட 45126 ஆல பெருக்கு " என்றார். அந்த நண்பரும் சிரமப்பட்டு அந்தப் பெருக்களை சொல்லி முடித்தார்.

அடுத்து முப்பதாவது ஸ்டெப். இதை சொல்லி முடித்ததும் செல்வா அவருக்கு வந்த விடையை சொல்லவேண்டும். வகுப்பு மாணவர்கள் அனைவரும் கூர்ந்து கவனித்துகொண்டிருந்தனர். செல்வா மிகவும் அமைதியாக " அந்த விடைய 0 வால பெருக்கு " என்றார்.

அந்த நண்பர் செல்வாவை ஒரு முறை குழப்பமாகப் பார்த்தார். நீ ஜீரோவால பெருக்கு , இப்ப உனக்கு விடை ஜீரோ தான வருது. எப்படி முப்பது ஸ்டெப் சொல்லி கண்டுபிடிச்சேன் பார்த்தியா ? " என்றார் பெருமை பொங்க. அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனையில் விட்டுவிடுகின்றேன்.

( இதுவும் ஒரு உண்மை சம்பவம் )



Thursday, March 10, 2011

செல்வா சொன்ன காரணம்!

ஒரு முறை செல்வாவின் உறவினர் ஒருவருக்கு உடல்நலன் குன்றியதால் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அந்த நண்பரின் உறவினர்களிடம் அவருக்கு என்ன பிரச்சினை என்றும் , எத்தனை நாட்களாக உள்ளது என்றும் விசாரித்துக்கொண்டிருந்தனர். மேலும் அவரது பழக்க வழக்கங்கள் , குடிப்பழக்கம் உள்ளவரா என்றும் விசாரித்தனர்.

ஒருவர் " அவர் கொஞ்ச நாளா அதிகமா தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்டாருங்க , அதுதான் காரணம் " என்றார்.

மற்றொருவர் " கொஞ்ச நாள் முன்னாடி அவருக்கு மலேரியா காய்ச்சல் வந்துச்சு, அப்போ அதிகமா கண்டுக்காம விட்டதால அது சீரியஸ் ஆகி ரொம்ப நொடிஞ்சு போய்ட்டார் , அதுல இருந்து அடிக்கடி இப்படி ஆகிடுது " என்றார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொண்டிருந்தனர். செல்வாவிடமும் மருத்துவர்கள் அவரது உடல்நலக் குறைவிற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா ? என்று கேட்டனர்.

அதற்கு செல்வா " கொஞ்ச நாள் முன்னாடி எங்க ஊர் மாரியம்மன் கோவிலுக்கு பொங்கல் வச்சாங்க , அது சரியா பொங்கல , அதுதான் காரணம்!" என்றார்.

Wednesday, March 9, 2011

விபத்துப் பகுதி

செல்வாவின் ஊரருகில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.செல்வாவின் ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

ஒருநாள் ஊர்க்கார்கள் அனைவரும் அடிக்கடி விபத்து நடக்கும் அந்த இடத்தில் கூடினர். அனைவரும் ஆலோசனை செய்து ஒரு முடிவினை எடுக்கலாம் என்று ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

ஒருவர் இந்த வளைவுப்பகுதியை நேராக மாற்றினால் பெரும்பாலும் விபத்துகள் குறையும் என்றார். ஆனால் அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் யாரும் அவரது கருத்தினை ஏற்கவில்லை.

அங்கே நின்றுகொண்டிருந்த செல்வாவிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. உடனடியாக அங்கு நின்றிந்தவர்களிடம் அங்கே நடப்பட்டிருந்த அறிவிப்புப்பலகையைக் காட்டி " அத மாத்தி எழுதிட்டா விபத்து குறைஞ்சிடும் " என்றார்.

" அதுல என்ன மாத்தி எழுதுறது ? "

" விபத்துப் பகுதி , மெதுவாக செல்லவும் " அப்படின்னு இருக்கறதாலதான் எல்லோரும் வந்து இங்க விபத்து பண்ணிடறாங்க , நாம அத " இது விபத்துப் பகுதி அல்ல " அப்படின்னு எழுதிட்டா விபத்துப் பண்ணுறவங்களுக்கு இது விபத்துப் பகுதின்னு தெரியாதுல , அப்புறம் விபத்துப் பண்ண மாட்டாங்க!! , எப்படி ஐடியா ? " என்றார் பெருமை பொங்க.!

Tuesday, March 8, 2011

சோதித்து அறிந்த செல்வா!

 ஒரு முறை செல்வா மிகவும் கோபமாக இருந்தார்.

அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து அவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. கோபமாக இருந்த செல்வா  அவரது நண்பரை தொலைபேசி அழைப்பை எடுக்கும் முன்பாக சிறிது திட்டினார்.

பின்னர் அவரது அழைப்பை எடுத்து பேசிவிட்டு வழக்கம்போல தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். சிறிது நேரத்திலெல்லாம் அவரது கோபம் அடங்கிவிட்டது.

பின்பு ஒரு நீண்ட யோசனைக்குப் பிறகு அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தனது நண்பர் தனக்கு அழைத்த போது அவரைத் திட்டினோமே , அப்பொழுது அவர் அழைப்பினை எடுத்துவிட்டோமா ? அல்லது எடுப்பதற்கு முன்னர் திட்டிவிட்டு எடுத்தோமா ? என்ற குழப்பம் அவரை வெகுவாக குழப்பியது.

செல்வாவிற்குச் சரியாக தெரியவில்லை. ஒரு வேலை நாம் திட்டியதை அவர் கேட்டிருந்தால் தன்னைப்பற்றி தவறாக நினைத்து விடுவாரே என்று மிகவும் குழப்பமும் , வேதனையும் அடைந்தார். இதற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.

உடனடியாக தனது தொலைபேசியை எடுத்தவர் அந்த நண்பருக்கு அழைத்தார். அவரிடம் " நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணின போது நான் உங்களை நாய் , பன்னாட அப்படின்னு திட்டினேனே அத கேட்டீங்களா? " என்றார். அந்த நண்பர் " இல்ல கேக்கல !! " என்று சொன்னதும் தான் செல்வா நிம்மதி அடைந்தார்.

Monday, March 7, 2011

பேருந்து

இது செல்வா முதன் முதலில் பேருந்துப் பயணம் செய்த போது நிகழ்ந்த சம்பவம்.

செல்வா முதன்முறையாக தனது பெற்றோர்கள் இல்லாமல் பேருந்துப் பயணம் மேற்கொள்ள ஆயத்தமானார். வீட்டில் அனைவரிடமும் விடைபெற்று விட்டு அவரது நண்பர்களிடமும் கூறிவிட்டு பேருந்திற்குச் சென்றார்.

அடுத்தநாள் செல்வாவின் நண்பருக்குச் செல்வா சிறிய விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது.

மருத்துவமனையில் செல்வாவைச் சந்தித்த அவரது நண்பர் , " என்னடா பண்ணுன ? நேத்து நல்லாத்தான இருந்த ? " என்றார்.

" நேத்திக்கு பஸ்க்கு போனேன்ல , அப்ப பஸ் கண்டக்டர் எங்கிட்ட பசங்க எல்லாரும் பின்னாடி தான் ஏறி வரணும் அப்படின்னு சொன்னார். அதனால நான் பின்னாடி திரும்பி நின்னுட்டு பின்பக்கமா கால எடுத்து பஸ்ல வச்சேனா படி எங்க இருக்குதுன்னு தெரியாம கீழ விழுந்திட்டேன்!! " என்றார் சோகமாக.

"பஸ்ல பின்பக்கமா ஏறி வரதுனா பஸ்சுக்குப் பின்னாடி ஒரு படிக்கட்டு இருக்குல அதுல ஏறி வரணும்னு அர்த்தம்! "

" ஒ , பின்னாடி ஏணி ஒண்ணு இருக்குமே , அதுவா ? ஆனா நான் போன பஸ்ல ஏணி இல்லையே ?! "

" உன்ன திருத்தவே முடியாது !! "

Saturday, March 5, 2011

நாளைக்கு என்ன கிழமை?

இது செல்வா பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம்.

ஒருமுறை செல்வா பள்ளி முடிந்து தனது மிதிவண்டியில்  சென்றுகொண்டிருந்தார், அப்பொழுது அவரது நண்பர்கள் அவருக்கு முன்னாள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

செல்வா அவர்களை விலக்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றிருப்பார். அதற்குள் நடந்து வந்துகொண்டிருந்த அவரது நண்பர்களில் ஒருவர் சத்தமாக ஏதோ அவசர செய்தி சொல்லுவது போல அழைத்தார்.

செல்வாவும் எதோ முக்கியமான செய்தியாக இருக்கும் போல என்று சட்டென நின்றார். பின்னர் அவர் அருகில் வந்ததும் " நாளைக்கு என்ன கிழமைடா ? " என்றார் நக்கலாக.

செல்வாவிற்கு புரிந்து விட்டது , இவன் கிண்டல் செய்வதற்காகவே தன்னை  நிறுத்தி இருக்கிறான் என்று.

உடனே செல்வா சட்டென நெற்றியில் அடித்துக்கொண்டு " அட ச்சே , டீச்சர் சொன்னாங்க , நான் டைரி ல எழுதி வச்சேன் , அத கிளாஸ்லையே வச்சிட்டேன். ஒரு நிமிஷம் உன் பேக் குடு .." என்று அவரது புத்தகப் பையை வாங்கியவர் அதில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் கீழே எடுத்து வைத்து விட்டு , அவரது டைரியை எடுத்து எதோ தேடுவது போல பாவனை செய்துவிட்டு " டேய் நாளைக்கு புதன்கிழமை டா , சரி நான் கிளம்புறேன் , புக்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்க " என்றவாறு ஒரு நக்கலான பார்வையுடன் கிளம்பினார்.

அருகில் இருந்த அவரது மற்றொரு நண்பர் அந்த நண்பரிடம் " இது தேவையா உனக்கு ? " என்று கேட்டது செல்வாவின் காதில் விழுந்தது.

(இது உண்மையில் நடந்த சம்பவம் )

Friday, March 4, 2011

எலி மருந்து

இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்.

ஒரு முறை செல்வாவின் தந்தை அவரிடம் அருகில் உள்ள கடைக்குச் சென்று எலிமருந்து வாங்கிவரும்படிக் கூறினார்.

செல்வாவும் சரி என்று கூறிவிட்டு எலிமருந்து வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் செல்வா கடையில் இருந்து திரும்பி வராததால் அவரது தந்தையும் கடைக்குச் சென்று பார்த்துவரலாம் என்று கிளம்பினர். கடையில் ஒரே கூச்சலாக இருப்பதைக் கண்டார்.

செல்வாவின் தந்தை கடைக்குள் நுழைந்ததும் கடைக்காரர் அவரிடம் சற்று கோபமான குரலில் "உங்க பையன தயவு செஞ்சு கூட்டிட்டுப் போய்டுங்க!" என்றார்.

" ஏன் , என்ன பண்ணினான் ? "

" உங்க பையன் கிட்டவே கேளுங்க !! "

" என்னடா பண்ணின ? "

" அப்பா நீங்கதானே எது வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கனும்னு சொல்லிருக்கீங்க ? அதான் எலி மருந்து வாங்குறதுக்கு முன்னாடி ஒரு எலியப் பிடிச்சு அதுக்கு இந்த மருந்த வச்சு அது சாகுதான்னு பார்த்துட்டுதான் வாங்குவேன் அப்படின்னு கேட்டேன் , இது தப்பா ? "

செல்வாவின் அப்பாவிற்கு இப்பொழுது விசயம் புரிந்தது. முன்பு ஒருமுறை செல்வாவிடம் பேனா ஒன்று வாங்கி வரச்சொல்லி அது எழுதாமல் போகவே , எத வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கணும் என்று சொன்னது நியாபகம் வந்தது.

" எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.

Thursday, March 3, 2011

பைத்தியத்துடன் ஒரு நாள்


ஒரு முறை செல்வா தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் ஒருவர் செல்வாவின் வண்டியை நிறுத்தச் சொல்லி சைகை செய்தார்.

செல்வா வண்டியை நிறுத்தியதும் 

" எங்கிட்ட வாங்கின 500 ரூபாய திருப்பி கொடு!! " என்றார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சற்று அந்த ஆளை உற்று நோக்கியதில் அவர் ஒரு பைத்தியம் என்பது விளங்கியது. மேலும் அவர் தற்பொழுது அதிக கோபமாகி செல்வாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

செல்வாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். உடனே ஒரு யோசனை தோன்றியது. தனது சட்டைப்பையில் கையை விட்டு வெறும் கையில் பணம் இருப்பது போல பாசாங்கு செய்து அவரிடம் நீட்டினார்.

செல்வா அப்படிக் கையை நீட்டியதும் அந்தப் பைத்தியம் செல்வாவிடம் இருந்து பணத்தை வாங்குவது போல வாங்கிகொண்டு , செல்வாவைப் பார்த்து 

" லூசா நீ , 500 தரத்துக்கு 1000 தர்ற..! இப்படி ஏமாளியா இருக்காத ?!" என்று கூறிவிட்டு தனது கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த சட்டைப்பையில் பணத்தை வைப்பது போல பாசாங்கு செய்து விட்டுப் போய்விட்டது.

செல்வாவும் அப்பாடி தப்பிச்சோம் என்ற உணர்வுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அடிக்கடி அவர் இவரிடம் கேட்பதும் இவர் அதே போல வெறும் கையை அவரிடம் கொடுப்பதுமாக இருந்தனர்.

ஒருநாள் வழக்கம் போல செல்வாவை வழிமறித்த அவர் இந்த முறை வெறும் 5 ரூபாய் கேட்டார். செல்வாவிற்கு ஒரு யோசனை , இத்தனை நாளும் அதிகமாகப் பணம் கேட்டதால் வெறும் கையைக் காட்டினோம் , இன்றைக்கு  ஐந்து ரூபாய்தானே கேட்கிறார் , அதனால உண்மையாகக் கொடுத்துவிடலாம் என்று யோசித்தவர் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

இதைப் பார்த்ததும் அந்தப் பைத்தியம் மேலும் கோபமாக அந்த நாணயத்தை செல்வாவின் மூஞ்சியில் வீசிவிட்டு " சுக்கு மிட்டாய கொடுத்து என்னைய ஏமாத்தப் பாக்குறியா ? " என்று கூச்சல் போட்டுக்கொண்டே செல்வாவை அடிக்க ஆரம்பித்தது.

செல்வாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவரது அடியிலிருந்து தப்பித்து ஓட முயன்றுகொண்டிருந்தார்.

( பைத்தியம் என்ற சொல்லாடலுக்கு வருந்துகிறேன் )

Wednesday, March 2, 2011

மாம்பலத்தில் பிறந்த குழந்தை


செல்வாவும் அவரது நண்பரும் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவரது நண்பர்,

" நம்ம ரவிக்கு மாம்பத்துல குழந்தை பிறந்திருக்கு , பார்க்க வரியா ? என்றார்.

" அப்படியா , கண்டிப்பா வரணும். இரு வீட்டுக்குப் போனதும் வரேன் " என்று செல்வா அவசர அவசரமாகக் கிளம்பினார்.

சிறிது நேரத்தில் செல்வாவும் சில பத்திரிக்கை நிருபர்களும் வருவதைப் பார்த்தார் அவரது நண்பர்.

" போலாமா ? " என்றார் செல்வா.

" போலாம் , இவுங்க எல்லாம் யாரு , எதுக்கு வந்திருக்காங்க ? "

" இவுங்களும் ,  நம்ம கூட வராங்க , நம்ம ரவி குழந்தை அதிசயக் குழந்தைல , அத பத்தி எழுத வந்திருக்காங்க!!"

" அதிசயக் குழந்தையா ? என்ன சொல்லுற ? "

" ஆமா எல்லாக் குழந்தையும் வயித்துக்குள்ள இருந்து தானே பிறக்கும், இந்தக் குழந்தை மட்டும் மாம்பழத்துக்குள்ள இருந்து பிறந்திருக்குல, அப்படின்னா அதிசயக் குழந்தைதானே!! "

" மாம்பழத்துக்குள்ள இருந்து பொறந்திச்சா ? என்ன ஒளர்ற ? "

" நீதான சொன்ன , நம்ம ரவிக்கு மாம்பலத்துல குழந்தை பிறந்திருக்குன்னு?! "

" பன்னாட , அது மாம்பழம் இல்ல , மாம்பலம். சென்னைக்குப் பக்கத்துல இருக்குற ஒரு ஊரோட பேரு !! ஏன் மானத்த வாங்குற ? " என்று கடிந்தவர் அங்கு வந்திருந்த பத்திரிக்கை நண்பர்களைச் சமாதனப்படுத்தி திருப்பி  அனுப்பினார்.

Tuesday, March 1, 2011

OMR தாள்


செல்வா பள்ளியில் படித்துகொண்டிருந்த போது அவரது தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் செல்வா எந்தப் பரீட்சைக்கும் பயந்தவரல்ல என்பது அவரது அறிவுத்திறமையால் நாம் அறிந்ததே!

இன்னும் சொல்லப் போனால் செல்வா எந்தப் பரீட்சை எழுதப் போகிறார் என்றே அவருக்குத் தெரியாது. சில மாணவர்கள் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கேள்வித்தாளை வாங்கினால் அது என்ன பாடம் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் செல்வாவோ கேள்வித்தாளை வாங்கினாலும் அவர் என்ன பரீட்சை எழுதிகிறார் என்பது அவருக்கோ அல்லது அவரது விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியருக்கோ ஏன் அந்தக் கடவுளுக்கோ கூடத் தெரியாது. ஆனால் கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவதில் செல்வாவை இதுவரை யாரும் மிஞ்சியதில்லை. ஒவ்வொரு பரீட்சைக்கும் குறைந்தது 30 கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவார்.

அதுமட்டும் அல்ல. ஒரு சமயம் அவர் எட்டாம் வகுப்புப் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்பதாம் வகுப்புத் தேர்வு எழுதினார் என்பதே அவரது அறிவுத்திறமையை நமக்கு உணர்த்தும்.

இப்படி இருந்த செல்வாவிடம் ஒருநாள் OMR (Optical Mark Reader) தாள் ஒன்றினைக் கொடுத்து தேர்வு ஒன்று வைக்கப்பட்டது. இதில் கொள்குறி வகையிலான கேள்விகளே இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.

அந்தத் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் செல்வா கூடுதல் விடைத்தாள் கேட்டார்.

இதைப் பார்த்த ஆசிரியர் " OMR சீட் எக்ஸாம்ல எதுக்கு உனக்கு அடிசனல் சீட் ? "

" சார் , அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை , நான் எழுதிடுவேன் , நீங்க அடிசனல் குடுங்க " என்றார்.

" என்னையப் பார்த்தா உனக்கு நக்கலாத் தெரியுதா ? ஒழுங்கா உட்கார். " என்று எரிச்சல் பட்ட ஆசிரியரைப் பார்த்த செல்வா சற்றே அச்சத்துடன் சோகமாக அமர்ந்தார்.

செல்வாவும் பாட்டுப்போட்டியும்


ஒரு முறை செல்வா ஒரு தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களும் அவர்களின் நிறைகுறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

அடுத்து செல்வாவின் முறை. செல்வாவும் தைரியமாக மேடையில் ஏறிப் பாடத்துவங்கினார். செல்வா பாட்டை முடிப்பதற்குள் நடுவர்களில் ஒருவர் போதும் நிறுத்துங்க என்று கூச்சலிட்டார். மேலும் " என்ன பண்ணுறீங்க ? " என்றார் கோபமாக.

" பாட்டுத்தான் பாடுறேங்க ?! "

" இதுக்குப் பேரு பாட்டா ? ஸ்ருதி , டெம்ப்போ , பிட்ச் எதுவுமே வரல , எதுக்கு நீங்க எல்லாம் பாடனும்னு விரும்புறீங்க ? " என்றார்.

" சாரி மேடம் , பிரிப்பர் பண்ணாம வந்திட்டேன் , ஒரு மணிநேரம் கழிச்சு பாடலாமா. ? " என்றார்.

நடுவர்களும் ஒப்புக்கொள்ள செல்வா மேடையிலிருந்து கிளம்பினார்.

சரியாக ஒரு மணிநேரத்திற்குப் பிறகு செல்வா மேடைக்கு வந்தார். கூடவே ஒரு பெண்ணும் வந்தார். 

செல்வாவைப் பார்த்த நடுவர் , " இது ஒருத்தர் மட்டுமே பாடுற போட்டி , எதுக்கு ரண்டு பேரு வந்திருக்கீங்க ? "

" மேடம் இவுங்க பேரு ஸ்ருதி , நீங்க தானே கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்ருதி வரலைன்னு சொன்னீங்க., அதான் கூட்டிட்டு வந்தேன். "

நடுவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு செல்வாவை கோபத்துடன் பார்த்தனர்.

அவர்களின் கோபத்தைப் புரிந்து கொண்ட செல்வா " டெம்போ வரலைன்னு கோபப்படுறாங்க போல " என்று தனக்குள்ள பேசிக்கொண்டு , " மேடம் , டெம்போ வெளிய நிக்குது., அப்புறம் பிட்ச் கேட்டீங்க , நேரு ஸ்டேடியம கேட்டிருக்கேன், நல்ல வேலைக்கு முடிஞ்சதும் சைக்கிள்ள கட்டியாவது இழுத்துட்டு வந்திடுவேன் " என்றார் பெருமை பொங்க.

இதைப் பார்த்த நடுவர்களில் ஒருவர் " இனிமேல் சத்தியமா எந்த போட்டிக்கும் நடுவரா போகவே மாட்டேன் " என்று சத்தியம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் மனதிற்குள் நினைத்துகொண்டார் தன்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவருக்கு திறமை பத்தாது போலும் என்று! ஆனால் அவரைப் பாடுவதற்கு அந்தத் தொலைக்காட்சி நிலையம் இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது சற்றே வேதனையான செய்தி!!

செல்வாவும் கைத்தொழிலும்


செல்வா தனது படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடலாம் என்று முயற்சித்துக்  கொண்டிருந்தார். 

ஒரு நாள் அவரது மாமா செல்வாவின் வீட்டிற்கு வந்தார். செல்வாவிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றார். அதற்கு செல்வா வேலை தேடிக்கொண்டிருப்பத்தாகக் கூறினார். இதைக்கேட்ட அவரது மாமா வேலை கிடைக்கும் வரையில் கையில் இருப்பதைக் கொண்டு சுயதொழில் ஒன்று செய்  என்று அறிவுரை கூறிச்சென்றார்.  

சிறிது நாட்களுக்குப் பிறகு செல்வா அவரது மாமாவைச் சந்திக்கச் சென்றார். மாமாவிடம் தான் புதிதாக தொழில் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு அவர் வாழ்த்தி முதலில் துவங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் இருவரும் செல்வா தொழில் துவங்கியுள்ளதாகக் கூறிய கடைக்குச் சென்றனர். அங்கே முன்னால் ஒரு பெரிய போர்டில் " உங்கள் பல் சிறந்த முறையில் சுத்தம் செய்து தரப்படும் , சொத்தைப் பல்லா , இல்லை பீடிக்கறை உள்ள பல்லா? கவலை வேண்டாம். எங்களிடம் கழட்டிக் கொடுங்கள். விரைவில் சுத்தம் செய்து தருகிறோம்! என்ற அறிவிப்பு இருந்தது.

இதைப் பார்த்த அவரது மாமா சற்றே வித்தியாசமாக " இது என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை " என்றார் .

" மாமா நீங்கதானே அன்னிக்கு கைல இருக்குறத வச்சு ஒரு தொழில் தொடங்கு அப்படின்னு சொன்னீங்க ,அதான் இந்த மாதிரி தொழில் தொங்கினேன் " என்றார் .

இதைக்கேட்ட அவரது மாமா " நான் சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?! " என்றார்.

" நீங்க அன்னிக்கு சொல்லும்போது நான் பல்லு விளக்கிட்டு இருந்தேன் , அப்போ என் கைல TOOTHBRUSH இருந்துச்சு , நீங்க கைல இருக்குறத வச்சு தொழில் தொடங்க சொன்னீங்க. அப்படின்னா அத வச்சு இந்தத் தொழில்தானே பண்ண முடியும் , அதனால உங்க பல்ல கழட்டிக்குடுங்க , முதல் போனி உங்ககைல இல்ல இல்ல உங்க வாய்ல இருந்துதான்!! "

" கைல இருக்குறத வச்சு பண்ணு அப்படின்னா ? ( எதையோ சொல்ல வந்தவர் ) வேண்டாம் சாமி , நான் ஒண்ணும் சொல்லல , ஆள விடு " என்று புலம்பியவாறே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு பெரும் குழப்பம் , அவர் சொன்னதைத் தானே செய்தோம் ஏன் திட்டுகிறார் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். பாவம் அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.

செல்வாவும் தேங்காயின் வாழ்நாளும்


ஒரு முறை செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருன்தனர்.

அப்பொழுது ஒரு தென்னை மரம் பாளை(பூ) விட்டிருந்தது. இதைப் பார்த்த அவரது சகோதரர் இது காயா மாறி பறிக்கிற அளவு வரதுக்கு  இன்னும் ஒரு வருசம் ஆகும் என்றார்.

இதைகேட்ட செல்வா அவ்ளோ நாள் எல்லாம் ஆகாது , ஒரு ஆறு மாசத்துல முத்திடும் என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி அந்தக் குலையை அடையாளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை ஒரு வருடம் கண்காணிக்க வேண்டும் என்றும் , தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஒப்பந்தம் செய்து அடுத்த நாள் அவரது சகோதரர் வந்து பார்த்துச்  சென்றுவிட்டார். அடுத்த நாள் செல்வாவின் முறை. அதற்கு அடுத்த நாள் சென்ற அவரது சகோதரர் அந்தக் குலை காணாமல் போனதால் சற்றே அதிர்ச்சியுற்றார்.

செல்வாவிடம் விசாரித்த போது தினமும் தோட்டம் சென்று வருவது சிரமமாக உள்ளது , அதனால் அந்தக் குலையை வெட்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும் இனிமேல் தோட்டம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதைக்கேட்ட அவரது சகோதரர் " லூசா நீ ? இனிமேல் அது எப்படி வளரும் ?" என்றார் கோபமாக.

" தேங்காய் கூடத்தான் நாம வீட்டுல வச்சிருக்கோம் , அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் கொண்டுபோய் மண்ணுல போட்டாலும் வருதில்ல , அதுமாதிரி வளராதா ? " என்றார் அப்பாவியாக.

செல்வாவும் வரட்டீயும்


ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் ஒருவரும் பேக்கரி ஒன்றிக்கு டீ சாப்பிடலாம் என்று சென்றனர். அப்பொழுது செல்வா நண்பரிடம் " நீங்க டீ குடிப்பீங்கதானே , எனக்கு பால் " என்றார்.

நண்பர் : எனக்கு வரட்டீ ..

செல்வா : அது இங்க கிடைக்குமா ?

நண்பர் : எல்லா டீ கடைலயும் கிடைக்கும்..

செல்வா : ஆனா அது எப்படி தயாரிப்பாங்க..?

நண்பர் : எப்பவும் போலதான் ..

செல்வா : ஆனா குடிக்கும்போது பேட் ஸ்மெல் வராதா ?

நண்பர் : டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது ?

செல்வா : டீ மனம் தான். ஆனா வரட்டி ( கவனிக்க செல்வா வரட்டீ என்ற சொல்லை வரட்டி என்று புரிந்துகொண்டுள்ளார் ) எப்படி மனம் அடிக்கும் ?

நண்பர் : நீ சொல்லுறது எனக்குப் புரியலை.

செல்வா : வரட்டி அப்படின்னா சாணி எடுத்து செவுத்துல ரவுண்டா அடிச்சு வச்சிருப்பாங்களே அதுதானே , படத்துல பார்த்திருக்கேன்..

நண்பர் : அது வரட்டி , இது வரட்டீ!! ஏன்டா இப்படி உயிரை வாங்குற ? உன்கூட டீ குடிக்க வந்தது தப்பா ? இனிமேல் எப்பவாச்சும் என்ன டீ குடிக்க கூப்பிட்டுறாத ? என்று புலம்பியவாறே அவர் செல்வாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

லேண்ட்மார்க்கும் செல்வாவும்


ஒரு முறை செல்வா அவரது நண்பரைக் காண நண்பரின் ஊருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது செல்வாவிற்கு நண்பரின் வீடு தெரியாது என்பதால் செல்வாவை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அழைக்குமாறு கூறியிருந்தார். செல்வாவும் நண்பர் கூறியது  போல பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு அழைத்தார்.

செல்வா : நான் பஸ் ஸ்டாண்ட் வந்திட்டேன்

நண்பர் : அங்கேயே இரு , வந்திடறேன் . நீ  எந்த இடத்துல நிக்கிறனு சரியா சொல்லு.?

செல்வா : அதான் பஸ் ஸ்டாண்ட்ல..

நண்பர் : அது தெரியுது , பஸ் ஸ்டாண்ட்ல எங்கனு சொல்லு , எதாச்சும் லேண்ட்மார்க் சொல்லு.

செல்வா : இரு கேட்டு சொல்லுறேன் ., அருகில் இருந்தவரிடம் இங்க லேண்ட்மார்க் விக்கும்களா ?

அவர் : லேண்ட்மார்க் எல்லாம் விக்காது ,  தொண்டைலதான் விக்கும்!!
( அவரும் செல்வா போன்ற அறிவாளி போலும் )

செல்வா : இங்க விக்காதுன்னு சொல்லுராங்கடா..!!

நண்பர் : உஸ் , லேண்ட்மார்க் அப்படின்னு பக்கத்துல இருக்குற பெரிய கட்டிடமோ , இல்ல எதாச்சும் அடையாளம் சொல்லு.. அது எங்கயும் விக்க மாட்டாங்க!!

செல்வா : இங்க ஒரு பெரிய கட்டிடம் இருக்கு , அதுல கூட பஸ் எல்லாம் வந்து நிக்குது.

நண்பர் : பஸ் ஸ்டாண்ட்னா பஸ் வந்து நிக்கத்தான் செய்யும். வேற எதாச்சும் சொல்லித்தொலை , உசுர வாங்காத.!

செல்வா : இங்க BSNL BROADBAND @ 225 PM அப்படின்னு எழுதிருக்கு.!

நண்பர் : அது நிறைய இடத்துல இருக்கும் , வேற எதாச்சும் சொல்லு.

செல்வா : இங்க ஒரு நோட்டீஸ் ஒட்டிருக்காங்க , NO SALES , NO RISK , NO MARKETING @ 15000 PM அப்படின்னு இருக்கு. இது போதுமா ?

நண்பர் : நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் , நான் உன்னப் பார்த்திட்டேன்.

செல்வா : சரி வா.அருகில் வந்த நண்பரிடம் நான் எப்படி கரட்டா லேண்ட்மார்க் சொன்னேன் பார்த்தியா ?

நண்பர் : நீ சொன்ன லேண்ட்மார்க வச்சு நாலு நாள் ஆனாலும் கண்டு பிடிக்க முடியாது . அங்க ஒருத்தர் அழுதுட்டே போனாரு , என்னனு கேட்டதுக்கு லேண்ட்மார்க் எங்க விக்கும் அப்படின்னு ஒருத்தன் என்னைய கேட்டு கேட்டு தொந்தரவு செஞ்சான் அவன் தொந்தரவு தாங்காம தான் இங்க வந்தேன் அப்படின்னு சொன்னார். அதான் உன்ன கண்டுபிடிச்சேன்.

செல்வா : சரி நீ சொல்லு லேண்ட்மார்க் எங்க இருக்கு ?

நண்பர் : இனிமேல் உன் வாயத்தொறந்து எதாச்சும் கேட்டா கண்டிப்பா எனக்கு நான் அப்படியே போய்டுவேன்..!!!

அருண் + அருண் + செல்வா


சென்ற சனிக்கிழமை தினத்தன்று மொரீசியசில் இருந்து இந்தியா வந்திருக்கும் செல்வாவின் நண்பர் அருண் அவர்ளை சந்திக்கலாம் என்று சுற்றுலா விரும்பி அருண் , கார்த்திக்குமார் மற்றும் செல்வா ஆகியோர் முடிவு செய்தனர். சில பல காரணங்களால் கார்த்திக் வர இயலாமல் போனது. சரி என்று அருண் மற்றும் சுற்றுலா விரும்பி அருண் ஆகியோர் செல்வாவை கோவை வருமாறு அழைத்தனர்.

  செல்வாவும் காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் செல்வா கோவை சென்ற நேரம் 11.௦30. பின்னர் அவர்களிடையே நடந்து உரையாடல்கள்.

அருண் ( சீனியர் ) : ஏன் டா இவ்ளோ நேரம் ? 

செல்வா : தலை சீவ மறந்திட்டேன் , அதான் பாதிவரைக்கும் வந்திட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் தலை சீவிட்டு வந்தேன்.

அருண் (ஜூனியர் ): உனக்கென்ன பொண்ணா பாக்குறோம் , இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. என்று கூறிவிட்டு மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குள் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.அப்பொழுது அருண் ( சீனியர் ) அவர்கள் "வரும்போது ஏன் கால நொடிச்சு நொடிச்சு நடந்து வந்த "? 

செல்வா : காலுல முள் ஏறிடுச்சு, அதான் அண்ணா! "

அருண் : இதுதான் உங்களோட கேட்ட பழக்கம் , இதுவே ஒரு வெள்ளைகாரனுக்கு முள் ஏறினா காலுல முள்ள எத்திக்கிட்டேன் அப்படின்னு சொல்லுவான் , ஆனா நம்ம ஆளுக மட்டும் முள்வந்து இவுங்க மேல ஏறிடுச்சு அப்படின்னு சொல்லுவாங்க.

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?

அருண் (ஜூனியர் ): நீ இப்பத்தான் இப்படியா ? இல்ல எப்பவுமே இப்படியா ? .. என்று கூறிவிட்டு மூவரும் சாப்பிட அஞ்சப்பர் உணவகம் செல்லலாம் என்று முடிவு செய்து அருண் ( ஜூனியர் ) அவர்களது வண்டியில் முதலில் செல்வாவை அழைத்துக்கொண்டு அஞ்சப்பர் உணவகம் இருந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு," இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் , அங்க இரு , நான் போய் அண்ணன கூட்டிட்டு வந்திடறேன் " என்றவாறு கிளம்பினார். சிறிது நேரம் கழித்து வந்த இருவரும் செல்வாவை அஞ்சப்பர் உணவகத்தில் இல்லாததைக் கண்டு அவருக்கு அழைத்தனர். 

அருண் : செல்வா , எங்க இருக்க ? 

செல்வா : அங்கேதான் இருக்கேன் .

அருண் : அதான் எங்க ?

செல்வா : நீங்க இறக்கிவிட்ட இடத்துல .

அருண் : அங்க ஏன் நிக்குற , நான்தான் அஞ்சப்பருக்கு வர சொன்னேன்ல ..

செல்வா : நீங்கதானே , அஞ்சப்பர் வரும்னு சொன்னீங்க , அதான் நாம ஏன் வீணா நடக்கனும்னு இங்கே நின்னுட்டேன் , அஞ்சப்பர இன்னும் காணோம் ?!!!

அருண் : ஐயா சாமி , அப்படி சொன்னது தப்புத்தான் , அப்படியே நேரா வா .. ( இவனெல்லாம் வச்சிட்டு எப்படித்தான் )

பின்னர் மூவரும் அஞ்சப்பர் உணவகத்தில் உணவு வகைகளை ஆர்டர் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது செல்வாவிடம் என்ன வேண்டும் என்று கேட்ட உணவாக ஊழியர் செல்வா சொன்ன பதிலைக்கேட்டு சற்றே அதிர்ச்சியுற்றார். செல்வா தனக்கு நேராக இருந்த மீன்தொட்டியில் வளர்க்கப்பட்ட மீன் ஒன்றை வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அதிர்சிக்குக் காரணம்.

அருண் : மானத்த வாங்காத , அது அழகுக்காக வளர்க்குறது..

செல்வா : சரி வேற எதாச்சும் கொடுங்க .. அதே தொட்டியில் இருந்த வேறு கலர் மீனைக் காட்டினார்.

அருண் : ஐயோ , அந்த தொட்டில இருக்குறது எல்லாமே அழகுக்காக வளர்க்குரதுதான்.

செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ? 

அருண் : இனிமேல் எதாச்சும் பேசினா கண்டிப்பா நான் இப்படியே கிளம்பிப் போய்டுவேன்.. உன்னப் பார்ப்பேன் அப்படின் நினைச்சிருந்தா கண்டிப்பா நான் மொரீசியசுலையே இருந்திருப்பேன். உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?

செல்வாவிற்கு புகழ் அதிகமாக பிடிக்காது என்பதால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

கார்த்திக் , அருண் மற்றும் செல்வா


சென்ற ஞாயிறு அன்று செல்வா அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருணை சந்திக்கலாம் என்று திருப்பூர் சென்றார். மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.

அருகில் இருந்த கார்த்திக் இப்பவே மணி 11 ஆச்சு , இப்ப போனா நாளைக்கு ஷோக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றார். அப்பொழுது நடந்து சுவாரஸ்யமான உரையாடல்கள்.  

அருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.

செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?

கார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.

அருண் : அடேய் , நான் சொன்னா ப்ளாக் கருப்பு இல்ல,"யாருக்கும் தெரியாம வாங்கறது!" 

செல்வா : யாருக்கும் தெரியதுனா , நமக்கு மட்டும் எப்படித் தெரியும் ? 

அருண் : படம் பார்க்கப் போற விசயத்த இத்தோட நிறுத்திக்குவோம் , இனிமேல் அதப் பத்தி பேசவேண்டாம் , என்னால முடியாது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விரைந்தனர். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த ஒரு படத்தினைப் பார்த்த அருண் " அது பிக்காசோ படம் " என்றார்.

செல்வா : அது என்ன பழம் ? 

அருண் : பிக்காசோ பழம் இல்லை , அவர் ஒரு டிராயர்!

செல்வா : எங்க தாத்தா போட்டிருக்காரே , அதுவா ? 

அருண் : இனிமே ஒரு வார்த்தை பேசினா கூட நான் அப்படியே எந்திரிச்சு ஓடிருவேன். கார்த்தியை நோக்கியவாறு இவனெல்லாம் எதுக்கு கூப்பிட்ட ? உசுர வாங்குறான்!!

அதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.